வெள்ளி, 11 மார்ச், 2011

ஞானசூரியன் தொடர்-51

தற்காலம் மாட்சிமை தங்கிய கனம் ஆங்கிலேய அரசாட்சியால் இக்கொடுஞ் செய்கைகள் தடுக்கப்பட்டிருக் கின்றன. இதுபோன்ற பல இந்துமதாச்சாரக் கொடுமை களும், காருண்ய கவர்ன்மெண்டாரால் தற்காலம் தடுக்கப் பட்டிருக்கின்றன. அதாவது சககமனம் (உடன் கட்டை யேறுதல்), காளிகோயில் நரபலி முதலியனவாம்.

காசியின் இரண்டாவது மோசம் அதாவது, அரசாங்கத்தாரால் அக்கருவெட்டல் தடுக்கப்பட்ட பின்னர், மற்றுமொரு சூழ்ச்சியால், அவ்வன்கணாளர்களாகிய பார்ப்பனர்களோவென்றால், யாத்திரைவாசிகளைக் கொலை செய்து ஜீவனோபாயம் சிறிது காலம் செய்து ஜீவித்து வந்தார்கள். அந்தச் சூழ்ச்சி எவ்வாறெனின், சில காலத்திற்கு முன் படிப்பும், நாகரிகமும் முறையாக இக்காலத்திலுள்ளது போலில்லை என்று எவர்களும் அறிவார்களல்லவா! அக்காலங்களில் தனவான்கள் ஆடைகளையும், ஆபரணங்களையும் மிகுதியாயணிந்த தமது தனப்பெருக்கத்தைப் பிறருக்கு அளிப்பது வழக்கம். இப்போதும் அது முற்றும் குறைந்தபாடில்லை. சில அறிவீனர்கள் தங்கள் தங்களுடைய குழந்தை களுக்கு அதிகமாக ஆபரணங்கள் அணியச் செய்து அழகு பார்க்குங்காரணத்தால் குழந்தைகள், திருடர்கள் கையினால் கொலையுண்டு போவதை அடிக்கடி கேள்விப் படுகிறோமல்லவா? அவ்வாறே அக்காலத்தில் காசி யாத்திரை செய்பவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் மிகுதியான நகைகளணிந்து காசிக்கு வருவார்கள். இங்ஙனம் யாத்திரைவாசிகளுக்கு உடனிருந்து கருமஞ் செய்விக்கும் குருக்கள் அல்லது பார்ப்பனப் புரோகிதர் களிடஞ் செல்லுவர். அப்புரோகிதர் நிலை யாதெனில், கொலை செய்யும் இரண்டு குண்டர்களையும் (தடிச் சோம்பேறிகள்) பல போக்கிரிகளையும் உடன் வைத்திருப்பார்கள்.

அக்குண்டர்களோ 3,4,5 மணிநேரம் ஜலத்தினுள் மூழ்கியிருக்குந் தன்மையில் பயிற்சி பெற்றவர்கள். இப்புரோகிதன் தன்னையடைந்த யாத்திரைக்காரர் களைஅழைத்துக் கங்கையில் சங்கற்ப ஸ்நானம் செய்யப்போகும் தருணத்தில் குண்டர்களிலொருவனை உடன் அழைத்துச் செல்வான். கங்கையை அடைந்து மூழ்குந் தருணத்தில் இக் குண்டனானவன் இவர்களுடன் தானுமொருவனாய், மூழ்கியவர்களில் மிகுதியாக நகை அணிந்திருக்கும் ஆணையாவது, பெண்ணையாவது ஜலத்திற்குள் ஒன்று அல்லது இரண்டு மைல்களுக்கப்பால் இழுத்துக் கொண்டு போய்விடுவான்.

