வியாழன், 16 டிசம்பர், 2010

செய்தியும் சிந்தனையும்!

செய்தியும் சிந்தனையும்!
கடவுளுக்குக் குளிர் எடுக்கிறதா?
மனிதன்தான் கடவுளைப் படைத்தான். மனிதன் தன் வாழ்வில் நடக்கும் அத்தனையையும் தன்னால் உருவாக்கப்பட்ட கடவுள்கள்மீதும் திணித்தான்.
கல்யாணம் கட்டிக் கொள்வது, பிள்ளை பெற்றுக் கொள்வது என்பது போன்றவையல்லாமல் தம்மிடம் உள்ள எல்லாப் பழக்கவழக்கங்களையும் கூட தனது படைப்பான கடவுளிடத்திலும் குடியமர்த்தி விட்டான்.
ராபர்ட் ஜி இங்கர்சால் கடவுள்பற்றிக் கூறியிருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது.

மனிதன் கடவுளை தன்னைச் சுற்றியுள்ள சாதனங்களைக் கொண்டு படைத்திருக்கிறான். அனேகமாக அவற்றைத் தன்னைப் போலவே படைத்து, அவைகளுக்குக் கால், கைகளையும், கண், வாய், மூக்கு, செவிகளையும் தந்திருக்கிறான். ஒவ்வொரு தேசத்தினரும் தங்கள் தெய்வங்களையும், பிசாசுகளையும், தங்கள் மொழியைப் பேசும் படியாகவும், இன்னும் வரலாறு, பூகோளம், வானியல் இன்னோரன்ன காரணா காரியங்கள் சம்பந்தமான விஷயங்களில் தங்களுடைய தவறுதலான எண்ணங்களையே அவைகள் வாயிலிருந்து வரும்படியாகவும் செய்திருக்கின்றனர். எந்தக் கடவுளேனும் தன்னைப் படைத்த மக்களைவிட ஒருபடி அதிபுத்திசாலித்தனமாக இருந்தது என்று சொல்வதற்கில்லை. ஆப்பிரிக்கத் தேசத்து நீக்ரோவர் தங்கள் தெய்வங்களை இருண்டு கருத்த தேகமும், வளைந்து சுருண்டமயிரும் உடையனவாகச் செய்திருக்கின்றனர்.
மங்கோலியர் அவைகளுக்கு மஞ்சள் நிறத்தையும், கருத்ததும் - பாதாம் பருப்புப் போன்றதுமான கண்களையும் கொடுத்திருக்கின்றனர் - சீதளமிகுந்த வட தேசத் தெய்வங்களோ தங்கள் முகங்களைக் கம்பளியால் போர்த்திக் கொண்டுள்ளன. உஷ்ணப் பிரதேசங்களிலோ தெய்வங்கள் அம்மணமாகக் காட்சியளிக்கின்றன. இவைகளையே சாதாரண மக்கள் உண்மையெனத் தெய்வங்களாக நம்பி, இப்பொம்மைகளுக்கும், சிலைகளுக்கும் - தங்கள் பலிகளையும், ஆராதனைகளையும், வணக்கத்தையும் செலுத்துகின்றனர் என்கிறார் இங்கர்சால்.
இந்தப் பீடிகை எதற்கு? காரணம் இல்லாமலா கருப்புச் சட்டைகள் தன் பேனாவைத் திறக்கும்?
கடவுள் சிலைகளுக்குக் கம்பளி ஆடை எனும் தலைப்பில் ஒரு செய்தி:
ஒரிசா மாநிலம் பூரி நகரில் தற்போது கடுமையான குளிர் வாட்டுகிறது. இதைத் தொடர்ந்து அங்குள்ள ஜெகநாதர் ஆலயத்தில் உள்ள ஜெகநாதர், பாலபத்ரா, தேவி சுபத்ரா ஆகிய சாமி சிலைகளுக்கு மாலை நேரத்தில் கம்பளி ஆடைகளை கோவில் நிருவாகத்தினர் அணிவிக்கிறார்கள்.
அதைத் தவிர, ஒவ்வொரு நாளும் சுவாமி சிலைகளுக்கு ஒவ்வொரு நிறத்தில் ஆடைகள் அணிவிக்கிறார்கள். அந்தந்த நாளுக்கு உரிய நட்சத்திரப் பலனுக்கு ஏற்ப வண்ண ஆடைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
புதன் கிழமை நீல நிறத்திலும், வியாழக்கிழமை மஞ்சள் நிறத்திலும், வெள்ளிக்கிழமை வெள்ளை நிறத்திலும், சனிக்கிழமை கறுப்பு நிறத்திலும் கம்பளிகள் அணிவிக்கப்படுகின்றன.
கடவுள் சிலைகளுக்கு வண்ணக் கம்பளி ஆடைகளை அணிவிப்பதால், பக்தர்களும் அதே வண்ணத்தில் ஆடைகளை அணிந்து கோயிலுக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர்.
(தினத்தந்தி, 15.12.2010, பக்கம் 8)
பக்தர்களே, பக்தர்களே! இப்பொழுது கர்னல் ஜி இங்கர்சால் கூறிய கருத்தோடு இணைத்துப் பாருங்கள் - உங்களுக்குக்கூட ஒரு உண்மை விளங்கிவிடும்.
மனிதன் - அவன் சுற்றியுள்ளவைகள், இவைதான் கடவுள் உருவங்களிடத்திலும் காணப்படுவதால், இந்தக் கடவுள்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை சமாச்சாரம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறதா - இல்லையா?
கடவுள் மனிதனைக் கற்பிக்கவில்லை; மனிதன்தான் தன்னைப் போலவே கடவுளைக் கற்பித்து இருக்கிறான் என்பதை இன்னும் கூடவா விளங்கிக் கொள்ள முடியவில்லை?
இன்னொன்றையும் கவனிக்கத் தவறக்கூடாது.
கடவுள் சர்வ சக்தி வாய்ந்தவர் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, அந்தக் கடவுள் குளிரைத் தாங்கமாட்டார் என்று கருதி கடவுளுக்குக் கம்பளி ஆடையைப் போர்த்தி உள்ளார்களே - இதன் பொருள் என்ன?
ஒரு குளிரைக்கூடத் தாங்கமாட்டாதவன்தான் கடவுளா? இவன்தான் பக்தர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்கும் பலவானா - பகவானா?
கடவுளைக் கற்பித்தவன் மனிதன்தான். அவன் முட்டாளாக இருந்த காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சமாச்சாரம் என்று தந்தை பெரியார் கூறியதை ஒரே ஒரு கணம் சிந்தியுங்கள் - உங்களின் மூடத்தன முகமூடி கழன்று விழுந்துவிடும்!
- கருஞ்சட்டை -

- http://www.viduthalai.periyar.org.in/20101216/news22.html