வியாழன், 10 மார்ச், 2011

ஞானசூரியன் தொடர்-50

இவ்வாறு பவுராணிக மதத்திலுள்ள முக்தி முறைகளை ஜனங்களுக்குப் போதித்துப் பலவிடங்களிலும் பலவிதமாகப் பார்ப்பனர்கள் மனிதர்களைக் கொலைபுரிந்து ஜீவித்து வந்தார்கள். இப்படிச் செய்து வந்ததில், உதாரணமாக ஒன்றை மட்டும் எடுத்து விவரிக்கிறேன்.

காசி க்ஷேத்திரமென்கிற நகரத்தில் இறக்க முக்தி யென்று ஜனங்களுக்கு ஓதியுணர்த்தினர். அக்காரணத்தால் காசிக்கருவெட்ட லென்றவோர் படுகொலை நிகழுமிடமும் ஏற்பட்டு ஆங்குப்படு கொலைகளும் நடந்துள்ளன. எவ்வா றெனின், பார்ப்பனர்கள் இப்போது நடப்பதுபோலவே அங்குமிங்குஞ் சென்று, காசியிலிறக்க, தரிசிக்க, நினைக்கப் புண்ணியமுண்டென்றும், மோட்சம் உண் டென்றும் ஜனங்களுக்குப் போதித்து வந்தார்கள். ஆதலால், மனிதர்கள் இக்காலத்தில் போகிறது போலவே, காசிக்கு யாத்திரை போய் வந்தார்கள்.

அப் பொழுது காசி நகரத்திலுள்ள பார்ப்பனர்கள் கோடீஸ்வரர் களாக இருந்ததாகவும், சொல்லுகிறார்கள். தெய்வ பக்தியும், குரு விசுவாசமும் முற்காலத்தில் அதிகமாக மக்களுக்கு மூடத்தன்மையாக இருந்ததென்று தெரியவருகிறது.

அப்படியே தனப்பெருக்கும், ஞானமின்மையும் நிரம்பியி ருந்த காலம் அல்லவா? காசி யாத்திரையை எண்ணி யெண்ணி வயது முதிர்ந்தவர்களும், சிறுவயது உடைய வர்களும் குடும்பசகிதமாகக் காசி யாத்திரை செய்து புண்ணியம் சம்பாதித்து வருவோமென்றும், எண்ணிப் பணத்தை ஏராளமாய் எடுத்துக்கொண்டு குடும்ப சகித மாய்ப் போகும்பொழுது, வழியில் அக்காலத்திலுள்ள திருடர், வழிபறிப்போர் முதலாகிய பல ஈடையூறுகளையுங் கடந்து, காசி நகரத்தை அடைவார்கள்.

இக்காலத்தில் நிகழ்வதுபோலவே அக்காலத்தில் யாத்திரைக்காரர்களுக்கு உபகரிப்போராகிய பார்ப்பனர்களும், அவர்களுக்கு உடனிற்போரும் இவர்களை அழைத்து இனிமை கூறி, இட வசதி முதலானவைகளைச் செய்துவருவதும் வழக்கம்.

அவர்கள் பிறகு காசியிற் செய்யும் சடங்குகளாகிய ஸ்நானம், தரிசனம், சிரார்த்தம், யாத்திரை, சந்தர்ப்பணை, கோதானம், பூதானம் முதலிய கிரியைகளின் வழியாக இவர்களிடத்திலிருக்கிற தனத்தை, எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பதுபோலத் தந்திரமாய்க் கசக்கி எடுப்பது இவர்கள் நீண்டகால உத்தியோகமாம்.

இவற்றைச் செய்து முடித்த பின்னர், அவர்களிடம் பணங்களும் அழகுள்ள பெண்களும் இருக்கக் கண்டால், கீழ்வருமாறு உபதேசிக்க ஆரம்பிப்பார்கள். அஃதாவது பார்வதி சமேதாகப் பரமசிவனும் மற்றுமுள்ள தேவகணங் களும் ஒன்று சேர்ந்து வந்து மரணத் தருவாயில் காட்சி கொடுத்து முக்தி கொடுக்குமிடம் இவ்விடத்தில் ஒன்றி ருக்கிறது. அஃது பல இருடிகளும், இராஜாக்களும், பிராமணர்களும், தபசிகளும் தங்கள் சரீரத்தை இழந்து முக்தி பெற்ற இடமாகும்.