எஞ்சி நின்றோர் ஸ்நானம் முடிந்த பின்னர் உடனிருந்து காணாமற்போன தமது அருமை மகனெங்கே? மகளெங்கே? என்று தேடித் திகைக்குங்கால், அந்தக் கங்கைக்கரையிலுள்ள பார்ப்பனர்கள் இக்குருக்களுடன் கூடிக் கொண்டு, மணியடித்து அர்ச்சித்துக் கற்பூரமேந்தி பற்பல வடமொழிப் பாட்டுகளைப் பிதற்றிக் கங்கைக்குப் பூஜை செய்வார்கள். அத்தருணம் கங்கைக்கரையில் பெருங்கூச்சலாகவே இருக்கும். காணாமற் போனவர் களுடைய பெயரைக் கேட்டு, அவர்களைக் கங்கா தேவியே வந்து அழைத்துச் சென்றாளென்றும், அவர்கள் மிகுந்த பாக்கியவான்களென்றும், அப்புண்ணியவான்களின் பொருட்டல்லவா எங்களுக்கும், உங்க ளுக்கும் அக்கங்கா தேவியின் தெரிச னங்கிடைக்கப்பட்ட தென்றும், இதனால் உங்களுடைய குடும் பம் இனிமேல் மிக க்ஷேமமடையுமென் றும் சொல்லிக் கங்கையின் பேரிலும் விஸ்வநாதர் பேரிலும் பாக்கள் பாடி, அவர்களுடைய துக்கத்தை மாற்றுவார்கள். பறிகொடுத்த யாத்திரைவாசிகள் மனங்கொதித்துக் கண்ணீர் வடிய, மெய்சோர்ந்து, கன்றிழந்த பசுவைப் போலும் கதறிக் காசி யாத்திரை போதுமென்றும், சொல்லித் தம் நாட்டிற்குத் திரும்புவார்கள். அந்தோ! இவ்வாறு சிறிது காலம் நடந்தேறிய பின்னர், கங்காதேவி புனிதர்களை அழைத்து அழியாப்பதவியாகிய சுக வாழ்க்கையை நல்குகிறாளென்ற வசனம் எங்கும் பிரசித்தமாய்விட்டது. அவ்வாறிருக்க, நமது தென்னாட்டு அரசர்களில் ஓர் அரசனுடைய தாயாரிடத்தில் பார்ப்பனர்கள் சென்று காசி மகிமைகளைப் பற்றிப் பலவிதமாகச் சொல்லி, அதற்குச் செல்ல வேண்டுமென்னும் ஆசையை எழுப்பவே, அந்த வயது முதிர்ந்த இராணி கங்கா தேவியிடம் போய், அழியாப் பதவிகளாக வேண்டுமென்று எண்ணங் கொண்டாள். என்னையும், கங்காதேவியார் கருணை புரிந்து தன்னுடன் சேர்த்துக் கொள்ளுவாளா? என்று கேட்டதற்கு, அந்தப் பிராமணர்களுடைய விடை யாதெனில், ஓ மகாராணியே! பிராமணர்களுக்கு ஏராளமான தான தருமங்களைச் செய்கிறவர்களையும், ஏராளமான ஆபரணங்களை அணிந்து கொண்டிருக்கக் கூடிய புண்ணிய சீலர்களையும், மட்டுமேதான் அப்பதவிக்கு அழைப்பது வழக்கம என்று கூறினர். இவற்றைக் கேட்ட நாள் தொடங்கி அந்த இராணியானவள், அரண்மனை யிலுள்ள பொருள்களைப் பார்ப்பனர்களுக்குத் தானமாகக் கொடுத்தும், நகைகளைப் புதிது புதிதாகச் செய்து அணிந்து கொண்டும் வந்தாள்! பிறகு தனது புத்திரனாகிய ராஜனோடும், ராஜ அங்கங்களோடும் புறப்பட்டுப் போய்க் காசியைச் சேர்ந்தாள்.

அப்பொழுது பார்ப்பனர்களும், ராஜபுரோகிதர்களும் கலந்து அநேக லக்ஷம் பெறுமான நகைகளை அணிந்து கொண்டிருக்கிற இராணியைக் கங்கையில் இழுத்துச் செல்வது எவ்விதமென்று யோசனை செய்து தீர் மானித்தனர். ஆனால், கங்கையோ ஸ்நானஞ் செய்யுமிடம் மிக ஆழமாயும், பல ராஜ ஸ்திரீகளும் அவரவர்களுடைய தாதிமார்களுஞ் சேர்ந்து ஸ்நானக் கட்டத்தில் நமது மகாராணியை இன்றைக்குக் கங்காதேவி அழைத்துக் கொண்டு போவாளென்று எதிர்பார்க்கிறதாயிருந்தாலும், ஸ்நானம் செய்யுமிடம் பெரிய கூடார, மறைவினால் முப்பக்கமும் மதில்போல் மறைக்கப்பட்டிருந்தது. அந்த மறைப்பைச் சுற்றிலும் பல சிப்பாய்களும், துப்பாக்கியுடன் பாராக் கொடுத்திருந்தனர். ஆதலால், இவர்களுடன் மற்ற ஜனங்களுமிறங்கி ஸ்நானஞ் செய்ய முடியாமற் போயிற்று. -தொடரும்

- http://viduthalai.in/new/page-3/5184.html?sms_ss=blogger&at_xt=4d7a13e77e9ac6c6%2C0