வியாழன், 4 நவம்பர், 2010

அசுரர்கள் யார்-?

ஆரியர் வெறுத்த ராட்சதர்கள்!
ராட்சதர்களாக ஆக்கப்பட்டது ஏன்-?


ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களில் மிக முக்கியமானவரான சர்.பி. தியாகராயச் செட்டியார்கூட ஆரம்பத்தில் தேசியவாதியாக இருந்தவர்தான். 1914_இல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் காரியதரிசியாயிருந்து அரும்பெரும் தொண்டாற்றியவர் தான் அவர். பிறகுதான் அவரும் இன உணர்ச்சி பெற்றார். ஆகவே, நாங்களெல்லாம் துவக்கத்திலேயே இராட்சதர்களாக ஆக்கப்பட்டவர்கள் அல்லர். அடிமைகளாயிருந்து பிறகு அவர்களின் கொடுமை தாங்கமுடியாமல் இழிவுபற்றிய உணர்ச்சிபெற்று விழிப்படைந்தவர்கள்தாம் நாங்கள். அப்படி மான விழிப்புணர்ச்சி பெற்றபிறகுதான் நாங்கள் இராட்சதர்களாக்கப்பட்டோம்.

_ தந்தை பெரியார்
(விடுதலை 14-_12_-1950)

ராமாயணத்தில் தென்னிந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகமடைந்தவர்களாய் இருந்தார்கள்.

இது பி.டி. சீனிவாசய்யங்கார் எழுதிய இந்திய சரித்திரம் முதல் பாகம் என்னும் புத்தகத்தில் 10ஆம் பக்கத்தில் இருக்கிறது.

திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதிவைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர் களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்.

இது ஷோஷி சந்தர்டட் எழுதிய இந்திய அன்றும் இன்றும் என்னும் புத்தகத்தின் 15ஆம் பக்கத்தில் இருக்கிறது.

அசுரர்கள் யார்-?

ஆரியக் கடவுள்களாகிய இந்திரனையும், இதர கடவுள்களையும்


பூசித்தவர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும் தேவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்துகொண்டே வந்தது. இது ஏ.ஸி. தாஸ் எம்.ஏ.-, பி.எல்., எழுதிய ரிக் வேத காலத்து இந்தியா என்னும் புத்தகத்தில் 151ஆம் பக்கத்தில் இருக்கிறது.

ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர் களைத் தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள். இது சி.எஸ். சீனிவாச்சாரி எம்.ஏ., & எம்.எஸ். ராமசாமி அய்யங்கார் எம்.ஏ., ஆகிய சரித்திர போதகர்கள் எழுதிய இந்திய சரித்திரம் முதல் பாகம் என்னும் புத்தகத்தில் இந்து இந்தியா என்னும் தலைப்பில் 16, 17ஆம் பக்கங்களில் இருக்கிறது. பாரத ராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டுமிராண்டிகளும், அசுரர்களும், ராட்சதர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிடப்பட்டிருப்பதெல்லாம் தென்னிந்தியாவை (திராவிட நாட்டை)ப் பற்றியேயாகும். இது ஜி.எச்.ராபின்சன் சி.அய்.ஈ. எழுதிய இந்தியா என்னும் புத்தகத்தின் 155_ஆம் பக்கத்தில் இருக்கிறது.

பாரதத்தில் இடும்பி என்று ஒரு ஆரியரல்லாத பெண்மணியைப் பற்றிய எழுதிய பார்ப்பனக் கவி தனக்குள்ள ஜாதித் துவேஷத்தால் ராட்சஸி என்று எழுதி இருக்கிறான். ராட்சதர் என்கிற பயங்கர புரளி வார்த்தை வைதீகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்.

இது நாகேந்திரநாத்கோஷ் பி.ஏ., பி.எல்., எழுதிய இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும் என்ற புத்கத்தின் 194_ஆம் பக்கத்தில் இருக்கிறது.

- http://www.viduthalai.periyar.org.in/asuranmalar/snews28.html