சனி, 18 டிசம்பர், 2010

ஞானசூரியன்-தொடர்-20

எப்படியென்றால், அடிப்பதற்குக் கையேனும், கோலேனும் ஓங்கினால் கையை வெட்டுதல்; காலால் உதைக்க முயன்றால் காலை வாங்குதல்; ஒரே ஆசனத்தில் இருக்க விரும்பினால், பிருஷ்ட பாகத்தை அரிந்துவிடவோ, சூடுபோட்டு நாட்டை விட்டுத் துரத்தி விடவோ செய்தல்; எச்சில் உமிழ்ந்தால், உதடுகளைத் துண்டித்துவிடுதல்; பிராமணன் அருகிலிருக்க மலத்தையோ, மூத்திரத்தையோ விட்டால் அந்த அங்கங்களைத் துண்டித்து விடுதல்; தலைமயிர், தாடி, கழுத்து விருஷணம் (விரைக்கொட்டை) இந்த அங்கங்களைப் பற்றி இழுத்தால், கையை வெட்டுதல் -இவ்வகையான தண்டனைகள் விதிப்பதோடு, சூத்தி ரனைப் பிராமணன் துன்புறுத்தினால், சூத்திரன் சரீரத்தில் தோலைப் பிளந்தால், நூறுபொன் அபராதமும், தசைக்குக் கேடு நேர்ந்தால், ஆறு நிஷ்கம் (ஒருவகை நாணயம்) அபராதமும், தசைக்குக் கேடு நேர்ந்தால், ஆறு நிஷ்கம் அபராதமும் விதித்தல், எலும்புக்குக் கேடுவரின் நாட்டை விட்டுத் துரத்தல் முதலியன செய்யத்தக்கன.
இந்தியாவின் பழைய நற்காலம் நமக்கு ஏற்பட வேண்டும். அதன் பொருட்டு ஹோம்ரூல் வேண்டும் என்கிற திலகர் முதலிய தலைவர்களை ஆதரிக்கிற நம்மவர்கள மேற்குறித்த விஷயங்களை ஞாபகப்படுத்த கடமைப்பட்டிருக்கிறார்கள். ஹோம்ரூல்வாதிகளின் அரசாட்சி மனுவின் அரசாட்சியே. மனுவின் ஆட்சியில் சூத்திரனுடைய நிலையை இன்னும் கேளுங்கள்.
1. நீதியானதால் அதனையே தருமச் சட்டம் என்று கூறுகின்றனர். ஆ! கொடுமை! சூத்திரனை எவ்விதத் துன்பங்களும் செய்யலாம். அதைப் பார்த்தும், கேட்டும் பொறுக்க முடியாத சூத்திரர்கள் யாதாகிலும் சொல்லவோ, தடுக்கவோ செய்தால், அதற்குள்ள தண்டனைகள் ஜனங் களுக்குத் தெரியும் பொருட்டு இங்குக் கூறினேன். இவ்வாறே ரோம் அரசாட்சி நடந்தபோது, யெஹூதிகளும் ரோமன் ஜனங்களும் கலந்து, அந்நாட்டுக் குடிகளை வதைத்து வந்தனர். அத்தருணத்தில் யேசு என்பவர் இந்தியாவில் கல்வி கற்றுத் திரும்பிச் சென்று ஆங்குப் புத்தமதம் போதித்த காரணத்தால், அவரையும் இக்கொடுங் கோல் சட்டமும், இச்சட்டத்தாருடைய மதமும் வேரோடழிய வேண்டியது.
சூத்ரந்து காரயேத் தாஸ்யம் க்ரீதமக்ரீ தமேவவா;
தாஸ்யாயைவ ஹிஸ்ருஷ்டோஸௌப்ராஹ்
மணஸ்ய ஸ்வயம்புவா (மனு)
பொருள்: கூலி கொடுத்தாகிலும், இல்லாவிடிலும் சூத்திரனை வேலை வாங்கலாம். ஏனென்றால், பிராமணனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டே இவன் ஸ்வயம்பூ (பிரம்மன்) வினால் சிருஷ்டிக்கப்பட்டான். பின்னும்,
