செவ்வாய், 15 மார்ச், 2011

ஞானசூரியன் தொடர்-52

வயது முதிர்ந்த ராணியோ, இருக்கப்பட்ட விலையுயர்ந்த எல்லா நகைகளையும் அணிந்து பல தாதிகளுடனும், ராஜஸ்திரீகளோடும் தனது புத்திரனாகிய ராஜனோடும், நான் இன்றைக்குக் கங்கையோடு சமமாகக்கலந்து வாழப் போகிறேனென்று யாத்திரை சொல்லிக் கங்கை வருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அக் கிழராணியைச் சூழ்ந்திருந்த பெண்களெல்லோரும் ஒவ்வொருவருடன் ஒவ்வொருவரும் பலமாகக் கோத்துப் பிடித்துக் கொண்டிருந்தனர். கிழ ராணியின் முப்பக்கங் களிலுமிருக்கிற பெண்கள் அடிக்கடி மாற்றி நின்று கொண்டிருந்தார்கள்.

இப்படியிருக்கப் பார்ப்பனப் புரோகிதர்கள் அங்குமிங்குந்திரிந்து ஒருவருக்கொருவர் முணுமுணுத்துக் கொண்டும் மார்பைத் தடவி நெடு மூச்சுவிட்டுத் துக்கித்துக் கொண்டும் இருந்தார்கள். அத்தருணத்தில் வரிசையாய் நின்று கொண்டிருந்த தாதிகளில் ஒருத்தியைக் கங்காதேவி நீரிலிழுத்துவிட்டாள். அவர்களோ, முன்னமே ஒருவருக்கொருவர் சேலையை முடிபோட்டுக் கொண்டிருந்ததாலும், கைகளை ஒருவருக் கொருவர் பலமாகக் கோத்து உறுதியாகப் பிடித்துக் கொண்டதனாலும், நாலு, அய்ந்து தாதிகள் உடனே கங்கையில் விழுந்துவிட்டார்கள். எல்லோரும் ஒன்றுபோல ஒருவருக்கொருவர் பலமாய்க் கைகோத்து இழுபட்டு விழுந்தவர்களையும் கூட விழுந்தவர்களையும் வலித்து இழுத்து யாவரும் கரையேறினார்கள்.

இவ்விதம் கங்கையில் இழுபட்டு விழுந்த தாதியும் உயிர் தப்பிப் பிழைத்துக் கொண்டாள். பிறகு, ராணியிடத்தில் மந்திரியும், ராஜாவும் கலந்துபேசி, இனிக் கங்கைதேவி தங்களை இன்றைக்கு அழைத்துப் போகமாட்டாள்; நாளைக்கு எவ்விதமான பூசை போட்டாவது கங்கையை வரவழைப்போம். பிராமணர் களிடத்தில் வேண்டிய விசாரணை செய்து நன்றாகத் தெரிந்துகொண்டு கங்கையோடு தங்களை அழைத்துப் போகாததனால் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லித் தாயாராகிய ராணியை ஸ்நானம் பண்ண வைத்துத் தங்கள் வசிக்கும் விடுதிக்குச் சென்றுவிட்டார்கள். பிற்பாடு, மந்திரியும் ராஜாவும் கலந்து புரோகிதரையும் மற்றும் பல பார்ப்பனரையும் விசாரித்ததில், அவர்கள் சொல்லும் சமாதானங்கள் வருமாறு: கங்காதேவி பாவிகள்நிறைந்த இடத்திற்கு வரமாட்டாள். ஆதலால், ராணி தனியாகவே நீரில் இருக்கவேண்டும். கங்கையில் ஸ்நானத்திற்கு வரும் ஜனங்கள் சிப்பாய்களால் தடை செய்யப்படாமலிருக்க வேண்டும். பாக்கியுள்ள தாதிகளும், ராணியினுடைய சரீரத்தைத் தொடாமலிருக்க வேண்டும். மறைப்புக்குள் ராணி இருக்கக்கூடாது. சில பிராமணர்கள் அங்கிருந்து பூசை செய்து கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் கங்கை வருவாள். இன்றைக்கு அங்கு வந்தவர்களில் யாரோ பாபிகளிருந்திருக்கலாம். ஆதலால், ராணியைக் கங்கா தேவி தொடாமற்போனதென்றாலும் மற்றொரு தாதியை இழுத்ததற்குக் காரணம், அவள் ஜென்மாந்திரத்தில் பெரிய புண்ணியம் செய்தவளாயிருப்பாள்.

