வெள்ளி, 1 அக்டோபர், 2010

2010 ,செப்டம்பர் 29 ல், புதிய கோள் கண்டுபிடிப்பு..!


நமது சூரிய குடும்பம் போலவே, இரவு வானில் தெரியும் விண்மீன்களுக்கும் குடும்பம் உண்டு; அதனைச் சுற்றும் கோள்களும் உண்டு. நம் சூரியனைவிட சிறிய, சிவப்பு குள்ள விண்மீன் ஒன்றை, சுமார் 20.3 ஒளியாண்டுகள் தொலைவில், 2005, ஆகஸ்டில் கண்டுபிடித்தனர்.அதற்கு கிளிஸ் 581 (Gliese 581 ) என பெயரும் வைத்தனர். அப்போது அதனைச் சுற்றும் கோளையும் கண்டனர்.இதன் பெயர் கிளிஸ் 581 ப என பெயர் சூட்டப் பட்டது . அது நம் பூமியைப் போல, 10 மடங்கு நிறை உள்ளது; அதாவது நம் சூரிய மண்டல, நெப்டியூனின் அளவு இருக்கும்.இந்த கோள், இந்த சிவப்பு குள்ள விண்மீனை 5 .4 நாளில் சுற்றுகிறது . இந்த சிவப்பு குள்ள விண்மீன், விண்வெளியில் உள்ள துலா ராசி விண்மீன் படலத்தில் உள்ளது.

சூரியன் நமது பால்வழி மண்டலத்திலுள்ள, ஓரியன் கைகளுக்குள் உள்ளது.கிளிஸ் 581 நம் சூரியனின் நிறையில் மூன்றில் ஒரு பகுதிதான். இது சூரியனுக்கு அருகிலுள்ள விண்மீன்களில், 87 வது இடத்தில் இருக்கிறது. இதன் மையத்தில், ஹைடிரஜன் மிகக் குறைந்த வேகத்திலேயே எரிகிறது. இந்த விண்மீன் நம் சூரியனின் அளவில் 0 ௦.2 % பிரகாசத்துடன்மட்டுமே இருக்கும்.

அதன் மேல் பகுதி வெப்பம் 2,926.85 °C / 5,300.33 °F ஆக உள்ளது. நமது சூரியனின் மேற்பரப்பு வெப்பம், 5,505 °C / 9,941 °F

.கிளிஸ் 581 ன் மற்றொரு கோள் ஒன்றினை ஏப்ரல் 2007 ல் கண்டுபிடித்தனர்.இதன் பெயர் கிளிஸ் 581 c . இதுவரை கண்டுபிடிக்கப் பட்ட வெளிக்கோள்களில்,இதுதான் மிகக் குறைந்த நிறை உடையது என அப்போது கருதப் பட்டது . மேலும் இது நம் பூமி போன்ற வாழிட சூழல் உள்ளதாகவும் கூறப் பட்டது. ஆனாலும் இதன் மேற்பரப்பு வெள்ளியின் தன்மை கொண்டது என கருதப் பட்டதால், இது உயிர் வாழும் சூழலில் இல்லை.இதன் மேற்பரப்பு வெப்பம் -3 °C --40 °C .இது 13 நாட்களில் அதன் சூரியனை சுற்றுகிறது. அப்போதே, .கிளிஸ் 581 ன் அடுத்த கோளும் கண்டறியப்பட்டது. பெயர் கிளிஸ் 581 d .இது நம் பூமியைப் பூமியைப் போல 7 மடங்கு பெரியது. நமது யுரேனசின் அளவு இருக்கும். இது கிளிஸ் 581 ஐ 66 .8 நாட்களில் சுற்றும். இதுவும் கூட உயிர்கள் வசிக்கும் சூழல் உள்ளதாக சொல்லப் பட்டது.அதன் பின், கிளிசின் அடுத்த கோள், 2009 ,ஏப்ரல் 21 ம் நாள், கண்டுபிடித்ததாக அறிவிக்கப் பட்டது. இதுவே, மிகக் குறைந்த நிறையுள்ள வெளிக்கோள். இது பூமி போல 1 .9 மடங்கு நிறை.ஆனால் கிளிஸ் 581 ஐ 3 .4 நாளில் சுற்றிவிடும்.

கிளிஸ் 581 ன் அடுத்த கோள் 2010 , செப்டம்பர் 29 ல் கண்டுபிடிக்கப் பட்டதாக அறிவிக்கப் பட்டது. இதனை , ஹவாய் தீவிலுள்ள வானோக்கு நிலையமான W. M. Keck Observatory மூலம் கண்டுபிடிக்கப் பட்டது. இது ஓர் இறந்த எரிமலையான மௌனா கியா ( Mauna Kea ) மேல் அமைக்கப் பட்டுள்ளது. இங்குள்ள தொலைநோக்கி ஆடியின் விட்டம் மட்டும் 10 மீ. உலகின் இரண்டாவது பெரிய தொலை நோக்கி இது. கிளிஸ் 581 ன், இந்த கோளுக்கு, கிளிஸ் 581 g என பெயரிடப் பட்டுள்ளது.இதனை,வானவியல் பேராசிரியர்,ஸ்டீவன் வோக்ட் ( Steven Vogt), கலிபோர்னிய பல்கலைக் கழக சாண்டா க்ருசும்(Santa cruz ) , மற்றும் அவருடன் பணியாற்றுபவரான , வாஷிங்டனின், கார்னேஜி நிறுவனத்தைச் சேர்ந்த பால் புட்லரும் (Paul Butler) இணைந்த குழு கண்டுபிடித்துள்ளது

இது தன் சூரியனான கிளிஸ் 581 ஐ, 37 நாட்களில் சுற்றும்.அதன் தாய் விண்மீனிலிருந்து 0௦.146 வானியல் அலகு தொலைவில் உள்ளது. இது நம் பூமி போல 3 .1 -- 4 .3 மடங்கு நிறையும்1 .3 --2.0 மடங்கு ஆரமும் உள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த கோள், நம் பூமி போலவே,1 .3 --1 .5 மடங்கு கற்பாறை யினாலும், 1 .7 --2 மடங்கு நீரினாலும் ஆனது என கருதப் படுகிறது. இதன் மேற்பரப்பு ஈர்ப்பு விசையும், பூமியினதைப் போல 1.1 -1.7 மடங்கு உள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.இங்கு உயிரினம் வாழும் சூழல் உள்ளதாவும் கருதப் படுகிறது.

கிளிஸ் 581 ன் , 581 g கோளில் நிச்சயம் , அதாவது 100 % உயிரினம் இருக்கும் என ஸ்டீவன் வோக்ட் உறுதியாக கூறுகிறார். ஆனால் அது மற்றவர்கள் சொல்வதுபோல, வேற்றுகிரக வாசியாக இருக்க வேண்டியதில்லை. அவை பாக்டீரியா , அதற்கு இணையான பாசி வகையாக கூட இருக்கலாம். இதுதான் பூமியின் தனித்துவம் என கருத்து தெரிவித்துள்ளார் ஸ்டீவன் வோக்ட் .எதிர்காலத்தில் நாம் இந்த கோளுக்கு சென்று பார்க்கலாம்.


-http://www.facebook.com/notes/mohana-somasundram/2010-ceptampar-29-l-putiya-kol-kantupitippu/162657473747116