சனி, 15 பிப்ரவரி, 2020


01.09.1991 அன்று வடஆர்க்காடு அம்பேத்கர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக எழுத்தாளர் மன்ற அமைப்பாளர் சோலையார்பேட்டை கவிஞர் குயில்தாசன்_அற்புதம்மாள் ஆகியோரின் செல்வி அன்புமணிக்கும், காவேரிப்பட்டணம் வையூர் சின்னப்பிள்ளை அம்மாள்_வேடி ஆகியோரின் செல்வன் வே.ராசாவுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா கிருட்டினகிரி சாமுண்டீஸ்வரி திருமண மண்டபத்தில் என் தலைமையில் நடைபெற்றது. விழாவில் அனைவரையும் தருமபுரி மாவட்ட தி.க. செயலாளர் மு.துக்காராம் வரவேற்றுப் பேசினார்.
மணமக்களுக்கு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் நிறைவேற்றி வைத்து மணமக்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினேன். “இன்றைக்கு இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய நிலையில், ஒரு சங்கடம் இருந்து கொண்டிருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மணமகளுடைய சகோதரன் இந்த மணவிழாவிலே கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு இல்லையே என்கிற சங்கடம் உங்களுக்கு ஏற்பட்டிருப்பது இயல்பு.’’ அவரும் தன்னுடைய தந்தைக்கு ஒரு கடிதத்தைத் துணிச்சலோடு எழுதியிருக் கின்றார்கள்: “நான் வரவில்லை என்பதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள். நீங்கள் எல்லாம் அமைதியாக இருந்து மகிழ்ச்சியாக இந்த மணாவிழாவினை நடத்துங்கள்’’ என்று சொல்லியிருக்கின்றார்கள். நிச்சயம் இதுபோன்ற இலட்சியத்தை வைத்திருக்கின்ற குடும்பங்களுக்கு துன்பங்கள் வருவது என்பது இயல்பு. அதை நீங்கள் பகுத்தறிவுவாதி என்கிற முறையிலே _ சரியான கோணத்திலே எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக நீங்கள் அளவுக்கு மீறி வேதனை அடைய வேண்டிய அவசியமில்லை.
நான் அன்புமணி செல்வத்திற்கு சொல்லுகின்றேன், “உங்களுடைய சகோதரன் உங்களோடு - நம்மோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், இங்கே இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான சகோதரர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த இயக்கத்தை அடக்குவதற்கும், அழிப்பதற்கும் எத்தனையோ பேர் வந்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. இந்த இயக்கம் அடக்கப்பட வேண்டும் என்று சொன்னவர்கள், நீண்ட காலம் எங்கே இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாத சூழ்நிலைகளிலே _ எத்தனையோ அடக்குமுறைகளை இந்த இயக்கம்  சந்தித்துள்ளது. இந்த இயக்கத்திலே ரகசியம் கிடையாது’’ என்று எடுத்துரைத்தேன்.
தருமபுரி மாவட்ட தி.க. தலைவர் எஸ்.கே.சின்னப்பன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை ஆகியோர் மணமக்களைப் பாராட்டி வாழ்த்துரை நிகழ்த்தினார்கள்.
விழாவில் என் துணைவியார் மோகனா,  கர்நாடக மாநில தி.க. செயலாளர் பாண்டியன், பொருளாளர் ரெங்கநாதன், பெரியார் மாவட்ட தி.க. துணைத் தலைவர் சிற்றரசு, ஈரோடு நகர தி.க. செயலாளர் கருணாகரன், சண்முகம், பழனி புள்ளையண்ணன், கெடார் சு.நடராசன், சேலம் ப.கந்தசாமி, மாநில அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், வடசேரி ஜெகதீசன், கே.கே.சின்னராசு, மாவட்ட தி.க. இளைஞரணி தலைவர் கே.கே.சி.வீரமணி, வடசென்னை மாவட்ட தி.க. தலைவர் க.பலராமன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள், தோழியர்கள்,  பொதுமக்களும் பெருந்திரளாக மாநாடு போல் கலந்து கொண்டார்கள்.
10.9.1991 அன்று மேலத்தஞ்சை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் ராசகிரி கோ.தங்கராசு_அஞ்சம்மாள் ஆகியோரின் செல்வன் பூவானந்தம் அவர்களுக்கும், மதுரையைச் சார்ந்த பொ.பிச்சை_ முத்துலெட்சுமி ஆகியோரின் மகளும் மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பி.வரதராசன் அவர்களுடைய சகோதரியுமான மதுரவள்ளிக்கும், அதேபோல மேலத்தஞ்சை மாவட்ட தி.க. செயலாளர் ராசகிரி கோ.தங்கராசு_அஞ்சம்மாள் ஆகியோரின் செல்வி திலகவதிக்கும் புதுக்கோட்டையைச் சார்ந்த பெரியதம்பி_ கோகிலத்தம்மாள் ஆகியோரின் செல்வன் ஞானசேகரன் அவர்களுக்கும் நடைபெற்ற வாழ்க்கை ஒப்பந்த விழாவில் கலந்துகொண்டு வாழ்க்கை ஒப்பந்தம் நிறைவேற்றி மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து உரை நிகழ்த்தினேன்.
சுயமரியாதையோடு வாழ்வது, பகுத்தறிவோடு தேவையற்ற ஆடம்பரத்தை ஒதுக்குவது, சிக்கனத்தோடு வாழ்வது இப்படிப்பட்ட நெறிமுறைகளை தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கினார்கள். அந்த வகையில் சுயமரியாதையோடு மகிழ்ந்திருங்கள்; மற்றவர்களுக்குத் தொண்டு செய்யுங்கள் என்று எடுத்துக் கூறினேன்.

-தமிழர் தலைவர் ஆசிரியர்அவர்கள் எழுதும் தொடர் - இயக்க வரலாறான தன் வரலாறு(240)   உண்மை இதழ்,
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் கழத்தில் அரும்பெரும் பணியாற்றிய சுயமரியாதை சுடரொளி கெடார் சு.நடராசன் 12ஆம் ஆண்டு நினைவு நாள் (17.2.2020)

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

சாந்தன், முருகன், பேரறிவாளன் தூக்குத் தண்டனை ரத்து! நீதியரசர்களைப் பாராட்டுகிறோம்- பாராட்டுகிறோம் - வாழ்த்துகிறோம்!

