திங்கள், 4 அக்டோபர், 2010

சிந்திப்பீர்!

கடவுள் இல்லை என்று சொல்லும்போது ஏதோ இந்து மதக்கடவுளை மட்டும்தான் சொல்லுவதாக எண்ணுகிறார்கள் நண்பர்கள் சிலர். கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று திருத்தமாக கூறுவதன் காரணத்தை புரிந்து கொள்ள வேண்டும். எந்த விதமான கடவுளும் இல்லை, எங்குமே இல்லை என்றுதான் பொருள் ஆகும். மதம் கூடாது என்றால் எம்மதமும் சம்மதமில்லை என்றுதான் பொருள். சொல்வது யாராக இருந்தாலும், சொல்லப்படும் கருத்து எதுவாக இருந்தாலும், அறிவுக்கு வேலை கொடுக்க வேண்டும். எதையும் பகுத்துப் பார்க்கவேண்டும். எப்போதோ சொல்லப்பட்ட கருத்து என்பதால் அப்படியே ஏற்கவேண்டும் என்பது இல்லை. புரட்சிக்கவிஞர் சொல்வதுபோல் வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல் கழுத்து போயினும் கைக்கொள்ளவேண்டாம். திருவள்ளுவர் சொல்வதுபோல் எப்பொருள் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. எப்பொருள் எத்தன்மையதாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. அய்யா தந்தை பெரியார் சொல்வதுபோல் அறிவுக்கு வேலை கொடு. அறிவுக்கு சரி என்று பட்டால் ஏற்றுக்கொள், இல்லை என்று பட்டால் தள்ளிவிடு.
தோழர்களே! மதங்கள் சொல்வது எதுவாக இருந்தாலும் ஏன்? எப்படி? எதற்கு? என்று கேட்க முடியுமா? சிந்தித்தால் பாமரனும் பகுத்தறிவாளன் ஆவான். படித்தவன் படிப்பாளியே தவிர பகுத்தறிந்து பார்ப்பவன்தான் அறிவாளி. சிந்திப்பீர்!