வெள்ளி, 1 அக்டோபர், 2010

அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு


அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் அல்லாமல்
நம்பிக்கையின் அடிப்படையில் என்பது ஆபத்தானது!
உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து அமைதி காக்கவும்!
தமிழர் தலைவர் அறிக்கை
சட்டத்தைச் சீர்தூக்கிப் பார்க்கும் அமைப்புகளாக அல்லாமல் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் நீதி மன்றம் தீர்ப்புக் கூறுவது - எதிர்காலத்தில் பல சிக்கல் களை ஏற்படுத்தும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:
பாபர் மசூதி, ராமர் கோயில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதற்காக கடந்த 60 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கின் தீர்ப்பு - பரபரப்போடு எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு - அலகாபாத் உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகளால் நேற்று (30.9.2010) அளிக்கப் பட்டுவிட்டது.
மூவரும் தனித்தனி தீர்ப்பு
மூன்று நீதிபதிகளும் இணைந்து கருத்திணக்கத் தோடு ஒரே தீர்ப்பாக வழங்கவில்லை. மூவரும் தனித்தனியே எழுதியுள்ளனர். இத்தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள், சட்ட அடிப்படையில் அமைவதைவிட - நம்பிக்கை - நீண்ட காலமாக இருந்து வந்த காரணம் என்பது போன்றவைகளால் அமைந்த விசித்திரத் தீர்ப்பாகும்! வல்லடி வழக்குகளும்கூட!
நம்பிக்கையின் அடிப்படையில்
தீர்ப்பு என்பது ஆபத்தானது!
நம்பிக்கை அடிப்படையில் என்றால், யாரும் எதற்கும் ஆதாரமோ, சான்றோ, சட்ட விதிகளையோ தேடித்தேடி வழக்கின் தீர்ப்பை அமைக்க முடியாது - பெருகும் ஆபத்தான முறைக்கு அது வழிவகுக்கும் அபாயம் உள்ளது.
அதற்கு இந்த அலகாபாத் தீர்ப்பு ஓர் அருமையான விசித்திரத் தீர்ப்பு!
இங்கிலாந்து நாட்டு இலக்கியத்தில் ஒரு சொற் றொடரை Steele and Addison ஆகிய இருவருடைய கட்டுரைகளில் பயன்படுத்தி பின் அதைப் பிரபலப் படுத்தினார்கள்.
‘‘Much might be said on both sides’’
இரண்டு பக்கங்களிலும் நியாயங்கள் ஏராளம் சொல்லலாம் என்று கூறும் நிலையே அது.
யாரையும் சங்கடப்படுத்த வேண்டாம் என்று நினைப் பவர்கள் இதுபோன்ற நிலையை பல வாதங்களிலும், வழக்குகளிலும் எடுப்பதுண்டு.
அதுபோல்தான் இம்மூன்று தீர்ப்புகளும் அமைந் துள்ளன!
எங்கும் பதற்றம் இல்லை
தீர்ப்பு வெளியாகும் முன்பே பாதிக்கப்பட்டவர்கள், இதை ஏற்க இயலாத வழக்காடிகளில் ஒரு சாரார், மேல் முறையீட்டை - அப்பீலை - உச்சநீதிமன்றத்தில் செய் வார்கள் - செய்ய வாய்ப்புண்டு என்று மத்திய அரசு தெளிவாகவே கூறி, யாரும் பதற்றம் அடையாமல் இருந்து, எவ்வித கலவரங்களுக்கும் இடம்தராமல் - சுமுகமான வாழ்வு வாழவேண்டும் என்று அறிவித்து, தக்க முன்னேற்பாடுகளை மும்முரத்துடன் செய்ததால், இந்தியாவின் எந்தப் பகுதிகளிலும் - குறிப்பாக வடக்கே உள்ள பல மாநிலங்கள் உள்பட எங்கும் அமைதி தவழுவது மிகவும் ஆறுதலானது.
அமைதிப்பூங்காவாகத் தமிழ்நாடு!
தந்தை பெரியாரின் சுயமரியாதை - பகுத்தறிவு மண்ணான தமிழ்நாடு, முன்பு போலவே (1992) அமைதிப் பூங்காவாகவே காட்சியளிப்பது அதிசயம் அல்ல; காரணம், மதவெறி மாய்த்து மனிநேயத்தைக் காத்த திராவிடர் இயக்கத்தின்ஆட்சியாகும்!
சட்டக் கோர்ட்டா? நம்பிக்கைக் கோர்ட்டா?
புராண கால கற்பனைகளுக்கும், இதிகாச கால நம்பிக்கைகளுக்கும் மதப் பூச்சு பூசப்பட்டதாலேயே வெறும் நம்பிக்கை அடிப்படையில் ராமர் அங்குதான் பிறந்தார் என்றெல்லாம் இதுபோன்ற தீர்ப்புகளில் எழுதப்படுவது, நீதிமன்றங்களை - சட்ட கோர்ட்டுகள் (Courts of Law) என்பதற்குப் பதிலாக, நம்பிக்கை கோர்ட்டுகளாக (Courts of belief and Faith) ஆக்குவதாக அமைந்துள்ளது. இதன் தீய விளைவு நிகழ்காலத்தில் மட்டுமல்ல, வருங்காலத்திலும் நியாய விரோத தீர்ப்புகள், புற்றீசல்கள்போல் கிளம்ப வழிவகுத்து விடும்.
இராமாயணமே 57 இராமாயணங்கள் உள்ள நிலையில், ராமன் பிறந்த இடம், பிரச்சினைக்குரிய அந்த இடம்தான் என்று சொல்வது - நம்பிக்கை அடிப்படையில்தான் - சட்ட சான்றுகள் அடிப்படையில் அல்ல என்ற நிலையே உள்ளது!
இறுதித் தீர்ப்பை எதிர்பார்க்கவும்
எப்படி இருப்பினும், நாடு அமைதிப்பூங்காவாகவே தொடரவேண்டும்.
ஒருபோதும் மதவெறி காரணமாக அமளிக்காடாக மாறக்கூடாது!
சமாதான சகவாழ்வின் மூலம்தான் நம் நாடு முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் காண முடியும்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு 3 மாதங் கள் அவகாசம் உள்ளது - எனவே, இதற்காக வெற்றிக் கூச்சலோ, தோல்வி மனப்பான்மையுடன் கலவரங் களிலோ எவரும் ஈடுபடுவதோ கூடாது, மீண்டும் சட்டத்தின் ஆளுமையின் இறுதித் தீர்ப்பையே எதிர்பார்ப்போமாக!

கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
1.10.2010