சாந்தன், முருகன், பேரறிவாளன் தூக்குத் தண்டனை ரத்து! நீதியரசர்களைப் பாராட்டுகிறோம்- பாராட்டுகிறோம் - வாழ்த்துகிறோம்!

Print
சாந்தன், முருகன், பேரறிவாளன் தூக்குத் தண்டனை ரத்து!
உச்சநீதிமன்ற மகுடத்தில் பதிக்கப்பட்ட மனிதநேய மரகதக்கல் தீர்ப்பு இது!
நீதியரசர்களைப் பாராட்டுகிறோம்- பாராட்டுகிறோம் - வாழ்த்துகிறோம்!
23 ஆண்டுகள்  தண்டனை பெற்றவர்களை உடனே விடுதலை செய்க!
பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனை ரத்து
ராஜீவ்காந்தி கொலை வழக்கு என்ற பெயரில் குற்றவாளிகளாக ஆக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் 23 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் நிலையில், அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று ரத்து செய்திருப்பது - வரலாற்றுப் புகழ் மிக்க தீர்ப்பு  என்றும் உச்சநீதிமன்ற மகுடத்தில் பதிக்கப்பட்ட மரகதக்கல் என்றும் கூறி, மூவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் (போதிய சட்ட நியாய முறைகளைக் கடைப்பிடிக்காத நிலையில்) சாந்தன், முருகன், பேரறிவாளன் என்ற மூவரின் தூக்குத் தண்டனையை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்பமை ஜஸ்டீஸ் திரு. ப. சதாசிவம் அவர்கள் தலைமையில் அமைந்த அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பின் மூலம் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது;  இது மிகப் பெரிய வரலாற்றுப் புகழ் பெறக் கூடிய நியாயத் தீர்ப்புகளில் முதன்மையானது ஆகும்! நீதி வழங்குவதில் தாமதிக்கப்பட்ட நீதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்ட நீதியாகி விடும் கொடுமை உண்டு என்பது அரிய நீதித் தத்துவங்களுள் மிகவும் முக்கியமானதாகும்.
அந்த அடிப்படையிலும், மனிதநேயம் பூத்துக் குலுங்கும் வகையிலும்  உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும் சக நீதிபதிகளும் அளித்த இத்தீர்ப்பை நாடே பாராட்டி வரவேற்கும் என்பது உறுதி! உறுதி!! நீதியரசர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து செய்துள்ள இந்த நீதித் தீர்ப்பு நியாயத்தை அடிப்படையாகக் கொண்ட நேர்மை கொழிக்கும் சிறப்புக்குரியதாகும். பாதிக்கப்பட்டு 23 ஆண்டுகள் சிறையில் வதியும் அந்த காளைப் பருவத்தினர்கள், ஏதோ மகிழ்ச்சியாக உல்லாசமாகத்தான் அங்கே இருக்கிறார்கள்; எனவே அவர்களது சிறைத் தண்டனையைக் குறைக்கவே கூடாது! என்று மத்திய அரசின் சார்பில் வாதிட்ட மத்திய அரசு வழக்குரைஞரின் வாதம் வேதனையூட்டிய வெட்கப்பட வேண்டிய - உள்ளம் இருக்க வேண்டிய  இடத்தில் பள்ளம் இருந்த வாதங்களாகும். அவைகளைப்  புறந்தள்ளி, நாடே போற்றும் நல்ல தீர்ப்பை அளித்த அந்த நீதி அரசர்கள் இருக்கும் திக்கு நோக்கி வாழ்த்துகிறோம் பாராட்டுகிறோம்! உச்சநீதிமன்றத்தின் மகுடத்தில் பதிக்கப்பட்ட மனிதநேய மரகதக்கல் இது!
இத்தனை ஆண்டுகள் சிறையில் தண்டிக்கப்பட்டு காலத்தைக் கழித்த அவரவர்களின் விசாரணைபற்றி பல புதிய புதிய தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், அவர்களை விடுதலை செய்யவும்  நீதித்துறை - உச்சநீதிமன்றம் முன்வர வேண்டும் என்பது நமது வேண்டுகோளாகும்.
தமிழ்நாடு அரசும் இப்பிரச்சினையில் முக்கியக் கவனம் செலுத்தி, அவர்களை முற்றிலும் விடுதலை செய்ய முயற்சிக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

18.2.2014
சென்னை




 தண்டனைக் குறைப்பு செய்தி கிட்டியதும் மகிழ்ச்சி, நீண்ட பெருமூச்சு, கண்களில் நீர்ப்பெருகத் துடிக்கிறது. உறவுகளின் இணைப்பாக, இழக்கக்கூடாத இருப்பாக அறிவு உள்ளிட்ட உறவுகள். கயிற்றிலிருந்து விடுதலை, அடுத்தும் முழுமையான விடுதலை வேண்டும். அலைபேசிகள் ஒலிக்கின்றன, குறுந்செய்திகள் மின்னலென பாய்கின்றன. ஆகா, இத்துணை தோழர்கள், உறவுகள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆழ்மனத்து கிடப்புகள் எல்லாம் திரண்ட நம் அய்யாவாக, உண்மையான நீதித்தலைவனாக தீர்ப்பு தெளிந்த, தன்னிகரற்ற தீர்ப்பு. மனித உரிமை காத்த மாபெரும் நீதித்தலைவன் மதிப்பிற்குரிய சாதாசிவம் அவர்கள் நீதித்துறையின் உன்னதத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள். குழவியின் தேவை உணர்ந்த தாயைப்போல், நாட்டிற்கு கிடைத்த தாயுள்ளத்துடன் அளிக்கப்பட்ட தீர்ப்பு. காலத்திற்கும் தமிழர்தம் நன்றிக்குரியவர்.

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

உலகமே மனிதநேயத்துடன் தூக்கு தண்டனை முறையை எதிர்த்து நீக்க முன்வரும்போது அஹிம்சை போற்றும் இந்தியா...?

