புதன், 9 பிப்ரவரி, 2011

ஞானசூரியன் தொடர்-36

கைலாசத்தை அடைதலே மோட்சம். அதற்குச் சாதனம் சிவலிங்க பூஜை, சிவலிங்கமென்பது ஆண், பெண் குறிகள் பொருத்தியிருப்பது போலச் சிலையினால் செய்த விக்கிரகம். கோயில்களில் பிரதிஷ்டித்திருக்கிற இத்தகைய லிங்கத்தைத் தீண்டிப் பூசைபண்ண ஆதி சைவர்களுக்கே உரிமையுண்டு.

ஆயினும், ஏனையோர்கள் பூசைக்குரிய பண்டங்களைச் சேகரித்து ஆதிசைவர்களுக்குக் கொடுத்தால் அவர்களின் சிபாரிசை யனுசரித்துப் பரமசிவன் மோட்சத்தையளிக்கச் சித்தமாயிருக்கிறார். ஆயினும், பணக்காரன்தான் சிவ தீட்சை பெற்றுக்கொள்ள உரிமையுள்ளவன். வடநாட்டில் கங்கைக்கரையில் பிறந்த பிராமணன்தான் ஆசாரிய ஸ்தானத்திற்கு உத்தமன். இவை முதலிய வசனங்கள் ஆகமங்களில் காணப்படுகின்றன.

தேவாரம் திருவாசகம் முதலியவைகளைக் கற்றுக் கொடுக்கிற பாடசாலைகளில் மாணாக்கர்களுக்குக் கல்வியும் உணவும் இனாமாக அளிக்கப்படுகின்றன. ஆனால், 1சைவர்கள் தங்கள் இனத்துப் பிள்ளைகளைத் தான் சேர்ப்பார்கள். இத்தகைய பாடசாலைகளில் பெரும் பகுதிகள் நாட்டுக்கோட்டை நகரத்தாரின் உதவியால்தான் நடைபெற்று வருகின்றன.

இச்சைவர்களுக்குச் சொந்தமெனச் சில மடங்களும் அவைகளுக்கு ஏராளமான பொருள் வருவாயுள்ள சொத்துக்களும் உள. இவர்கள் ஏழை மக்களைத் துன்பு றுத்தும் இயற்கையுடையவர்கள் என்று முன்னரே கூறியுள்ளோம். மடங்களின் நிலைமையோ பிறரைக் குறித்த மட்டில் பார்ப்பனத் துறவி மடங்களைவிடக் கஷ்டமாயிருக் கிறது. சிருங்ககிரி முதலிய பார்ப்பனச் சந்நியாசி மடங்களில் காவியுடையணிந்தோ மற்றோருவன் செல்வானானால், மனுஸ்மிருதிப்படி தண்டிக்க அவர்களுக்கு அதிகார மிருந்தும், பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பயந்து அங்ஙனம் செய்வதும் இல்லை.

இக்காலத்தின் நிலைமையை நோக்கி ஒரு வேளையேனும் உணவளித்தோ அளியாமலோ, வந்த வனது உடலுக்குத் துன்பம் இல்லாத வண்ணம் விட்டுவிடுவார்கள். இவர்களோவென்றால், வந்தவன் தங்கள் குலத்தினன் என்று நன்றாய்த் தெரியாத மட்டும் ஒருவித உதவியும் செய்யமாட்டார்கள்.

எதிர் மறையாக, ஒவ்வொரு காலங்களில் பல நாள் பட்டினியால் வாடி பருக்கைக்குப் பஞ்சாய்ப் பறந்துவந்த பஞ்சையனிடத்தில் மடத்திலுள்ள மல்லர்கள் கைகலந்து சண்டை புரிவதுண்டு. வந்தவன் பார்ப்பனத் துறவி யாயினும், மடத்திலுள்ள இல் லறச் சீடர்களும்கூட, அய்யா! பரதேசி யாரே! என்றுதான் அழைப்பார்கள். இன்னும் சிலர், ஓய்! பரதேசி என்றுதான் அழைப்பார்கள்.

