செவ்வாய், 12 அக்டோபர், 2010

உடையை விற்று புத்தகம் வாங்கியவர்


குழந்தைகளாக இருக்கும்போது என்னென்ன பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகிறோமோ, அவையே வாழ்க்கையின் இறுதிவரை நம்மைப் பின்தொடர்பவையாக அமைந்துவிடுகின்றன.

அதிகாலையில் எழுதல், உடற்பயிற்சி செய்தல், படித்தல், நேரத்திற்குப் பள்ளி செல்தல், ஆசிரியர் கற்றுத் தரும் பாடங்களை ஆர்வத்துடன் கேட்டல், ஒழுக்கத்துடன் நடத்தல்... என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இவற்றுடன் நூல்களைப் படிக்கும் பழக்கத்தையும் குழந்தைகள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இளைஞர்களாகும்போது, பல்துறை அறிவு பல வழிகளில் கை கொடுத்து உதவும். நாம் படிப்பதற்கு எல்லை இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை.

படித்தால் மட்டும் போதுமா? படித்ததை நினைவில் நிறுத்தி, தக்க நேரத்தில் அறிவாற்றலை வெளிப்படுத்த வேண்டும். படிப்பறிவோடு பகுத்தறிவும் வேண்டும். அப்படி, சிறு வயதிலிருந்தே நூல்களைப் படிப்பதில் ஆர்வமுடையவராக இருந்தவரே அறிஞர் ரூசோ.

ரூசோவின் முழுப்பெயர் ஜீன் ஜாக்ஸ் ரூசோ. குழந்தையாக இருந்த போதே தாயை இழந்தார். சந்தர்ப்ப சூழ்நிலை, தந்தையையும் இவரிடமிருந்து பிரித்துவிடுகிறது. சிற்றன்னையிடம் வளர்கிறார். 14 வயதில் மாஸாரான் என்ற வழக்குரைஞரிடம் வேலைக்குச் சேர்கிறார். நீதிமன்றத் தீர்ப்புகளை நகல் எடுக்கும் வேலையினைச் செய்கிறார். அடிமைபோல் நடத்தப்பட்டதால் அங்கிருந்து வெளியேறுகிறார்.

பின்பு,டூகோமான் என்ற சிற்பியிடம் வேலைக்குச் சேர்கிறார். அங்கும் அடிமைபோல நடத்தப்பட்டதால் வெறுப்பு ஏற்பட, படிப்பின் மீது கவனம் செலுத்துகிறார். எப்போது பார்த்தாலும் ஏதாவதொரு நூலினைப் படித்துக் கொண்டே இருக்கிறார். ரூசோ மனிதர்களோடு பேசியதைவிட நூல்களுடன் பேசியதே அதிகம். நூல்களே அவரது ஆசான்.

புதுமையாகப் படிக்க வேண்டும் _ புதுமைகளைப் படைக்க வேண்டும் _ புதுமையாகச் சிந்திக்க வேண்டும் _ புதுமைக் கருத்துகளை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற எண்ணங்களே அவரது மூளையை _ மனதை ஆக்கிரமித்திருந்தன.

வழக்கம்போல் ஒரு நாள் புத்தகக் கடைக்குச் செல்கிறார். ஒரு புத்தகம் அவரது கவனத்தை ஈர்க்கிறது. வாங்குவதற்குக் காசு இல்லை. ஆனால், வாங்கிவிட்டார். எப்படி வாங்கினார்? தனது உடைகளை விற்று வாங்குகிறார். சாப்பிடாமல் புத்தகத்தைப் படிக்கிறார். வறுமையோ அவரை வாட்டியது. எத்தனை நாள்கள் பட்டினியாக இருக்க முடியும்? நாட்டைவிட்டு வெளியேறுகிறார்.