ராஜீவ் படுகொலைக்குப் பின்னர் ஆதாயம் அடைந்தவர்கள் யார்? உள்நாட்டு, வெளி நாட்டு சதிகளின் முழுமையான தகவல்கள்தான் என்ன? திருச்சி வேலுச்சாமியின் சு.சாமி பங்களிப்பு குறித்து விசாரணைகள் இல்லையா? லிபியாவுக்கு ஓடிய நேட்டோ இலங்கைப்பக்கம் செல்லாததற்கு தனித்த காரணம் என்று ஒன்று உண்டா? இலங்கை அதிபரைப்பார்த்து அமெரிக்க அச்சப்படுவதற்கு தனித்த காரணம் உண்டா? அதேபோல் இந்தியா குறித்தும் ஏராளமான கேள்விக்கணைகள் உள்ளனவே? பதில் உண்டா? இந்தியாவுக்கு அதிக பயன் விளைவிக்காத உலக வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேறும் துணிவு உண்டா? குற்றம் சுமத்தப்பட்ட 26 பேருக்கும் தூக்கு கொடுத்த நீதிதானே இப்போது மீதம் உள்ளவர்களுக்கும் பொருந்தும்? சரியோ, தவறோ யாருக்காவது எப்படியாவது தூக்கு தண்டனை கொடுத்தாக வேண்டும் என்று சடங்கு ஆக்குவதா? (சடங்கு என்றால் காரண காரியம் கேட்கப்படாது)
சிங்களவனால் தமிழக மீனவர் (இந்தியா மீனவர்?) பாதிப்புக்குள்ளாவதை தடுக்க வேகமான முடிவுகள் எடுக்காத மத்திய அரசை ஏன் என்றாவது இதுநாள்வரை குறைந்தபட்சம் எழுத்து மூலமாகவாவது கண்டித்து, கேட்டிருப்பாரா இந்திய குடியரசுத்தலைவர்? அவர்தான் முப்படைகளுக்கும் தலைவர்?
உலகமே மனிதநேயத்துடன் தூக்கு தண்டனை முறையை எதிர்த்து நீக்க முன்வரும்போது அஹிம்சை போற்றும் இந்தியா...? குற்றவாளி தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்று கூறப்படுவது எல்லாம் என்னவாயிற்று?

வெள்ளி, 18 மார்ச், 2011

கழகத் தலைவர் கழகப் பொறுப்பேற்ற 33ஆம் ஆண்டு!

கழக உறவுகளின் ஒத்துழைப்போடு, அன்போடு
உயிரினும் மேலான என் லட்சியப் பயணம் தொடரும்!

கழகத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை


அன்னை மணியம்மையார் அவர்களின் மறைவிற்குப்பிறகு கழகப் பொறுப்பை ஏற்ற இந்த நாளில் (18.3.1978) தமது வெற்றிப் பயணத்தைப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் - திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:

நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களையும், அவர்கள் உருவாக்கிய அரியதோர் புரட்சி இயக்கமாம் நம் திராவிடர் கழகத்தையும் பாதுகாத்து கடமையாற்றிய தியாகத்தின் புடம்போட்ட தங்கம் நம் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்கள் மறைந்த (16.3.1978) பிறகு, அய்யா, அம்மா ஆகியோரின் கட்டளைப்படியும், கழகப் பெருங் குடும்பமான பெரியார் தொண்டர்களாம் நம் இருபால் தோழர்களின் ஆணைப்படியும் நான் பொறுப்பேற்று, 32 ஆண்டுகள் முடிந்து, 33ஆம் ஆண்டுப் பணி தொடங்கும் நாள் இன்று (18.3.2011).

என்னைத் தூக்கிச் சுமந்த தோள்கள்

பெரியார் நூற்றாண்டு தொடங்கியது அப்போது; அது முதற்கொண்டு எத்தனையோ சோதனைகளும் வேதனைகளும், வம்புகள், வசவுகள், வல்லடி வழக்குகள், இவை ஒருபுறம் நம்மை நோக்கி!

மற்றொருபுறம் நல்லெண்ணம் படைத்த சான்றோர்கள் பலரும் இந்த எளியவனுக்கு ஊக்கத்தையும், உற்சாகத் தையும் தந்து உயரத்தைக் காட்ட தத்தம் வாழ்த்துரை, பாராட்டுரை என்று அவர்தம் வலிமைமிக்க தோள்களில் என்னைத் தூக்கிக் காட்டி, பெரியார் இயக்கம் குன்றென உயர்ந்த இயக்கம், கோடிக்கணக்கான மக்களின் மான வாழ்வுக்கும், உரிமைப் போருக்கும் என உழைக்கும் ஒரே சமூக இயக்கம் என்பதால் இது தாழ்ந்துவிடவோ, வீழ்ந்து விடவோ கூடாது என்று, இனமானம் கருதி எமக்குப் பேராதரவு தரத் தவறவில்லை.

நம் கழகக் குடும்பங்களில் உள்ள நம்முடைய உறுப்பினர்கள், தாய் தந்தையர்களைப் போன்றும், உற்சாகம் குன்றா உடன்பிறவா சகோதரர்கள் போலவும் உள்ளனர். ரத்த பாசத்தைவிட கொள்கைப் பாசத்தைக் கொட்டிடும் குடும்பங்களாக ஆதரவு நல்கி, கொள்கைப் பாதையிலிருந்து துளியும் நழுவாமல், வழுவாமல் உறுதியுடன் நடைபோட்டு, பயணங்களில் சூறாவளிகளும் சுனாமிகளும் சுழன்றடித்தாலும் சோர்ந்துவிடக் கூடாது என்ற எண்ணத்துடன் பெருந் துணையாக நிற்கின்றனர்!

கட்சி வேறுபாடுகளைக் கருதாமல், இன உணர்வோடு எமது பயணத்தை நடத்திட, என்றும் உரமூட்டும் நண்பர்கள் அனைத்துக் கட்சிகளிலும் ஏராளம் - உலகம் முழுவதும்!

எமது பணியில்தான் எத்துணை மகிழ்ச்சி!