ஆனால், இவர்களின் மடத்தில் துறவு பெற்றுக்கொண்ட தங்கள் இனத்தவர் களுக்குத் தம்பிரான் என்ற பட்டம் மடாதிபதியைப் பண்டார சந்நிதி என்பார்கள். அவரை எல்லோரும் வணங்கவேண்டும். அவர்களுக்குக் கீழ், கையேட்டுத் தம்பிரான் என்ற அதிகாரி ஒருவர் உண்டு. துறவு பெற்றுக்கொள்ள விரும்புகிற சைவர்கள் முதன் முதலில் தம்பிரான் உத்தியோகத்தில் நியமிப்பர். லஞ்சம் பெற்றுக் கொண்டு உத்தியோகத்திற்குச் சிபாரிசு செய்யும் அசிஸ்டெண்ட் அதிகாரிக்கும் இத்தகை யோர்களுக்கும் சிறிதேனும் வேற்றுமை இல்லை.

இவ்வளவு, சிரமப்பட்டுத் தம்பிரான் ஆவதில் என்ன நன்மை என்றால், உணவு முதலியவைகள் உடல் உழைப்பின்றி இருந்தவிடத்தில் கிடைக்கும். எங்குச் சென்றாலும் மடத்துச் செலவில் சுகமாக வாழலாம். இந்த மடங்களில் நடக்கும் ஒழுங்கீனங்களைத் தமிழ் நாட்டினர் அனைவரும் அறிந்திருப்பார் களாகையால், விரித்துக்கூற வேண்டியதில்லை. இராமேஸ்வரம், சிதம்பரம், திருவண்ணா மலை முதலிய தலங்கள் சைவர்களின் 2புண்ணிய பூமிகளாம். வியாபிசாரம், களவு, கொலை முதலிய அக்கிரமங்களினால் இவ்விடங்கள் 3காசிக்ஷேத்திரத்தையும் தோற்கடிக்கின்றன.

இந்து சமயத்தினரில் சைவர்களைப் போலவே மற்றொரு சாராரும் உளர். இவர்களை, வைகுண்ட அய்யங்கார் என்று சொல்லுவார்கள். வைகுண்டத்திற்குப் பிரயாணிகளைச் சேர்ப்பதே இவர்களின் முதல் தொழில். இவர்களுக்கு வேதத்தைவிடத் திருவாய்மொழி என்ற தமிழ்ப் பிரபந்தமே பிரபல பிரமாணம். பறையர், செட்டியார், குறவர் முதலிய இவர்களால் இழிவாக நடத்தப்படுகிற இனத்தைச் சார்ந்த பன்னிருவரே இப்பிரபந்தத்தை இயற்றியவர்கள்.

1. இங்குச் சைவர்கள் என்றது அவாந்தரச் சைவர்களில் ஒரு சாரார், பரம்பரைச் சைவ குலத்தில் பிறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சில வகுப்பினரைக் குறிக்கிறது. இவர்கள் திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் முதலிய ஜில்லாக்களில் வசித்துவருகிற வேளாள வகுப்பைச் சேர்ந்த பிள்ளை, செட்டியார் முதலிய பட்டப் பெயர்களை வைத்துக் கொண்டிருப்பவர்கள்.

கொண்டைக்கட்டி முதலியார்கள், தேசிகர்கள் முதலிய சிலரும் இத்தகையோர்களே. ஏனையோர் சமயம் முதலிய தீக்ஷைகளனைத்தும் பெற்றாலும், சைவனென்கிற பட்டப் பெயர் கிடையாது. ஜாதிக் சைவர்களில் தீக்ஷையில்லாத பலரும் உளர். ஆனாலும், சைவர்களே இக்கொடுமையை எவ்வாறு கூறுவது? கொடுமை! கொடுமை!!

2. புண்ணியத்தின் விளை நிலம்

3. காசி க்ஷேத்திரத்தின் வரலாறு இதன் முடிவில் உள்ளது.

- http://viduthalai.in/new/page-3/3089.html?sms_ss=blogger&at_xt=4d52bd1ff46800cd%2C0