வியாழன், 24 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-44

இத்தகைய உணர்ச்சி எப்போது உயிர்களுக்கு உண்டா கின்றதோ, அப்போதே முக்தி, பரமாத்மாவுடன் ஒற்றுமை நிர்வாணம் கைகூடுகின்றது என்று உபனிஷத்துகள் கூறுகின்றன. ஆனால், இது சங்கராச்சாரியாரின் கொள்கையே ஆகும். நீலகண்டர், இராமாநுஜர், மத்வர் முதலிய பலரும் பல திறப்பட்ட கொள்கைகள் உடையவர்கள். இவர்கள் அனைவரும் உபனிஷத்துகளையே முதல் நூலாக ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்கள். ஒரு சொல்லிற்குப் பல பொருள்களையுணர்த்தும் வட மொழியானது மேற்கண்டவர் களின் மதியை மயக்கிப் பல துறைகளில் அலையச் செய்ததே இதற்குக் காரணம். ஆனால், சங்கராச்சாரியாரின் கொள்கைப்படி ஜீவனுக்கு இத்தகைய ஞானம் (பிரமம், சத்தியம், உலகம், மித்யை) வேண்டுமே ஒழிய, அவனுடைய செய்கை

எப்படியேனுமிருக்கலாம்.
அனுமேத ஸஹஸ்ராண் யப்யத:
குருதே ப்ரஹ்ம காத லக்ஷாணி:
பரமார்த்த விந்த புண்யைர் நச
பானபர் லிப்யத க்வாபீ (பரமார்த்தசாரம்)

பொருள்: ஆட்டையறுத்து ஆயிரம் யாகங்கள் செய்யினும், லக்ஷம் பிரம்மஹத்தி(பார்ப்பனக் கொலை) செய்யினும், உண்மையை அறிந்தவன் புண்ணியத்தினாலும், பாவத்தினாலும் பற்றமாட்டான். இது பரமார்த்தசாரம் என்னும் நூலில் உள்ளது. (இந்தப் பிரமாணம் உணர்ந்ததனால்தான் ஆரியர்கள் குற்றமற்ற பவுத்தர்களைப் பல தடவைகளில் ஆயிரமாயிரக்கணக் காகக் கொல்வித்தார்கள் போலும்)
கீதையிலும், ஜ்ஞானாக்நி: ஸர்வகர்மானி பஸ்மஸாத் குருதேர்ஜுன, ஞானத்தீ எல்லாக் கருமங்களையும், எரிந்துவிடும் என்று சொல்லியிருக்கிறது. புத்த பகவான் நல்லொழுக்கத்தினாலும், புத்த தத்துவ சாக்ஷாத் காரத்தினாலும் மனத்தூய்மை அடைந்தவனே மோட்சத்துக்கு அதிகாரி என்று சொல்லியிருக்கிறார். சூன்னியவாதம் மித்திய மிக ஸுத்ரம், ராகத்வேஷ மோஹக்ஷ யாத்பரி நிர்வாணம் காமம், வெகுளி, மயக்கம் இவைகளின் நீக்கமே முக்தியைத் தரும் என்பது இதன் பொருள். புத்தபகவான் திருவாய் மலர்ந்தருளிய தத்துவ சாஸ்திரங்களை எல்லோரும் எளிதில் உணர்ந்து பயனையுமடையலாம்.

வைதிகர்களைக் குறித்த ஒரு கதை

வைதிகர்களைக் குறித்த ஒரு கதை, இச்சமயம் நினைவிற்கு வந்ததையும் இங்குக் கூறிவிடுகிறேன்.

தென்னாட்டிலிருந்த ஒரு பிரபுவானவர் தம் குடும்பத்தில் அடிக்கடி மரணம் முதலிய கெடுதிகள் நேருவதைக் குறித்து வருந்திப் பண்டிதரான ஒரு பார்ப்பனனை வரவழைத்துத் தம் குடும்பத்தை க்ஷேமமடைவிக்கும் படிக்குப் பிரார்த்தித்தார். அவன் இவரது ஜாதகத்தைக் கொண்டு வரச் செய்து பார்வை யிட்டு, இத் தகைய துன்பங்கள் யமனது வாகன மாகிய எருமைக்கடாவின் கோபத்தால் உண்டாயினவென்றும், ஆதலால், அதன் தாயான பெண் எருமையை மகிழ்வித்தால், தாயின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, பிறகு பிள்ளையினால் தொந்தரவு உண்டாகமாட்டாதென்றும், அதற்கேற்ற யாகம் ஒன்று செய்யவும், அந்த யாக முடிவில் கொம்பு, குளம்பு இவைகளைத் தங்கத்தினால் பொதிந்த பெண் எருமைகளும் தன்னாலி யன்றவாறு பிற பொருட்களும் (சுவர்ணதானம், கோதானம், வஸ்திரதானம், கன்னிகாதானம் முதலியன) தட்சணையாக வழங்க வேண்டுமென்றும் கட்டளையிட்டான்.

பிரபுவும் கட்டளையைச் சிரமேற்றாங்கி யாகமும் நடைபெற்றுக் கொண்டே வந்தது. சில நாள்கள் சென்றதும் வித்து வானாகிய மற்றொரு பார்ப்பனன் அவ்வூருக்கு வந்தவன், யாகம் நடைபெறுவதைக் கேள்வியுற்றுத் தனக்கு ஏதேனும் தட்சணை கிடைக்கு மென்றெண்ணி யாக சாலைக்கு வந்தான். வந்தவிடத்தில் எந்த நூலிலும் இல்லாத புது முறைப்படி யாகம் நடைபெற்று வரவே, சந்தேகத்துடன் ஒரு பக்கமாக ஒதுங்கியிருந்ததைப் பார்த்த பழைய புரோகிதன், வந்தவன் சொந்தக்காரனிடம் உண்மையைத் தெரிவித்து வரும்படியில் மண்ணைப் போட்டு விடுவானோயென்று பயந்தான். இரகசியமாக ஒன்றும் சொல்லவும் தக்க இடமில்லை. உடனே, சமயோஜிதமான ஒரு புத்தி ஏற்பட்டது. ஹோமத்திர வியங்களைக் கையில் எடுத்து இம்மந்திரத்தைச் சொல்லி நெருப்பில் போடும் பாவனையாக வந்தவனுக்குத் தன் கருத்தை வெளியிட்டுப் பிரபுவின் முகத்தில் கரி தடவி, இருவரும் சேர்ந்து தட்சணைப் பொருள்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். அம்மந்திரமாவது:
மஹா மூர்க்கஸ்ய யாகோயம்

மஹசீத தக்ஷிண:
மமாப்யர்த்தம் தவாப்யர்த்தம் விக்நம்
மாகுரு பண்டித ஸ்வாஹா
பொருள்: இந்த யாகம் செய்வோன் அறிவிலிகளுக்குத் தலைவனாவான். இதற்கு அநேக எருமைகள் தானமாக வழங்கப்படும். அவைகளில் உமக்குப் பாதியும், எனக்குப் பாதியும்.

- http://viduthalai.in/new/page-3/4129.html?sms_ss=blogger&at_xt=4d663f18a82e9104%2C0