இவை எல்லாம் நமது பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பெருந்தொண்டினால் விளைந்த கதிர்மணி களைப் போன்றவை. எனவேதான் எத்தனை இடுக் கண்கள் வந்தாலும் எமது பயணம் எப்போதும் இலக்குத் தவறாத இனிய பயணமாகவே நடைபெற்றுக் கொண் டிருக்கிறது!

இளமைமுதல் இன்றுவரை யாமறிந்த கொள்கை, தலைமை, அது தந்த லட்சியப் பாதை - இவற்றைக் கட்டிக் காப்பதை கண்ணை இமை காக்கும் கடமைபோல் செய்து வரும் எமது பணியில்தான் எத்துணை மகிழ்ச்சி; எவ்வளவு உற்சாகம்!

நாம் பதவிகளை, புகழை நாடாத மான வாழ்விற்கு சுயமரியாதை சுகவாழ்வினைப் பெரியாரால் பெற்றோம். துயர் வரினும் துணிவுடன் எப்போதும் பயணிக்கும் ஆற்றலை அதனால் பெற்றோம் என்று எண்ணி மகிழ்வதே - இப்பணிக்கு யாம் பெறும் ஊதியம் ஆகும்!
இடையில் உடல் நலம்கூட போதுமான ஒத்துழைப்பு தருவது ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். மருத்துவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்.

கீர்த்தி பெறுவதற்கான கிரீடம் அல்ல எனக்கு அய்யா அம்மா தந்திட்ட பொறுப்பு. நேர்த்தியுடன், நேர்மையுடன் லட்சியங்களை செயல் களாக்கிக் காட்டிடும் செழுமிய பணியாற்றுவதற்கே என்று கருதி என்றும் உழைத்துக் கொண்டிருப்பவன் நான்.

எனது போனஸ் வாழ்வு!

இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு 20 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று நினைக்கும்போது, இப்பணிக்குக் கிடைத்த போனஸ் வாழ்வு - பொருளற்ற வாழ்வாகி விடக் கூடாது; பொறுப்புகளை சரிவர நடத்தும் பொன்னான வாய்ப்புள்ள வாழ்க்கையாக அமைய வேண்டும் என்ற உறுதியும், ஒவ்வொரு கழகக் குடும்பத் தவரும் காட்டும் பரிவும், பாசமும் என்னை உழைத்துக் கொண்டே இரு; ஓய்வு என்பது ஒரு பணியிலிருந்து மறுபணிக்கு மாறுவதே என்ற உன்னதத் தத்துவத்தைப் போதிப்பதாக அமைந்துள்ளது.

நமது இலக்கு நோக்கிய இந்த இயக்கப் பணிகளில் - பயணத்தில் - அடைந்த வற்றைவிட, அடைய வேண்டியவை ஏராளம்!

எம் பணி தொடரும்!

தந்தை பெரியார் கொள்கை, மானுடத்தின் மகத்தான விடியலை ஏற் படுத்தும் புது நெறி; புரட்சி வழி என்பதால் அதனை உலகம் முழுவதும் பரவிடச் செய்ய, சோர்வறியாது உழைக்க, மேலும் உறுதி எடுத்துக்கொண்டு, இப் பணிக்கு எம்மை உற்சாகப் படுத்தும் கொள்கைக் குடும்ப உறவுகளுக்கும், சான்றோர்களுக்கும் தலை தாழ்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம். அடக்கத்தோடு அரும்பணி தொடர அனைவரது ஒத்துழைப்பையும் யாசிக்கிறோம்; உயிர் மூச்சுள்ள வரை, உயிரைவிட மேலான லட்சிய மான பெரியாரின் தத்துவங்கள், உலக மக்கள் நெஞ்சில் விதைக்க எம்பணி தொடரும் என்று உறுதி கூறுகிறோம்.

நாணயம் தவறாத நல்வாழ்வு என்ற கொள்கை வாழ்வாக அமையட்டும் நம் வாழ்வு!
உங்கள் தொண்டன், தோழன்,

கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

- http://viduthalai.in/new/component/content/article/40-current-news/5645--33-.html?sms_ss=blogger&at_xt=4d836d8911ffcd66%2C0

செவ்வாய், 15 மார்ச், 2011

ஞானசூரியன் தொடர்-53

இவ்வாறு ராணியைச் செய்ய முடியாமல் போயிற்று. பல பாராக்கள் இருந்ததாலும், ராணியென்று நினைத்து வேறொருத்தி காலைப் பிடித்திழுத்ததாலும் அவர்கள் ஜீவித்துக் கரையேறினார்கள்.

இதை நன்குணர்ந்த தமிழ் மந்திரியானவர் ஒரு மாசம் காசி ராஜாவிடத்திலிருந்து தன் தொழிலை முறையாகப் பார்த்ததுடன், பார்ப்பனர்களுக்கும், காசி குண்டாக்க ளென்ற போக்கிரிக் கொலைகாரர்களுக்கும் பெரும் உதவிகள் செய்து, பெருந் தர்மாத்மா என்று பேர் வழங்கும்படிச் செய்தார்கள்.

இரண்டு மாதம் போக, ஒரு தந்திரமாகத் தஞ்சாவூர் ராஜனிடத்திலிருந்து கடிதம் வந்ததாகவும், அக்கடிதத்தில் வரைந்துள்ள விஷயங்கள் தஞ்சாவூர் ராஜாவினுடைய முத்து வியாபாரக் கப்பல் சமுத்திரத்தின்கண் அமிழ்ந்து போனதாகவும், அக்கப்பல் எவ்வளவோ கோடி ரூபாய்க்கு இரத்தினங்கள் நிறைந்த தென்றும், அவைகளை மூழ்கி எடுப்பவர்கட்குத் தினம் ஒன்றுக்கு ரூ.10-ம், பக்கா போஜனமும் அளிப்பதாகவும் பிறகு, எடுத்த பொருளிலிருந்து தகுந்த பங்கு கொடுப்பதாகவும், அதற்கு எவ்வளவு ஜனங்கள் கிடைத்த போதிலும் வேலை கொடுத்துப் பெற்றுக்கொள்ளுகின்றே னென்றும், ஆனால், குறைந்த அளவு ஒரு மணி நேரத்திற்கு மேல் எவ்வளவு நேரம் அதிகம் மூழ்கிப் பழக்கப்பட்டவர்களானாலும், அவர்களுக்கு அதிக சம்பளமும், பக்கா போஜனமும் கொடுக்கப்படவேண்டு மென்றும், இதற்கு ஜனங்களைச் சேர்ப்பதற்குத் தனிச் சம்பளங்கொடுப்பதென்றும் பிரசித்திப்படுத்தினார்கள்.

