சனி, 15 பிப்ரவரி, 2020


01.09.1991 அன்று வடஆர்க்காடு அம்பேத்கர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக எழுத்தாளர் மன்ற அமைப்பாளர் சோலையார்பேட்டை கவிஞர் குயில்தாசன்_அற்புதம்மாள் ஆகியோரின் செல்வி அன்புமணிக்கும், காவேரிப்பட்டணம் வையூர் சின்னப்பிள்ளை அம்மாள்_வேடி ஆகியோரின் செல்வன் வே.ராசாவுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா கிருட்டினகிரி சாமுண்டீஸ்வரி திருமண மண்டபத்தில் என் தலைமையில் நடைபெற்றது. விழாவில் அனைவரையும் தருமபுரி மாவட்ட தி.க. செயலாளர் மு.துக்காராம் வரவேற்றுப் பேசினார்.
மணமக்களுக்கு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் நிறைவேற்றி வைத்து மணமக்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினேன். “இன்றைக்கு இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய நிலையில், ஒரு சங்கடம் இருந்து கொண்டிருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மணமகளுடைய சகோதரன் இந்த மணவிழாவிலே கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு இல்லையே என்கிற சங்கடம் உங்களுக்கு ஏற்பட்டிருப்பது இயல்பு.’’ அவரும் தன்னுடைய தந்தைக்கு ஒரு கடிதத்தைத் துணிச்சலோடு எழுதியிருக் கின்றார்கள்: “நான் வரவில்லை என்பதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள். நீங்கள் எல்லாம் அமைதியாக இருந்து மகிழ்ச்சியாக இந்த மணாவிழாவினை நடத்துங்கள்’’ என்று சொல்லியிருக்கின்றார்கள். நிச்சயம் இதுபோன்ற இலட்சியத்தை வைத்திருக்கின்ற குடும்பங்களுக்கு துன்பங்கள் வருவது என்பது இயல்பு. அதை நீங்கள் பகுத்தறிவுவாதி என்கிற முறையிலே _ சரியான கோணத்திலே எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக நீங்கள் அளவுக்கு மீறி வேதனை அடைய வேண்டிய அவசியமில்லை.
நான் அன்புமணி செல்வத்திற்கு சொல்லுகின்றேன், “உங்களுடைய சகோதரன் உங்களோடு - நம்மோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், இங்கே இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான சகோதரர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த இயக்கத்தை அடக்குவதற்கும், அழிப்பதற்கும் எத்தனையோ பேர் வந்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. இந்த இயக்கம் அடக்கப்பட வேண்டும் என்று சொன்னவர்கள், நீண்ட காலம் எங்கே இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாத சூழ்நிலைகளிலே _ எத்தனையோ அடக்குமுறைகளை இந்த இயக்கம்  சந்தித்துள்ளது. இந்த இயக்கத்திலே ரகசியம் கிடையாது’’ என்று எடுத்துரைத்தேன்.
தருமபுரி மாவட்ட தி.க. தலைவர் எஸ்.கே.சின்னப்பன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை ஆகியோர் மணமக்களைப் பாராட்டி வாழ்த்துரை நிகழ்த்தினார்கள்.
விழாவில் என் துணைவியார் மோகனா,  கர்நாடக மாநில தி.க. செயலாளர் பாண்டியன், பொருளாளர் ரெங்கநாதன், பெரியார் மாவட்ட தி.க. துணைத் தலைவர் சிற்றரசு, ஈரோடு நகர தி.க. செயலாளர் கருணாகரன், சண்முகம், பழனி புள்ளையண்ணன், கெடார் சு.நடராசன், சேலம் ப.கந்தசாமி, மாநில அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், வடசேரி ஜெகதீசன், கே.கே.சின்னராசு, மாவட்ட தி.க. இளைஞரணி தலைவர் கே.கே.சி.வீரமணி, வடசென்னை மாவட்ட தி.க. தலைவர் க.பலராமன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள், தோழியர்கள்,  பொதுமக்களும் பெருந்திரளாக மாநாடு போல் கலந்து கொண்டார்கள்.
10.9.1991 அன்று மேலத்தஞ்சை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் ராசகிரி கோ.தங்கராசு_அஞ்சம்மாள் ஆகியோரின் செல்வன் பூவானந்தம் அவர்களுக்கும், மதுரையைச் சார்ந்த பொ.பிச்சை_ முத்துலெட்சுமி ஆகியோரின் மகளும் மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பி.வரதராசன் அவர்களுடைய சகோதரியுமான மதுரவள்ளிக்கும், அதேபோல மேலத்தஞ்சை மாவட்ட தி.க. செயலாளர் ராசகிரி கோ.தங்கராசு_அஞ்சம்மாள் ஆகியோரின் செல்வி திலகவதிக்கும் புதுக்கோட்டையைச் சார்ந்த பெரியதம்பி_ கோகிலத்தம்மாள் ஆகியோரின் செல்வன் ஞானசேகரன் அவர்களுக்கும் நடைபெற்ற வாழ்க்கை ஒப்பந்த விழாவில் கலந்துகொண்டு வாழ்க்கை ஒப்பந்தம் நிறைவேற்றி மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து உரை நிகழ்த்தினேன்.
சுயமரியாதையோடு வாழ்வது, பகுத்தறிவோடு தேவையற்ற ஆடம்பரத்தை ஒதுக்குவது, சிக்கனத்தோடு வாழ்வது இப்படிப்பட்ட நெறிமுறைகளை தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கினார்கள். அந்த வகையில் சுயமரியாதையோடு மகிழ்ந்திருங்கள்; மற்றவர்களுக்குத் தொண்டு செய்யுங்கள் என்று எடுத்துக் கூறினேன்.

-தமிழர் தலைவர் ஆசிரியர்அவர்கள் எழுதும் தொடர் - இயக்க வரலாறான தன் வரலாறு(240)   உண்மை இதழ்,
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் கழத்தில் அரும்பெரும் பணியாற்றிய சுயமரியாதை சுடரொளி கெடார் சு.நடராசன் 12ஆம் ஆண்டு நினைவு நாள் (17.2.2020)