நஸ்வாமினா நிஸ்ருஷ்டோபி சூத்ரோதாஸ்யாத் பிமுச்யதே;
நிஸர்க்கஜம் ஹிதத்தஸ்ய கஸ்மாத்தஸ்மாத போஹதி (மனு)
பொருள்: எஜமான் விட்டுவிட்டாலும் சூத்திரனின் அடிமைத்தனம் அவனை விட்டொழியாது. இது 1இயற்கையானதால் எங்ஙனம் ஒழியும்?*
சக்தேனாபிஹி சூத்ரேண
நகார்யோதன ஸஞ்சய
சூத்ரேண தனமா ஸாத்ய
பராஹ்மணானேவ பாததே (மனு)
பொருள்: பொருளீட்டத் திறமையிருந்தாலும், சூத்திரன் அங்ஙனம் செய்யலாகாது. சூத்திரனுக்குப் பொருள் சேர்த்தால், பிராமணன் துன்புறுவான்.
1.இயற்கையென்று நூல் கூறினும், அடையாள மொன்றும் காணாததனால், எல்லோரும் ஒரேவித உரிமையைப் பெறத்தக்க மனிதர்களேயன்றிச் சூத்திர னென்று தனிப்பட்ட ஒருவகையினர் இல்லையென்பது திண்ணம். சமஸ்காரம் செய்து கொண்டால் யாவரும் துவிஜரே. இது சூத்திரனுக்குக் கூடாதாம்.
*. ஹே, பார்ப்பனரே! இன்னும் சில காலம் போக ஆங்கில அரசாட்சியார், கிறிஸ்தவர்கள் ஆனால் மட்டும் உத்தியோகமும் இங்கிலீஷ் படிப்பும் கொடுக்கப்படும் என்று விதிவெளிப்படுத்தி 7 கோடி ஜனங்கள் அவ்விதிப்படி உத்தியோகத்திற்கும், படிப்புக்கும் ஆசைப்பட்டுக் கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்தபின், கிறிஸ்துவ மதத்திற்கு இனிமேல் இந்துக்களைச் சேர்ப்பதில்லை யென்று மற்றொரு ஆக்டை பாஸ் பண்ணினால், இந்த மனு உன்னையும் அப்படியே செய்துவிடும். யூரோப்பியன் பிராமணனும், யூரோஷியன் க்ஷத்திரியனும், நேட்டிவ் கிறிஸ்தவன் வைசியனும், இந்தியன் சூத்திரனுமாய் விடுவர்.
உச்சிஷ்ட மன்னன் தாதவ்யம், ஜீர்ணானி வஸனானிச;
புலறகாஸ் சைவதான்யானாம் ஜீர்ணாஸ்சைவ பரிச்சதா
பொருள்: சூத்திரனுக்கு எச்சிலும், கிழிந்துபோன பழைய ஆடையும், நல்ல தானியங்களை எடுத்துக்கொண்டு பதரும் வைக்கோலும் கொடுக்க வேண்டும். இத்தோடு நில்லாமல்
சூத்ரஸ்யது ஜூகுப்ஸிதம் (மனு)
காதில் விழும்போதே அருவருப்பை உண்டு பண்ணத்தக்க பெயர்தான் சூத்திரனுக்கு இடவேண்டும். ஒருவருக்கொருவர் க்ஷேமம் விசாரிப்பதிலும் வேற்றுமை யுண்டு.
ப்ராஹ்மணம் குசலம்ப்ருச்சேத் க்ஷத்ரபந்து மனாமயம்;வைச்ய க்ஷேமம் ஸமாகம்ய
சூத்ரமா ரோக்யமேவச (மனு)
பொருள்: குசலமா? அனாமயமா? க்ஷேமமா? ஆரோக்கியமா? 1(நோயில்லாமல் இருக்கிறாயா?) என்று முறையே பிராமணன் முதலிய வருணத்தினரை விசாரிக்கவேண்டும். - (தொடரும்)

- http://www.viduthalai.periyar.org.in/20101218/news07.html