இவ்வாறு விளம்பரம் பண்ணவே, ஒரு மாதத்துக்குள் 370 ஜனங்கள் ஒரு மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரையிலும் தண்ணீரில் மூழ்கிப்போக வல்லவர்களாய்ச் சேர்ந்தார்கள். பிற்பாடு மந்திரியானவர் இவர்களிடம் கேட்டுக் கொண்டதாவது:

குறைந்தது அய்ந்நூறு பேராவது சேர்க்க முடியுமா? அப்படிச் சேர்ந்தவர்களுக்குப் பெரிய வேலை கொடுப்பதாகவும் சொன்னார். அதற்கு அவர்களில் தலைவனாகிய ஒருவன், இப்போது காசியிலுள்ள ஜனங்களில் நீரில் மூழ்கப் பழக்கமுள்ளவர் எல்லோரும் இங்கேயே இருக்கிறார்கள்.

அதிகமாய் இன்னும் வேண்டுமாயினும் கான்பூரிலும் கிடைப்பார்கள் என்று பதில் கூறினான். கான்பூரிலிருந்து ஜனங்களை அழைத்துவர நாளாகும். வேண்டுமானால் பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி, நாம் நாளைக்குப் புறப்பட வேண்டும். வீட்டில் இருக்கிற பெண் மக்களுக்கு மாதச் செலவுக்கு ராஜாங்கத்திலிருந்து மாதப் பணங்கொடுக்க ஏற்பாடு செய்யவேண்டியதிருக்கிறது என்று சொல்லி, இந்த ஜனங்கள் அத்தனை பேர்களையும் வைக்கோலினால் செய்த ஒரு பெரிய கோட்டைக்குள் ராத்திரி படுக்கச் செய்து, நாளை காலையில் 3 மணிக்கு யாத்திரை செய்ய வேண்டுமென்று, அவர்களுக்குச் சொல்லிவிட்டு, நடுநிசியாக 12 மணி நேரத்திலே சிப்பாய்களை வரவழைத்து, நீரில் முழுகி, முழுகிப் பழக்கப்பெற்றோர் படுத்துக்கொண்டிருக்கும் கோட்டையை ஒரே சமயத்தில் பலவிடங்களிலும் நெருப்பு வைத்து எரியச் செய்தனர். உடனே ஜனங்கள் எழுந்திருந்து ஓடிப்போக முயன்றபோது, வழி கிடைக்காமல் நெருப்பில் வந்து விழுந்து வெந்து மாண்டார்கள்.

அதிலும் தப்பி யோடிய சிலரைக் குண்டு போட்டுச் சுட்டுப் போட்டார்கள். அதற்குப் பிற்பாடு கங்காதேவி நகை போட்டவர்களை அழைத்துத் தன்னுடன் சேர்த்துக்கொள்வதை நிறுத்திக் கொண்டாள். இப்பொழுதுங்கூட பூரணமாக நிற்கவில்லை. சில சமயங்களில் நகைகள் பெருக்க அணிந்துகொண்டு ஏமாந்து நீராடும் ஜனங்களைக் கங்காதேவி அழைப்பது வழக்கம்தான்.

இக்காலங்களில் பார்ப்பனர்கள் செய்யும் சூழ்ச்சி என்னவென்றால், யாத்திரையாக வந்த ஜனங்கள் பார்ப்பனர்கள் சொல்லக்கூடிய கருமங்களையெல்லாம் செய்து, போகுந்தருணத்தில் அவர்களுடைய விலாசம் முதலியவற்றை எழுதின பின்பு விருந்திடுவதுண்டு.

இதில் இரண்டு பேர் மூன்று பேரானால் இராத்திரிக்கே கங்கையில் போய்விடுவார்கள். அவர்கள் கொடுக்கும் சில சாமான்களில் யாதோ கலந்து கொடுப்பதென்பது உலகப் பிரசித்தம்.

பிணங்களை எடுத்துக் கங்கையில் போடு வதற்கும் ஒருவனைக் கொலை பண்ணுவதற்குங்கூட மூன்று ரூபாயிலிருந்து அய்ந்து ரூபாய் வரைக்கும் போதுமாம். இதைக் காசி யாத்திரை போகிறவர்கள் நன்றாய் விசாரித்துத் தெரிந்து வரும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். மேற்படி செய்கை செய்கிறவர்களில் கேதாரக் கட்டத்தில் கோவிந்தானந்தன் என்னும் பெயருள்ள ஒருவன் இன்னும் ஜீவித்திருக்கிறதாக ஜனங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது.

இச்செய்திகளை நன்றாய் வாசித்துக் கவனத்தில் வைத்து விசாரித்து நம்பினால் போதும். தீர்த்த, ஸ்தலங்களும் நமது ஆலயங்களும், விபசாரம், பொய், திருட்டு, கொலைகள் என்கிற பஞ்சமா பாதகங்கள் செய்யும்படிக் கற்றுக்கொடுக்கும் ஒரு பஜார் அல்லது பள்ளிக்கூடமாக முடிந்ததைப் பற்றி யார்தான் வருந்தாமலிருக்க முடியும்?

வேதசாஸ்திரங்களை உண்டாக்கின முனிவர்கள் ரிஷிபுங்கவர்களின் பிறப்புத் தன்மை
கலைக்கோட்டு ரிஷி மானுக்கும், கவுசிகர் குசத்திற்கும், ஜம்புகர் நரிக்கும், கவுதமர் மாட்டிற்கும், வால்மீகி வேடனுக்கும், அகஸ்தியர் குடத்திலும், வியாசர் செம்படத் திக்கும், வசிஷ்டர் ஊர்வசிக்கும், நாரதர் வண்ணாத் திக்கும், காதனசல்லியர் விதவைக்கும், மதங்கர் சக்கிலிச்சிக்கும், மாண்டவியர் தவளைக்கும், சாங்கியர் பறைச்சிக்கும், காங்கேயர் கழுதைக்கும், சவுனகர் நாய்க்கும், கணாதர் கோட்டானுக்கும், சுகர் கிளிக்கும், ஜம்புவந்தர் கரடிக்கும்,அஸ்வத்தாமன் குதிரைக்கும் பிறந்தனராம்.

