வெள்ளி, 18 மார்ச், 2011

கழகத் தலைவர் கழகப் பொறுப்பேற்ற 33ஆம் ஆண்டு!

கழக உறவுகளின் ஒத்துழைப்போடு, அன்போடு
உயிரினும் மேலான என் லட்சியப் பயணம் தொடரும்!

கழகத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை


அன்னை மணியம்மையார் அவர்களின் மறைவிற்குப்பிறகு கழகப் பொறுப்பை ஏற்ற இந்த நாளில் (18.3.1978) தமது வெற்றிப் பயணத்தைப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் - திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:

நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களையும், அவர்கள் உருவாக்கிய அரியதோர் புரட்சி இயக்கமாம் நம் திராவிடர் கழகத்தையும் பாதுகாத்து கடமையாற்றிய தியாகத்தின் புடம்போட்ட தங்கம் நம் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்கள் மறைந்த (16.3.1978) பிறகு, அய்யா, அம்மா ஆகியோரின் கட்டளைப்படியும், கழகப் பெருங் குடும்பமான பெரியார் தொண்டர்களாம் நம் இருபால் தோழர்களின் ஆணைப்படியும் நான் பொறுப்பேற்று, 32 ஆண்டுகள் முடிந்து, 33ஆம் ஆண்டுப் பணி தொடங்கும் நாள் இன்று (18.3.2011).

என்னைத் தூக்கிச் சுமந்த தோள்கள்

பெரியார் நூற்றாண்டு தொடங்கியது அப்போது; அது முதற்கொண்டு எத்தனையோ சோதனைகளும் வேதனைகளும், வம்புகள், வசவுகள், வல்லடி வழக்குகள், இவை ஒருபுறம் நம்மை நோக்கி!

மற்றொருபுறம் நல்லெண்ணம் படைத்த சான்றோர்கள் பலரும் இந்த எளியவனுக்கு ஊக்கத்தையும், உற்சாகத் தையும் தந்து உயரத்தைக் காட்ட தத்தம் வாழ்த்துரை, பாராட்டுரை என்று அவர்தம் வலிமைமிக்க தோள்களில் என்னைத் தூக்கிக் காட்டி, பெரியார் இயக்கம் குன்றென உயர்ந்த இயக்கம், கோடிக்கணக்கான மக்களின் மான வாழ்வுக்கும், உரிமைப் போருக்கும் என உழைக்கும் ஒரே சமூக இயக்கம் என்பதால் இது தாழ்ந்துவிடவோ, வீழ்ந்து விடவோ கூடாது என்று, இனமானம் கருதி எமக்குப் பேராதரவு தரத் தவறவில்லை.

நம் கழகக் குடும்பங்களில் உள்ள நம்முடைய உறுப்பினர்கள், தாய் தந்தையர்களைப் போன்றும், உற்சாகம் குன்றா உடன்பிறவா சகோதரர்கள் போலவும் உள்ளனர். ரத்த பாசத்தைவிட கொள்கைப் பாசத்தைக் கொட்டிடும் குடும்பங்களாக ஆதரவு நல்கி, கொள்கைப் பாதையிலிருந்து துளியும் நழுவாமல், வழுவாமல் உறுதியுடன் நடைபோட்டு, பயணங்களில் சூறாவளிகளும் சுனாமிகளும் சுழன்றடித்தாலும் சோர்ந்துவிடக் கூடாது என்ற எண்ணத்துடன் பெருந் துணையாக நிற்கின்றனர்!

கட்சி வேறுபாடுகளைக் கருதாமல், இன உணர்வோடு எமது பயணத்தை நடத்திட, என்றும் உரமூட்டும் நண்பர்கள் அனைத்துக் கட்சிகளிலும் ஏராளம் - உலகம் முழுவதும்!

எமது பணியில்தான் எத்துணை மகிழ்ச்சி!