பாவங்களில் யாதோ சிறிது சம்பந்தமிருக்கும். அதனால்தான் இவளை இச்சமயத்தில் அழைக்காமல் இருந்தது. இவ்வாறு விஷயங்களைச் சொல்லி முடித்த பின், அவர்கள் எல் லோரும் போய் விட்டார்கள்.

பிற்பாடு, மந்திரி யும், ராஜாவும் விலை யுயர்ந்த சாமான் களைச் சன்மானமாக எடுத்துக்கொண்டு போய்க் காசி ராஜாவைத் தரிசித்தபின், இந்தக் கங்காதேவி அழைப்பு விஷயத்தைப் பற்றிச் சிறிது சம்பாஷணை நடந்தது. அப்போது பல பிராமணர்கள் இருந்த காரணத்தால், காசி ராஜாவானவர், ராஜா கேட்ட விஷயத்தைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. சிறிது நேரம் பொறுத்து, இவ்விருவரையும் அரண்மனைக்குள் அழைத்துச் சென்று, காசி ராஜாவானவர் துக்கத்தோடு உள்ள விஷயத்தை உண்மையாய்ச் சொன்னார். அப்போதே இவர்களைத் தாக்கீது செய்து, நான் சொன்ன விஷயம் பிராமணர் களுக்குத் தெரிந்துவிட்டால், எவ்வாறாயினும் சூழ்ச்சி செய்து என்னைக் கொலை செய்துவிட எத்தனிப்பார்கள். அதனால் யான் சொன்ன விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது. தாங்களும் இவ்வூரைவிட்டு ராணியை அழைத்துக் கொண்டு தங்கள் சுயராஜ்ஜியத்திற்குப் புறப்பட்டுப் போங்கள் என்று சொன்னார். அதற்கு இந்த ராஜாவினுடைய மந்திரியார், நான் இதற்குத் தகுதியான ஏற்பாடு செய்து, தாங்கள் சொன்ன விஷயத்தைச் சரியாகத் தடுத்துவிடுகிறேன். எனக்கு மூன்று மாத காலம் மந்திரி வேலை கொடுங்கள் என்று சொன்னார். அதற்குக் காசிராஜா இசைந்து, அந்த மந்திரியாருக்குக் காசிராஜாவின் மந்திரியின் உத்தியோகத்தை ஆறு மாத காலத்துக்குப் பார்க்கும்படியாகக் கொடுத்துவிட்டார். கங்கையோடு சேரப்போன ராணியும், மகாராஜாவும், ராஜாங்கமும், திரும்பி ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்.

பிறகு இந்தத் தமிழ் மந்திரி, காசிக் கங்கையில் எவ்வாறு ஜனங்கள் இழுக்கப்பட்டுப் போகிறார்கள் என்பதை விசாரணையில் விளங்கிக் கொண்டார். அது விபரமாவது: காசி நகரத்தில் கருவெட்டல் நிறுத்தப்பட்ட பிற்பாடு, அந்நாட்டிலிருக்கும் பார்ப்பனர்களும் புரோகிதர் களும் அந்நாட்டில் பிரசித்திபெற்றுள்ள தோணியோட்டி களும் வஸ்தாதுகளாகிய ஒருவிதக் கொலைகாரச் சோம்பேறி மடையர்களும் ஒற்றுமையுடன் கலந்து செய்யும் நிகழ்ச்சியாம். தோணியோட்டிகளும், சோம்பேறிகளும் தண்ணீரில் 3 அல்லது 4 மணிநேரம் மூழ்கிக் கிடக்கப் பழகி, ஜனங்கள் ஸ்நானம் பண்ண இறங்கும்பொழுது கூடவே அவர்களும் இறங்கிக் காலைப் பிடித்துக் கொண்டு தண்ணீருக்குக் கீழாகவே ஒரு மைல் தூரங்கொண்டு போய்க் கொலை செய்து, நகைகளைக் கொள்ளை கொள்ளுவதும் வழக்கமாம். இந்த நகையில் கொலை பண்ணுகிறவனுக்கும், புரோகிதனாகிய கங்கா புத்திரனுக்கும் சமமான பங்குள்ளதாம். -தொடரும்

- http://viduthalai.in/new/page-3/5342---52.html?sms_ss=blogger&at_xt=4d7ef406fd124525%2C0