(நிறைவு)

- http://viduthalai.in/new/page-3/5410---53.html?sms_ss=blogger&at_xt=4d7ef4666d2208af%2C0

ஞானசூரியன் தொடர்-52

வயது முதிர்ந்த ராணியோ, இருக்கப்பட்ட விலையுயர்ந்த எல்லா நகைகளையும் அணிந்து பல தாதிகளுடனும், ராஜஸ்திரீகளோடும் தனது புத்திரனாகிய ராஜனோடும், நான் இன்றைக்குக் கங்கையோடு சமமாகக்கலந்து வாழப் போகிறேனென்று யாத்திரை சொல்லிக் கங்கை வருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அக் கிழராணியைச் சூழ்ந்திருந்த பெண்களெல்லோரும் ஒவ்வொருவருடன் ஒவ்வொருவரும் பலமாகக் கோத்துப் பிடித்துக் கொண்டிருந்தனர். கிழ ராணியின் முப்பக்கங் களிலுமிருக்கிற பெண்கள் அடிக்கடி மாற்றி நின்று கொண்டிருந்தார்கள்.

இப்படியிருக்கப் பார்ப்பனப் புரோகிதர்கள் அங்குமிங்குந்திரிந்து ஒருவருக்கொருவர் முணுமுணுத்துக் கொண்டும் மார்பைத் தடவி நெடு மூச்சுவிட்டுத் துக்கித்துக் கொண்டும் இருந்தார்கள். அத்தருணத்தில் வரிசையாய் நின்று கொண்டிருந்த தாதிகளில் ஒருத்தியைக் கங்காதேவி நீரிலிழுத்துவிட்டாள். அவர்களோ, முன்னமே ஒருவருக்கொருவர் சேலையை முடிபோட்டுக் கொண்டிருந்ததாலும், கைகளை ஒருவருக் கொருவர் பலமாகக் கோத்து உறுதியாகப் பிடித்துக் கொண்டதனாலும், நாலு, அய்ந்து தாதிகள் உடனே கங்கையில் விழுந்துவிட்டார்கள். எல்லோரும் ஒன்றுபோல ஒருவருக்கொருவர் பலமாய்க் கைகோத்து இழுபட்டு விழுந்தவர்களையும் கூட விழுந்தவர்களையும் வலித்து இழுத்து யாவரும் கரையேறினார்கள்.

இவ்விதம் கங்கையில் இழுபட்டு விழுந்த தாதியும் உயிர் தப்பிப் பிழைத்துக் கொண்டாள். பிறகு, ராணியிடத்தில் மந்திரியும், ராஜாவும் கலந்துபேசி, இனிக் கங்கைதேவி தங்களை இன்றைக்கு அழைத்துப் போகமாட்டாள்; நாளைக்கு எவ்விதமான பூசை போட்டாவது கங்கையை வரவழைப்போம். பிராமணர் களிடத்தில் வேண்டிய விசாரணை செய்து நன்றாகத் தெரிந்துகொண்டு கங்கையோடு தங்களை அழைத்துப் போகாததனால் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லித் தாயாராகிய ராணியை ஸ்நானம் பண்ண வைத்துத் தங்கள் வசிக்கும் விடுதிக்குச் சென்றுவிட்டார்கள். பிற்பாடு, மந்திரியும் ராஜாவும் கலந்து புரோகிதரையும் மற்றும் பல பார்ப்பனரையும் விசாரித்ததில், அவர்கள் சொல்லும் சமாதானங்கள் வருமாறு: கங்காதேவி பாவிகள்நிறைந்த இடத்திற்கு வரமாட்டாள். ஆதலால், ராணி தனியாகவே நீரில் இருக்கவேண்டும். கங்கையில் ஸ்நானத்திற்கு வரும் ஜனங்கள் சிப்பாய்களால் தடை செய்யப்படாமலிருக்க வேண்டும். பாக்கியுள்ள தாதிகளும், ராணியினுடைய சரீரத்தைத் தொடாமலிருக்க வேண்டும். மறைப்புக்குள் ராணி இருக்கக்கூடாது. சில பிராமணர்கள் அங்கிருந்து பூசை செய்து கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் கங்கை வருவாள். இன்றைக்கு அங்கு வந்தவர்களில் யாரோ பாபிகளிருந்திருக்கலாம். ஆதலால், ராணியைக் கங்கா தேவி தொடாமற்போனதென்றாலும் மற்றொரு தாதியை இழுத்ததற்குக் காரணம், அவள் ஜென்மாந்திரத்தில் பெரிய புண்ணியம் செய்தவளாயிருப்பாள்.

பாவங்களில் யாதோ சிறிது சம்பந்தமிருக்கும். அதனால்தான் இவளை இச்சமயத்தில் அழைக்காமல் இருந்தது. இவ்வாறு விஷயங்களைச் சொல்லி முடித்த பின், அவர்கள் எல் லோரும் போய் விட்டார்கள்.