இத்தாலி சென்றால் வறுமை நீங்கிவிடும் என நினைத்துச் செல்கிறார். அங்கு, டிபான்ட்லென் என்ற பாதிரியாரைச் சந்திக்கிறார். ரூசோவின் திறமையையும் அறிவாற்றலையும் பார்த்து வியக்கிறார் பாதிரியார். டி.லாரன்ஸ் என்ற பெண்ணிடம் ரூசோவை அறிமுகப்படுத்துகிறார். ரூசோவின் அறிவாற்றலைக் கண்டு வியந்த அப்பெண்மணி, கல்வி கற்க ஏற்பாடு செய்து அனைத்து உதவிகளையும் செய்கிறார்.

ரூசோவின் அறிவாற்றல் பிரகாசிக்க பாரிசே சரியான இடம் என நினைத்து பாரிஸ் அனுப்புகிறார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால், ஒரு பெண் இருப்பாள் என்பது ரூசோவின் வாழ்வில் லாரன்ஸ் மூலம் நிரூபணமாகிறது.

பாரிசில் இசையின் புதிய பரிமாணங்களை ஆராய்கிறார். பாரிஸ் இசைக் கழகம் சான்றிதழ் கொடுத்துப் பாராட்டுகிறது. அங்கு கலை, இலக்கியம், தத்துவத்தில் மேதையான டிடேரோவின் நட்பைப் பெறுகிறார். பல சாதனைகள் படைக்கிறார்.

கலைகளும் விஞ்ஞானமும் வளர்ந்ததால் ஒழுக்கம் வளர்ந்துள்ளதா? அல்லது தாழ்ந்துள்ளதா என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியினை டிஜோன் கலைக் கழகம் நடத்தியது. அதில், ரூசோவின் கட்டுரைக்குப் பரிசு கிடைக்கிறது. தொடர்ந்து பல போட்டிகளில் கலந்து வெற்றிவாகை சூடுகிறார்.

1760 இல் ஜீலி என்ற நூலை வெளியிடுகிறார். பாரிசில் இந்நூல் பெரும் பரபரப்பையும் எழுச்சியையும் ஏற்படுத்துகிறது. 1762 இல் எழுதிய எமலி என்ற நூல் புகழின் உச்சிக்கே ரூசோவைக் கொண்டு செல்கிறது.

இலக்கியத்தில் தமக்கு ஏற்பட்ட ஈடுபாடு, மேற்கொண்ட முயற்சி, தாம் படைத்த இலக்கியங்களை ஏற்றுக் கொள்ள இயலாதவர்களால் ஏற்பட்ட இன்னல்களை, எதிர்காலச் சந்ததியினரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். எதிர்கால எழுத்தாளர்கள், தமக்கு ஏற்படுகின்ற இன்னல்களை எப்படிச் சந்திக்க வேண்டும் என்பதற்காக மகக் கடிதங்கள் என்ற நூலினை எழுதி வெளியிடுகிறார். உரையாடல், சிந்தனைகள் என்ற நூல்களும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இவற்றையே தம் கொள்கைகளாகக் கொண்டு தமது படைப்புகளிலும் பிரதிபலிக்கச் செய்தவர்.

பரிசுகள், பாராட்டுகளோடு பல நூல்களையும் படைத்து ரூசோ இன்றும் புகழ் பெற்றிருக்கக் காரணம், இளமையில் நூல்களைப் படிப்பதில் அவருக்கிருந்த ஆர்வமும், அறிவை வளர்த்துக் கொண்டவிதமும், வளர்த்த அறிவாற்றலைச் சரியான இடங்களில் பயன்படுத்திய முறைகளும்தானே!

தாய், தந்தை இல்லாத நிலையில், வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ரூசோவே நூல்களைப் படிப்பதில் ஆர்வமாக இருந்ததோடு, தானும் பல நூல்களைப் படைத்துச் சாதித்துள்ளார். அப்படியென்றால், பெற்றோரின் அரவணைப்பில் _ அன்பில் வாழும் நீங்கள் எவ்வளவு நூல்களைப் படிக்க வேண்டும் _ படைக்க வேண்டும்?

செல்வா

- http://periyarpinju.com/2010/september/page04.php