வியாழன், 16 டிசம்பர், 2010

ஆருத்ரா!

சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம்பற்றிச் சிறப்பிதழ்கள்; ஆன்மிகத்தைப் பரப்பி மக்களை மொட்டை அடிப்பதற்கென்றே தான் பல ஏடுகள் இருக்கின் றனவே!
அது என்ன ஆருத்ரா? மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி நாளில் சிதம்பரத்தில் நடை பெறும் விழாவாம் இது. ஆருத்ரா அல்லது திருவாதிரை நட்சத் திரம் சிவனுக்குரியதாம். இந் நாளில் இரவு ஆரம்பித்து மறு நாள் காலைவரை அபிஷேகம் நடக்குமாம். (மூச்சுத் திணறப் போகிறது - ஜாக்கிரதை!)
மக்கள் மத்தியிலிருந்து பக்தி ஒரு சிறு நொடியும் அக லாமல், உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக எந்தத் தெருப் புழுதியையாவது செய்து கொண்டே இருக்கவேண்டுமே!
மனிதன் தனக்குக் கற் பித்துக் கொண்டதையெல்லாம் கடவுளுக்கும் கற்பித்துவிட் டான்; காரணம் அந்தக் கடவு ளைக் கற்பித்ததே மனிதன் தானே!
பஞ்சப் பூதங்களுடன் (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) சேர்த்து லிங்க வடிவத்தில் சிவனை வழிபடு கிறார்களாம். அதில் சிதம்பரம் நடராஜன் என்பவர் ஆகாய வடிவத்தில் இருக்கும் கடவுளாம்.
108 வகை நடனங்களில் கரை கண்டவராம். காளிக்கும் இவருக்கும் நடனப் போட்டி ஏற்பட்டதாம். காளி சற்றும் சளைக்காமல் ஆடினாளாம்.
ஆண்களுக்கே உரிய குயுக்திப் புத்தியால் இடது காலை தலைக்குமேல் தூக்கி ஆடிக் காட்டினாராம் நடராஜன்.
பெண்ணாகிய காளி காலைத் தலைக்குமேல் தூக்கி ஆபாசமாக ஆடமாட்டாள் அல்லவா! இந்தக் கீழ்த்தரமான ஆபாச நடவடிக்கையால் நட ராசன் நடனத்தில் வெற்றி பெற்றுவிட்டாராம். இப்படி அவர் ஆடியதற்குப் பெயர் ஊர்த்துவ தாண்டவமாம்!
இதுபோன்ற கேவலங் களுக்குத் தத்துவார்த்தம் கற்பித்து விடுவார்கள். அப் பொழுதுதான் மக்கள் சிந்திக்க மாட்டார்கள். இதிலும் அப்படித் தான்; நிலவுலகில் உள்ள உயிர்களுக்கு அருள்பாலிப்பது போலவே, வானுலகத்தவர்க்கும், அருள் செய்வதற்கென்றே ஊர்த் துவத் தாண்டவம் ஏற்பட்டதாம்.
இந்த நடராஜன் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்த போது அவரது உடுக்கிலிருந்து ஹயவரடு-ஹல் முதலிய 14 வேறு வேறான சப்தங்கள் வெளிவந்தன. அவற்றை முறைப் படுத்தி பாணினி ரிஷி சமஸ் கிருதத்தை உண்டாக்கினான். (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி - கல்கி, 25.6.1972) தெய்வ மொழி என்பது இதுதானோ - என்னே சாமர்த்தியமான புளுகு!
மொழி எப்படி தோன்று கிறது என்ற அறிவியல் சிந் தனைக்கு இது எதிரானது அல்லவா!
எல்லாம் பார்ப்பனர்களின் கைசரக்கே - ஆருத்ரா தரி சனம் என்கிறபோது அறிஞர் அண்ணாவின் சந்திரோதயம் நாடகம் நினைவிற்கு வருகிறது - இதோ ஒரு காட்சி!
வெள்ளையன்: சாமி தானுங்க எசமான் இருக்கு.
மாயேந்திரன்: இங்கே வாடா (வருகிறான் பக்கத்தில்) ஒரு காலைத் தூக்கடா, கையை இப்படி வைடா. (நடராஜர் சிதம்பரத்திலிருப்பதுபோல் நிற்கச் செய்கிறார்) நிற்கிறான் வெள்ளை. பத்திரிகை படித்துக் கொண்டிருக்கிறார் மாயேந் திரன் (வெள்ளை காலை ஊன் றுகிறான்). காலைத் தூக்கச் சொல்லுகிறார் மாயேந்திரன். (மறுபடியும் காலைத் தூக்கி சிறிது நேரம் நின்றுவிட்டு காலை ஊன்றுகிறான்) ஏய்! ஏண்டா ஊன்றுன? தூக்குடா காலை என்கிறார் மாயேந்திரன்!
வெள்ளை: கால் வலிக்கு துங்க எசமான்
மாயேந்திரன்: ஏண்டா, ரெண்டு நிமிஷம் நிக்கறதுக்கே கால் வலிக்குதுன்னு சொல்றீயே - அப்ப தூக்கின காலை இன்னும் கீழே ஊன்றாமே இருக்குதடா?
வெள்ளை: எங்கே எசமான்?
மாயேந்திரன்: சிதம்பரத் திலே!
வெள்ளை: அது கல்லு எசமான்!
பக்தன் வாயாலேயே அண்ணா இப்படி சொல்ல வைத்தாரே - அதுதான் அண்ணா!
ஆருத்ரா தரிசனத்துக் காகக் காத்துக் கிடக்கும் பக்தர்கள் சிந்திப்பார்களாக!
- மயிலாடன்

- http://www.viduthalai.periyar.org.in/20101216/news16.html