பிற்பாடு, மந்திரி யும், ராஜாவும் விலை யுயர்ந்த சாமான் களைச் சன்மானமாக எடுத்துக்கொண்டு போய்க் காசி ராஜாவைத் தரிசித்தபின், இந்தக் கங்காதேவி அழைப்பு விஷயத்தைப் பற்றிச் சிறிது சம்பாஷணை நடந்தது. அப்போது பல பிராமணர்கள் இருந்த காரணத்தால், காசி ராஜாவானவர், ராஜா கேட்ட விஷயத்தைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. சிறிது நேரம் பொறுத்து, இவ்விருவரையும் அரண்மனைக்குள் அழைத்துச் சென்று, காசி ராஜாவானவர் துக்கத்தோடு உள்ள விஷயத்தை உண்மையாய்ச் சொன்னார். அப்போதே இவர்களைத் தாக்கீது செய்து, நான் சொன்ன விஷயம் பிராமணர் களுக்குத் தெரிந்துவிட்டால், எவ்வாறாயினும் சூழ்ச்சி செய்து என்னைக் கொலை செய்துவிட எத்தனிப்பார்கள். அதனால் யான் சொன்ன விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது. தாங்களும் இவ்வூரைவிட்டு ராணியை அழைத்துக் கொண்டு தங்கள் சுயராஜ்ஜியத்திற்குப் புறப்பட்டுப் போங்கள் என்று சொன்னார். அதற்கு இந்த ராஜாவினுடைய மந்திரியார், நான் இதற்குத் தகுதியான ஏற்பாடு செய்து, தாங்கள் சொன்ன விஷயத்தைச் சரியாகத் தடுத்துவிடுகிறேன். எனக்கு மூன்று மாத காலம் மந்திரி வேலை கொடுங்கள் என்று சொன்னார். அதற்குக் காசிராஜா இசைந்து, அந்த மந்திரியாருக்குக் காசிராஜாவின் மந்திரியின் உத்தியோகத்தை ஆறு மாத காலத்துக்குப் பார்க்கும்படியாகக் கொடுத்துவிட்டார். கங்கையோடு சேரப்போன ராணியும், மகாராஜாவும், ராஜாங்கமும், திரும்பி ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்.

பிறகு இந்தத் தமிழ் மந்திரி, காசிக் கங்கையில் எவ்வாறு ஜனங்கள் இழுக்கப்பட்டுப் போகிறார்கள் என்பதை விசாரணையில் விளங்கிக் கொண்டார். அது விபரமாவது: காசி நகரத்தில் கருவெட்டல் நிறுத்தப்பட்ட பிற்பாடு, அந்நாட்டிலிருக்கும் பார்ப்பனர்களும் புரோகிதர் களும் அந்நாட்டில் பிரசித்திபெற்றுள்ள தோணியோட்டி களும் வஸ்தாதுகளாகிய ஒருவிதக் கொலைகாரச் சோம்பேறி மடையர்களும் ஒற்றுமையுடன் கலந்து செய்யும் நிகழ்ச்சியாம். தோணியோட்டிகளும், சோம்பேறிகளும் தண்ணீரில் 3 அல்லது 4 மணிநேரம் மூழ்கிக் கிடக்கப் பழகி, ஜனங்கள் ஸ்நானம் பண்ண இறங்கும்பொழுது கூடவே அவர்களும் இறங்கிக் காலைப் பிடித்துக் கொண்டு தண்ணீருக்குக் கீழாகவே ஒரு மைல் தூரங்கொண்டு போய்க் கொலை செய்து, நகைகளைக் கொள்ளை கொள்ளுவதும் வழக்கமாம். இந்த நகையில் கொலை பண்ணுகிறவனுக்கும், புரோகிதனாகிய கங்கா புத்திரனுக்கும் சமமான பங்குள்ளதாம். -தொடரும்

- http://viduthalai.in/new/page-3/5342---52.html?sms_ss=blogger&at_xt=4d7ef406fd124525%2C0

வெள்ளி, 11 மார்ச், 2011

ஞானசூரியன் தொடர்-51

தற்காலம் மாட்சிமை தங்கிய கனம் ஆங்கிலேய அரசாட்சியால் இக்கொடுஞ் செய்கைகள் தடுக்கப்பட்டிருக் கின்றன. இதுபோன்ற பல இந்துமதாச்சாரக் கொடுமை களும், காருண்ய கவர்ன்மெண்டாரால் தற்காலம் தடுக்கப் பட்டிருக்கின்றன. அதாவது சககமனம் (உடன் கட்டை யேறுதல்), காளிகோயில் நரபலி முதலியனவாம்.

காசியின் இரண்டாவது மோசம் அதாவது, அரசாங்கத்தாரால் அக்கருவெட்டல் தடுக்கப்பட்ட பின்னர், மற்றுமொரு சூழ்ச்சியால், அவ்வன்கணாளர்களாகிய பார்ப்பனர்களோவென்றால், யாத்திரைவாசிகளைக் கொலை செய்து ஜீவனோபாயம் சிறிது காலம் செய்து ஜீவித்து வந்தார்கள். அந்தச் சூழ்ச்சி எவ்வாறெனின், சில காலத்திற்கு முன் படிப்பும், நாகரிகமும் முறையாக இக்காலத்திலுள்ளது போலில்லை என்று எவர்களும் அறிவார்களல்லவா! அக்காலங்களில் தனவான்கள் ஆடைகளையும், ஆபரணங்களையும் மிகுதியாயணிந்த தமது தனப்பெருக்கத்தைப் பிறருக்கு அளிப்பது வழக்கம். இப்போதும் அது முற்றும் குறைந்தபாடில்லை. சில அறிவீனர்கள் தங்கள் தங்களுடைய குழந்தை களுக்கு அதிகமாக ஆபரணங்கள் அணியச் செய்து அழகு பார்க்குங்காரணத்தால் குழந்தைகள், திருடர்கள் கையினால் கொலையுண்டு போவதை அடிக்கடி கேள்விப் படுகிறோமல்லவா? அவ்வாறே அக்காலத்தில் காசி யாத்திரை செய்பவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் மிகுதியான நகைகளணிந்து காசிக்கு வருவார்கள். இங்ஙனம் யாத்திரைவாசிகளுக்கு உடனிருந்து கருமஞ் செய்விக்கும் குருக்கள் அல்லது பார்ப்பனப் புரோகிதர் களிடஞ் செல்லுவர். அப்புரோகிதர் நிலை யாதெனில், கொலை செய்யும் இரண்டு குண்டர்களையும் (தடிச் சோம்பேறிகள்) பல போக்கிரிகளையும் உடன் வைத்திருப்பார்கள்.