இவை எல்லாம் நமது பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பெருந்தொண்டினால் விளைந்த கதிர்மணி களைப் போன்றவை. எனவேதான் எத்தனை இடுக் கண்கள் வந்தாலும் எமது பயணம் எப்போதும் இலக்குத் தவறாத இனிய பயணமாகவே நடைபெற்றுக் கொண் டிருக்கிறது!

இளமைமுதல் இன்றுவரை யாமறிந்த கொள்கை, தலைமை, அது தந்த லட்சியப் பாதை - இவற்றைக் கட்டிக் காப்பதை கண்ணை இமை காக்கும் கடமைபோல் செய்து வரும் எமது பணியில்தான் எத்துணை மகிழ்ச்சி; எவ்வளவு உற்சாகம்!

நாம் பதவிகளை, புகழை நாடாத மான வாழ்விற்கு சுயமரியாதை சுகவாழ்வினைப் பெரியாரால் பெற்றோம். துயர் வரினும் துணிவுடன் எப்போதும் பயணிக்கும் ஆற்றலை அதனால் பெற்றோம் என்று எண்ணி மகிழ்வதே - இப்பணிக்கு யாம் பெறும் ஊதியம் ஆகும்!
இடையில் உடல் நலம்கூட போதுமான ஒத்துழைப்பு தருவது ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். மருத்துவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்.

கீர்த்தி பெறுவதற்கான கிரீடம் அல்ல எனக்கு அய்யா அம்மா தந்திட்ட பொறுப்பு. நேர்த்தியுடன், நேர்மையுடன் லட்சியங்களை செயல் களாக்கிக் காட்டிடும் செழுமிய பணியாற்றுவதற்கே என்று கருதி என்றும் உழைத்துக் கொண்டிருப்பவன் நான்.

எனது போனஸ் வாழ்வு!

இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு 20 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று நினைக்கும்போது, இப்பணிக்குக் கிடைத்த போனஸ் வாழ்வு - பொருளற்ற வாழ்வாகி விடக் கூடாது; பொறுப்புகளை சரிவர நடத்தும் பொன்னான வாய்ப்புள்ள வாழ்க்கையாக அமைய வேண்டும் என்ற உறுதியும், ஒவ்வொரு கழகக் குடும்பத் தவரும் காட்டும் பரிவும், பாசமும் என்னை உழைத்துக் கொண்டே இரு; ஓய்வு என்பது ஒரு பணியிலிருந்து மறுபணிக்கு மாறுவதே என்ற உன்னதத் தத்துவத்தைப் போதிப்பதாக அமைந்துள்ளது.

நமது இலக்கு நோக்கிய இந்த இயக்கப் பணிகளில் - பயணத்தில் - அடைந்த வற்றைவிட, அடைய வேண்டியவை ஏராளம்!

எம் பணி தொடரும்!

தந்தை பெரியார் கொள்கை, மானுடத்தின் மகத்தான விடியலை ஏற் படுத்தும் புது நெறி; புரட்சி வழி என்பதால் அதனை உலகம் முழுவதும் பரவிடச் செய்ய, சோர்வறியாது உழைக்க, மேலும் உறுதி எடுத்துக்கொண்டு, இப் பணிக்கு எம்மை உற்சாகப் படுத்தும் கொள்கைக் குடும்ப உறவுகளுக்கும், சான்றோர்களுக்கும் தலை தாழ்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம். அடக்கத்தோடு அரும்பணி தொடர அனைவரது ஒத்துழைப்பையும் யாசிக்கிறோம்; உயிர் மூச்சுள்ள வரை, உயிரைவிட மேலான லட்சிய மான பெரியாரின் தத்துவங்கள், உலக மக்கள் நெஞ்சில் விதைக்க எம்பணி தொடரும் என்று உறுதி கூறுகிறோம்.

நாணயம் தவறாத நல்வாழ்வு என்ற கொள்கை வாழ்வாக அமையட்டும் நம் வாழ்வு!
உங்கள் தொண்டன், தோழன்,

கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

- http://viduthalai.in/new/component/content/article/40-current-news/5645--33-.html?sms_ss=blogger&at_xt=4d836d8911ffcd66%2C0