வியாழன், 9 டிசம்பர், 2010

உலக மயமாகிறார் பெரியார்! - தமிழர் தலைவருக்கு பால் கர்ட்ஸ் வாழ்த்து

உலக மயமாகிறார் பெரியார்!
ஜாதியற்ற ஒரு நிலையை அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடையே உருவாக்க
பெரியார் கொள்கைகளைப் பரப்பிட முடிவு
தமிழர் தலைவருக்கு பால் கர்ட்ஸ் வாழ்த்து

வாஷிங்டன், டிச. 8- தந்தை பெரியார் கொள்கைகளை அமெரிக்காவில் பரப்பிடவும், அமெரிக்காவாழ் இந்தியர் களிடையே ஜாதிகள் அற்ற ஒரு சமூகத்தை உருவாக்கவும் அமெரிக்காவில் கூடிய அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். பெரியார் இயக்கத்தின் கொள்கைகளை எடுத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் பிரச்சாரம் செய்யவும், அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே ஜாதிகள் அற்ற ஒரு சமூகத்தை உருவாக்கவும், அமெரிக்கா நாட்டின் வாஷிங்டன் டி.சி.நகரில் கடந்த 2010 டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற உலக அறிவியல் மற்றும் மனிதநேய மதிப்பீடுகள் நிறுவனத்தின் முதல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
டாக்டர் சோம. இளங்கோவன்
இக்கூட்டத்தில் சிகாகோ பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன், திரு. அரசு செல்லையா, மற்றும் பேராசிரியர் என். இன்னையா ஆகியோர் சகோதர அமைப்புகளின் பிரதிநிதிகளாக இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும், திருமதி சோம இளங்கோவன் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட திருக்குறள் செய்தியைப் பரப்பவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்திற்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விண்வெளி அறிவியலாளர் டாக்டர் ஸ்டூவர்ட் ஜோர்டான் தலைமை தாங்கி நடத் தினார்.
2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்திட்டங்கள்பற்றி முழுமையாக இக்கூட்டத்தில் திட்டமிடப்பட்டது. குழந்தைகளுக்கு ஒழுக்கநெறிக் கல்வியை எவ்வாறு போதிப்பது என்ற பொருளை ஃப்ளோரிடா மாகாணத்தின் தம்பாவில் நடைபெற உள்ள முதல் மாநாட்டில் எடுத்துக் கொண்டு விவாதித்து முடிவெடுப்பது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. இந்த மாநாட்டிற்கு இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட அனைத்து நாடு களில் இருந்தும் புகழ்பெற்ற பேச்சாளர்கள் அழைக்கப்படு வார்கள். இந்த புதிய நிறுவனத் தின் புதிய இணையதளம் பற்றியும், நிறுவனத்தின் கட்டமைப்பு மற்றும் எதிர் காலத் திட்டங்களுக்கான நிதிஅம்சங்கள் பற்றியும், ஜேக்பெல்ட், ஜெஸ்ஸி, டோனி பெல்ட் ஆகியோர் சோதனைகள் மூலம் எடுத்துக் கூறி விளக்கினார்கள்.
பேராசிரியர் பால் கர்ட்ஸ்

இந்த இயக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான நிதியினைத் திரட்டுவதற்கான பல்வேறு வழிகளை பேராசிரியர் பால் கர்ட்ஸ் அவர்கள் கண்டுபிடித்துக் கூறினார்.
இக்கூட்டத்தின் பல்வேறுபட்ட நிலைகளில் மேற் கொள்ளப்பட்ட விவாதங்களில் டாக்டர் சோம. இளங் கோவன், திரு. அரசு செல்லையா மற்றும் பேராசிரியர் என். இன்னையா ஆகியோர் தீவிரமாகப் பங்கேற்றுத் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.
மதச்சார்பற்ற மனிதநேயக் கொள்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஊடக, அரசியல் மற்றும் பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் தலைவர்கள் ஆகி யோருடன் தொடர்பு கொள்வது பற்றி இந்த நிறுவனத்தின் பொதுமக்கள் தொடர்புக்குப் பொறுப்பாக உள்ள நாதன் புப் என்பவர் விரிவாக விளக்கிக் கூறினார்.
இந்த புதிய அறிவியல் மற்றும் மனிதநேய மதிப்பீடுகள் நிறுவனத்துடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ள இந்திய மறுமலர்ச்சி நிறுவனத்தின் பி.டி.சர்மா மற்றும் ஆசாம் பாஞ்சோலி ஆகி யோரின் வாழ்த்துச் செய்தி களை இக்கூட்டத்தில் டாக்டர் என். இன்னையா தெரிவித்தார்.
தீவிர மனிதநேய சங் கத்தின் சார்பில் இந்தப் புதிய நிறுவனத்துடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள விருப் பம் தெரிவித்து வினோத் ஜெயின் அனுப்பிய செய்தி யும் இக்கூட்டத்தில் தெரி விக்கப்பட்டது.
இவ்வாறு இந்தப் புதிய நிறுவனத்துடன் பல்வேறு அமைப்புகள் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முன் வந்துள்ளதைக் குறித்து பேராசிரியர் பால்கர்ட்ஸ், டாக்டர் ஸ்டூவர்ட் ஜோர்டான், திருமதி டோனி பெட்ட் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், இந்த அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றத் தாங்கள் தயாராக இருப்பதாக உறுதியளித்தனர்.
தமிழர் தலைவருக்கு வாழ்த்து
அனைத்துலக பகுத்தறிவாளர் கழகம், அனைத்துலக பகுத்தறிவு மற்றும் மனிதநேயக் கழகம் ஆகிய அமைப்புகளின் இணையதளங்களை இப்புதிய அறிவியல் மற்றும் மனிதநேய மதிப்பீடுகள் நிறுவனத்தின் இணைய தளத்துடன் இணைக்க ஜேக் பெல்ட் உறுதியளித்தார்.
பெரியார் அமைப்பு இந்தப் புதிய நிறுவனத்துடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டது பற்றி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்ட பேராசிரியர் பால் கர்ட்ஸ் அவர்கள் இக்கூட்டத்தின்மூலம் தனது வாழ்த்து களை டாக்டர் கி.வீரமணி அவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டார்.

- http://www.viduthalai.periyar.org.in/20101208/news02.html