அக்குண்டர்களோ 3,4,5 மணிநேரம் ஜலத்தினுள் மூழ்கியிருக்குந் தன்மையில் பயிற்சி பெற்றவர்கள். இப்புரோகிதன் தன்னையடைந்த யாத்திரைக்காரர் களைஅழைத்துக் கங்கையில் சங்கற்ப ஸ்நானம் செய்யப்போகும் தருணத்தில் குண்டர்களிலொருவனை உடன் அழைத்துச் செல்வான். கங்கையை அடைந்து மூழ்குந் தருணத்தில் இக் குண்டனானவன் இவர்களுடன் தானுமொருவனாய், மூழ்கியவர்களில் மிகுதியாக நகை அணிந்திருக்கும் ஆணையாவது, பெண்ணையாவது ஜலத்திற்குள் ஒன்று அல்லது இரண்டு மைல்களுக்கப்பால் இழுத்துக் கொண்டு போய்விடுவான்.

எஞ்சி நின்றோர் ஸ்நானம் முடிந்த பின்னர் உடனிருந்து காணாமற்போன தமது அருமை மகனெங்கே? மகளெங்கே? என்று தேடித் திகைக்குங்கால், அந்தக் கங்கைக்கரையிலுள்ள பார்ப்பனர்கள் இக்குருக்களுடன் கூடிக் கொண்டு, மணியடித்து அர்ச்சித்துக் கற்பூரமேந்தி பற்பல வடமொழிப் பாட்டுகளைப் பிதற்றிக் கங்கைக்குப் பூஜை செய்வார்கள். அத்தருணம் கங்கைக்கரையில் பெருங்கூச்சலாகவே இருக்கும். காணாமற் போனவர் களுடைய பெயரைக் கேட்டு, அவர்களைக் கங்கா தேவியே வந்து அழைத்துச் சென்றாளென்றும், அவர்கள் மிகுந்த பாக்கியவான்களென்றும், அப்புண்ணியவான்களின் பொருட்டல்லவா எங்களுக்கும், உங்க ளுக்கும் அக்கங்கா தேவியின் தெரிச னங்கிடைக்கப்பட்ட தென்றும், இதனால் உங்களுடைய குடும் பம் இனிமேல் மிக க்ஷேமமடையுமென் றும் சொல்லிக் கங்கையின் பேரிலும் விஸ்வநாதர் பேரிலும் பாக்கள் பாடி, அவர்களுடைய துக்கத்தை மாற்றுவார்கள். பறிகொடுத்த யாத்திரைவாசிகள் மனங்கொதித்துக் கண்ணீர் வடிய, மெய்சோர்ந்து, கன்றிழந்த பசுவைப் போலும் கதறிக் காசி யாத்திரை போதுமென்றும், சொல்லித் தம் நாட்டிற்குத் திரும்புவார்கள். அந்தோ! இவ்வாறு சிறிது காலம் நடந்தேறிய பின்னர், கங்காதேவி புனிதர்களை அழைத்து அழியாப்பதவியாகிய சுக வாழ்க்கையை நல்குகிறாளென்ற வசனம் எங்கும் பிரசித்தமாய்விட்டது. அவ்வாறிருக்க, நமது தென்னாட்டு அரசர்களில் ஓர் அரசனுடைய தாயாரிடத்தில் பார்ப்பனர்கள் சென்று காசி மகிமைகளைப் பற்றிப் பலவிதமாகச் சொல்லி, அதற்குச் செல்ல வேண்டுமென்னும் ஆசையை எழுப்பவே, அந்த வயது முதிர்ந்த இராணி கங்கா தேவியிடம் போய், அழியாப் பதவிகளாக வேண்டுமென்று எண்ணங் கொண்டாள். என்னையும், கங்காதேவியார் கருணை புரிந்து தன்னுடன் சேர்த்துக் கொள்ளுவாளா? என்று கேட்டதற்கு, அந்தப் பிராமணர்களுடைய விடை யாதெனில், ஓ மகாராணியே! பிராமணர்களுக்கு ஏராளமான தான தருமங்களைச் செய்கிறவர்களையும், ஏராளமான ஆபரணங்களை அணிந்து கொண்டிருக்கக் கூடிய புண்ணிய சீலர்களையும், மட்டுமேதான் அப்பதவிக்கு அழைப்பது வழக்கம என்று கூறினர். இவற்றைக் கேட்ட நாள் தொடங்கி அந்த இராணியானவள், அரண்மனை யிலுள்ள பொருள்களைப் பார்ப்பனர்களுக்குத் தானமாகக் கொடுத்தும், நகைகளைப் புதிது புதிதாகச் செய்து அணிந்து கொண்டும் வந்தாள்! பிறகு தனது புத்திரனாகிய ராஜனோடும், ராஜ அங்கங்களோடும் புறப்பட்டுப் போய்க் காசியைச் சேர்ந்தாள்.

அப்பொழுது பார்ப்பனர்களும், ராஜபுரோகிதர்களும் கலந்து அநேக லக்ஷம் பெறுமான நகைகளை அணிந்து கொண்டிருக்கிற இராணியைக் கங்கையில் இழுத்துச் செல்வது எவ்விதமென்று யோசனை செய்து தீர் மானித்தனர். ஆனால், கங்கையோ ஸ்நானஞ் செய்யுமிடம் மிக ஆழமாயும், பல ராஜ ஸ்திரீகளும் அவரவர்களுடைய தாதிமார்களுஞ் சேர்ந்து ஸ்நானக் கட்டத்தில் நமது மகாராணியை இன்றைக்குக் கங்காதேவி அழைத்துக் கொண்டு போவாளென்று எதிர்பார்க்கிறதாயிருந்தாலும், ஸ்நானம் செய்யுமிடம் பெரிய கூடார, மறைவினால் முப்பக்கமும் மதில்போல் மறைக்கப்பட்டிருந்தது. அந்த மறைப்பைச் சுற்றிலும் பல சிப்பாய்களும், துப்பாக்கியுடன் பாராக் கொடுத்திருந்தனர். ஆதலால், இவர்களுடன் மற்ற ஜனங்களுமிறங்கி ஸ்நானஞ் செய்ய முடியாமற் போயிற்று. -தொடரும்

- http://viduthalai.in/new/page-3/5184.html?sms_ss=blogger&at_xt=4d7a13e77e9ac6c6%2C0