சனி, 30 அக்டோபர், 2010

இலங்கை போர்க்குற்ற ஆதாரங்களை டிசம்பர் 15ஆம் தேதி வரை அய்.நா. சபைக்கு அனுப்பலாம்!

ஈழத் தமிழர்களுக்கு வல்லுநர் குழு கோரிக்கை!

நியூயார்க், அக்.28- இலங்கையில் நடந்த போர்க்குற்ற ஆதாரங்களை மின்னஞ்சல் மூலமாக அய்.நா.சபைக்கு டிசம்பர் 15ஆம் தேதி வரை அனுப்பி வைக்கலாம் என்று அய்.நா. வல்லுநர் குழு கூறியுள்ளது.
இலங்கை அரசு படைகளுக்கும் , புலிகளுக்கும் நடைபெற்ற இறுதிகட்ட யுத்தத்தின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல் மற்றும் பன்னாட்டு போர்விதிகள் மீறல்கள் சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க முடியும் என பான்-கீ-மூன் நியமித்துள்ள அய்.நா.வல்லுநர் குழு அறிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான விஷயங்களுக்கு ஆலோசனை வழங்கவென அய்க்கிய நாடுகள் செயலாளர் பான்-கீ-மூன் நியமித்துள்ள வல்லுநர்கள் குழு அறிவித்துள்ள போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் முறையீடுகள் டிசம்பர் 15ஆம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் அய்.நா. சபை செயலாளர் பான்-கீ-மூன் ஆகியோருக்கிடையில் நியூயார்க் கில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஏற்பட்ட ஒப்பந்தத் தின் அடிப்படையில் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை ஆரம்பிப்பதற்கு வல்லுநர் குழு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் இது குறித்து ஆதாரங்களை தெரிந்து வைத்திருக்கும் யாரும் தமக்கு தெரிந்த உண்மைகளை முறையீடுகளா மின்னஞ்சல் மூலம் வல்லுநர் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் தகவல்கள் ரகசியமாக பேணப்படும். அய்.நா.சபை வல்லுநர் குழுவில் இந்தோனேசியாவின் முன்னாள் நீதிபதி மர்சூக்தருஸ்மான் தலைமை பொறுப்பை வகிப்பதுடன், அமெரிக்க சட்ட வல்லுநர் ஸ்டீவன் ரட்னர், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் நல்லிணக்க ஆணைக்குழு உறுப்பினர் யஸ்மின் கூகா ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் பற்றி விசாரிக்க கடந்த ஜூன் 22ஆம் தேதி அய்.நா. ஒரு வல்லுநர் குழுவை உருவாக்கியது. இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயுமாறு இக்குழுவுக்குப் பணிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த வல்லுநர் குழு எல்லாத் தமிழர்களிடம் இருந்து சாட்சியங்களையும், ஆதாரங்களையும், விவரங் களையும் பெற விரும்புவதாக தெரிவித்துள்ளது.
தமிழர்கள் டிசம்பர் 15ஆம் தேதி வரை எங்களை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார். 10 பக்கங்களுக்கு மிகாமல் சாட்சியங்களையும், ஆதாரங்களையும், அல்லது பாதிப்படைந்த விதத்தையும் அனுப்பி வைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். வல்லுநர் குழுவிற்கு தமிழர்கள் அனுப்பி வைக்க தவறினால் சிங்களவர்கள் அனுப்பும் பொய்யான ஆதாரங்களே அவர்களுக்கு கிடைக்கப்பெறும்.
நமக்கு என்ன, என தமிழர்கள் நினைத்து, வெறுமனவே சும்மா இருந்து விட வேண்டாம். எம்மால் ஆன எல்லா முயற்சிகளையும் நாம் செய்து கொண்டே இருப்போம். அதற்கான பலன் விரைவில் கிடைக்கும். நீங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருந்தாலோ, அல்லது உங்கள் உறவினர் கொல்லப்பட்டு, அல்லாது காணாமல் போயிருந்தாலோ, இல்லையேல் பாலியல் துன்பத்திற்கு உள்ளாகியிருந்தாலோ அய்.நா. வல்லுநர்கள் குழுவிற்கு உடனே தெரிவியுங்கள்.
ஆங்கிலத்தில் எழுதுவது கடினமாக இருந்தால் உங்கள் நகரங்களில் உள்ள தமிழ் அமைப்புகளை தொடர்பு கொள்ளுங்கள். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடமையை ஒவ்வொரு தமிழர்களும் செய்ய வேண்டும் என்று அனைத்து தமிழர்களையும் அய்.நா. வல்லுநர் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
எல்லாவிதமான தகவல்களும் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்படும் எனவும், அதுவும் அய்.நா.வின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக பாதுகாக்கப்படும் எனவும் அய்.நா. வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. எனவே உலகத்தமிழர்கள் அனைவரும் விரைந்து செயல்பட்டு சாட்சிகளை உடனே அய்.நா. வல்லுநர் குழுவுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

- http://viduthalai.in/news/index.php?option=com_content&view=article&id=246:2010-10-28-13-34-18&catid=38:2010-09-15-05-14-04&Itemid=55