சனி, 30 அக்டோபர், 2010




கேள்வி: டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பிறப்பு சாதனை நிகழ்த்தியவருக்கு நோபெல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை போப் கண்டித்துள்ளாரே? - பா.வளர்மதி, சிக்கல்

பதில்: பாவம், போப். பரிசுத்த ஆவி மூலம் திருமணமாகாமலேயே கன்னிமேரிக்கு குழந்தை பிறந்தது என்று நம்புபவர், சாட்சியத்துடன் பரிசோதனைக்குழாய் மூலம் பிறந்த குழந்தைக்காக கண்டனம் தெரிவிப்பது எவ்வளவு பெரிய முரண்பாடு! எல்லாம் அவன் செயல் என்றாவது கூறி அவர் தப்பித்துக் கொண்டிருக்கலாமே!

கேள்வி : திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ. இரண்டரை கோடி மதிப்பில் தங்கக் கிரீ டத்தைக் காஞ்சி சங்கர மடம் வழங்கி உள்ளதே? - த. சுரேஷ், நாச்சியார்கோவில்

பதில் : பிறழ் சாட்சிகள் மூலம் தன்னைக் காப்பாற்ற திருப்பதி ஏழுமலையானுக்கு லஞ்சம் போலும்!

கேள்வி: தேர்தலே இன்னும் அறிவிக்கப் படவில்லை. ஆனால், அரசியல் கட்சி அல்லாத நீங்கள் தி.மு.க.வுக்குப் பிரச்சாரத் திற்குக் கிளம்பிவிட்டீர்களே? - வ.கணேசன், சென்னை _ 6

பதில் : தி.மு.க. ஆட்சி _ திராவிடர்களின் மீட்சி _ இது தொடரவேண்டும் என்பது இலட்சியப் பயணம். நாங்கள் எப்போதும் அடுத்த தலைமுறையின் நல்வாழ்வு பற்றியே சிந்திப்பவர்கள்; எனவே, அடுத்த தேர்தல் பற்றி கவலைப்படாது, தி.மு.க. ஆட்சி மூலமே அடுத்த தலைமுறையின் மான வாழ்வு, உரிமை வாழ்வு தொடரும் என்று நம்புவதால்,போர்ப்படைகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டியதுதானே அதன் கடமை?

கேள்வி: உத்தரப் பிரதேசத்தில் இங்கிலீஷ் மொழிக்குக் கோயிலாமே! - நா.சென்னியப்பன், சித்தாமூர்

பதில்: தமிழ்த்தாய்க்கு கோயில் கட்டி யதையே தந்தை பெரியார் கண்டித்தார் _ இது ஒரு கோமாளிக்கூத்து. உ.பி.யில்., அதற்கு கல் லறை கட்டாமல் இருந்தால் அதுபோதுமே!

கேள்வி: இந்து மதத்தில் உள்ளது போல வேறு மதங்களில் கடவுள் அவதாரங்களை எடுத்ததுண்டா...? - மீசை பிலவேந்திரன்,சிவகாசி

பதில்: இல்லை; இல்லவே இல்லை. இந்து மதத்தில்கூட மும்மூர்த்திகளில் _ சிவனோ, பிரம்மனோ அவதாரம் (கீழேஇறங்கி வருதல் என்று பொருள்) எடுத்ததில்லையே!

கேள்வி: சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இதைத்தான் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்களே, அது சரியா? - வரத. மணிமேகலை சென்னை _ 113

பதில்: தவறு; மாபெரும் தவறு. பிள்ளை கள்மீது திணித்தல் கூடாது. அவர்கள் எந்த வகையான படிப்பைத் தேர்வு செய்கிறார் களோ அதையே தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும்.

கேள்வி: கோயில்களில் குழல் விளக்கு களில் உபயம் என்று கூறி கொட்டை எழுத்துகளில் தங்கள் பெயர்களை எழுதி வைக்கிறார்களே?

பதில் : விளம்பரம் விரும்பாத தர்மவான்கள்!

கேள்வி: பத்திரிகைகளில் பெயர் வர வேண்டும் என்பதற்காக சிலர் பேசுவதாகத் தெரிகிறதே? - வி.சுந்தரன், ஈரோடு_1

பதில்: சிலர் என்ன, பலர் அன்றாடம் பேசி சவால் விட்டு தாங்கள் உயிருடன் இருப்பதை உலகுக்கு அறிவிக்க அது ஒரு வழி _ அவர்களுக்கு!

கேள்வி : பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் இதுவரை தண்டனை பெறாததற்குக் காரணம், அவர்கள் விளம்பரம் பெற்ற அரசியல் தலைவர்கள் என்பதாலா? - மு.முபாரக், இலந்தங்குடி

பதில்: இந்தக் கேள்விகளை பிரதமர், உள்துறை அமைச்சர் _ ஆகியவர்களை நோக்கிக் கேட்டால்தான் சரியான விடை கிடைக்கும்.

கேள்வி: திராவிட இயக்கத்தால் பெரிய பதவிகளுக்குச் சென்ற சிலர் சங்கர மடத்திற்குச் செல்கிறார்களே? - செங்கை பூபதி

பதில்: அடுத்து வைகுண்ட பதவி, கைலாச பதவிக்கு முன் ஏதாவது பதவி கிடைக்காதா என்ற நப்பாசைதான் _ மானங்கெட்ட ஜென்மங்கள்!

- http://www.viduthalai.periyar.org.in/20101030/snews11.html