திங்கள், 4 அக்டோபர், 2010

சிந்திப்பீர் தோழர்களே!

கடவுள் என்னும் கருத்து தோற்றுவிக்கும்போதே அடுத்தவனை ஏய்ப்பதற்கு என்று உணரலாம். இந்த காலத்தில் கூட சிலர் புதிய மனைப்பிரிவு தொடங்கும்போது மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக இருப்பதால் மக்களைக்கவர பக்தியின் பெயரால் ஏதேனும் கோயில் என்று ஒன்றை ஏற்படுத்தி விடுவார்கள். landmark அடையாள இடம் என்பதுபோல் வியாபாரத்திற்கு செய்யத்தொடங்கி, பின்னர் உண்டியல்மூலம் வருவாய் பெருக்குவார்கள். யார் எப்படி பாதிக்கப்பட்டால் என்ன என்று பொதுநல அக்கறை இல்லாமல், சுய நலமே நோக்கமாக, எது எப்படி இருந்தாலும், கோயில் என்பதை அங்கீகரிக்க பார்ப்பனர்கள் வேகமாக முன் வருவார்கள். ஊரைவிட்டு தள்ளி ஆள் நடமாட்டமே இல்லாத, நெடுஞ்சாலை, புறவழி சாலை என்று எங்கு பார்த்தாலும் திடீர் கோயில்களும், பார்ப்பன அர்ச்சகர்களும் இருப்பதைப் பார்க்கலாம். பெரிய உண்டியல்களும் இருக்கும். மனிதனுக்கான தேவைகளை நிறைவு செய்து கொள்ளவே ஊர் ஊராக கோயில் குளம் என்று சுற்றுகிறான் என்கிறார்கள். ஆனால், பக்தியின் பேரால் உண்டியல், மூட நம்பிக்கை என்று பெரிதும் சுரண்டப்படுகிறான். அறிவையும், பணத்தையும் இழக்கிறான். நாம் கேட்பதெல்லாம் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ளான்-சர்வ வியாபி என்றால் எதற்கு எங்கு பார்த்தாலும் கோயில்கள்? தேடி சென்று வழிபடுதல்கள் ஏன்? எல்லாம் அவன் செயல் என்றால் மனிதனின் இன்ப, துன்பங்களுக்கும் அவன்தானே பொறுப்பு? எல்லோரும் இறைவனின் குழந்தைகள் என்றால், தம் மக்களை எவராவது துன்பப்படுத்தி பார்ப்பார்களா? சிந்திப்பீர் தோழர்களே!