அவ்விடத்தை அடைந்து தரிசனஞ் செய்வது ஜென்மாந்திரங்களில் செய்த புண்ணியமில்லாமற் கிட்டுவது அருமை. பெரிய தபசிகளும், ஞானிகளும் பிராமண விசுவாசிகளும் ஆகிய புண்ணிய புருடர்களுக் காகவே அவ்விடம் சிவபெருமானால் அமைக்கப்பட்டது என்று பார்ப்பனர் கள் கூட்டங்கூட்ட மாகப் பல வட மொழிப் பாட்டுகளை பிரமாணமாகப் பிதற்றி, யாத்திரைக் காரர்களுக்குப் போதிப்பார்கள்.

இதைக் கேட்ட யாத் திரைக்காரர்கள் விருப்புற்று, சுவாமிகளே! எங்களை அப்புண்ணிய இடத்தைத் தரிசிக்கச் செய்யுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்வார்களாம். உங்கள் விருப்பின் படியே செய்து வைப்போம்; அதற்கு வேண்டிய பூஜோபகாரங்களைச் சேகரித்து, அங்குள்ளோர் உத்தரவு பெற்ற பின்னர் அழைத்துச் செல்லுவோம் என்பார்களாம். இது நிற்க.

அந்தக் கருவெட்டலென்ற இடமானது சிறியதாயும், மதிலாற் சூழப்பட்டது மாயிருக்க அதனுள், ஒரு பக்கத்தில் ஆழமுள்ள கிணறுக் கொத்த ஒரு பள்ளமும், அதன் மத்தியில் சிவலிங்கமொன்றும் அமைந்துள்ளது.

கிணற் றுக்கு மேல் சங்கிலியினால் உருட்டப்பட்ட ஒரு சக்கர முள்ளது. கிணறோவெனில், பாதி மூடியிருக்கும். அக் கிணற்றுக்குள் பல தீபங்களையும் ஏற்றி வைத்திருப் பார்கள். அக்கிணற்றைச் சுற்றிலும் பார்ப்பனர்கள் உட்கார்ந்து மந்திரோச்சாடனம் பண்ணிக் கொண்டு, வரும் யாத்திரைக்காரர்களுக்குத் தவசியைப் போல நடத்திக் காட்டுவார்கள்.

பிறகு குருக்களைக் கெஞ்சிக்கேட்டுக் கொண்டே யாத்திரைக்காரர்கள், கொலைக்களமென்ற றியாத, அந்த மோச இடத்துக்கு அழைத்துச் செல்லப்படு கிறார்கள். சென்ற பின்னர் இளம்பெண்களையும், சொத்துகளையும் தலைவாசலில் நிறுத்தி, மற்றுமுள்ள வயது சென்ற புருடர்களையும், பெண்களையும் (முக்கதி கொடுக்கும் கருவெட்டலென்ற மோச இடத்துக்குள்) தரிசிக்க வாருங்களென்று அழைத்துப் போவார்கள்.

அங்குச் சென்ற பின்னர் பள்ளத்திலுள்ள சிவ லிங்கத்தைக் காட்டி, பார்வதி சமேத பரமேசுவரரும், மற்றுமுள்ள தேவகணங்களும், சப்த ரிஷிகளும் இப்போது வருவார்கள்;

ஊன்றி நோக்குங்கள் என்று சொல்ல, ஒன்றுமறியாத இவ்வேழை யாத்திரைவாசிகள் அன்போடு அந்தப்பாவிப் பார்ப்பனனுடைய மோச உரையைக் கேட்டுக் கீழே தலைகுனிந்து பார்க்குந் தருணத்தே, மேல் தொங்கவிட்டிருக்கும் இரும்புச் சக்கரத்தை உருட்டி விடுவார்கள். அது கழுத்தைத் துண்டிக்க கிணற்றில் வீழ்ந்து இறந்துவிடுவார்கள்.

அந்தோ! அவ்வேழை மக்கள் இறந்த பின்னர், தலைவாசலில் நிறுத்திவைக்கப்பட்ட அவ்வாலிபப் பெண்களையும், சொத்துகளையும் அப் பார்ப்பன மக்கள் உரிமையாக அடைந்துவருவதும் வழக்கம். இப்பார்ப்பன மாக்கள் காசியில் இறக்க முக்தி என்று சொல்லுகின்ற வாக்கியத்தை அடியாகக் கொண்டு உபதேசித்து, இத்தகைய கொடுஞ்செயல்களைக் காசி நகரத்தில் அநேக காலமாக நடத்திக் கொண்டு வந்தார்கள்.

- http://viduthalai.in/new/page-3/5116.html?sms_ss=blogger&at_xt=4d78e2a249dc3e90%2C0