புதன், 17 நவம்பர், 2010

புதிய மனுநீதியோ!

உளறல்கள்...
சுராபானம் என்கிற போதைச் சரக்கை நிறையக் குடித்துவிட்டு, அந்தக் குடி போதையிலே ஏதேதோ உளறினார்கள். அப்படிப்பட்ட அந்தப் போதை உளறல்கள்தான் இன்றைய தினம் வேதங்கள் என்று சொல்லப்படுபவைகள்.
விடுதலை, 22.3.1954


புதிய மனுநீதியோ!

அகில இந்திய அளவில் உள்ள பார்ப்பன ஊடகங் கள் பற்றி திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கலைஞர் தொலைக்காட்சி பேட்டியில் (15.11.2010) தெளிவாகக் கூறினார்.
தி.மு.க. அரசின் சமுதாய சீர்திருத்தக் கொள்கை கள், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் பாதையில் செல்லுவதைப் பொறுக்கமாட்டாத பார்ப்பன சக்திகள், ஊடகங்கள் திட்டமிட்ட வகையில் மத்திய அமைச்சர் ஆ.இராசாமீது பாணம் தொடுத்துள்ளன.
2 ஜி அலைக்கற்றைப் பிரச்சினையில் இராசா அவர்கள் புதிதாக எந்த ஒரு கொள்கையையும் வகுத்துச் செயல்படுத்திடவில்லை. ஏற்கெனவேயிருந்த நடைமுறையைத்தான் கடைப்பிடித்திருக்கிறார் என்பதைத் திரும்பத் திரும்பச் சொன்னாலும் எதிரிக்கட்சியாகி விட்டவர்கள் சற்றும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
இதற்கு முன்பு பிரமோத் மகாஜன், அருண்ஷோரி காலத்தில் ஏற்பட்ட நட்டம் பற்றியும் இந்தியத் தலைமைக் கணக்காயர் அறிக்கையில் கூறியுள்ளதே-அதைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கும் நாணயமான பதில் - இராசாவை பதவி நீக்கம் செய்யத் துடித்தோரிடமிருந்து வரவில்லையே!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ, இராசா பதவி விலகியே தீரவேண்டும். ஆடிட்டர் ஜென ரலே கூறிவிட்டார் என்று பூமிக்கும், வானத்திற்கும் தாவிக் குதிக்கிறார்களே-
இவர்களின் கேரள மாநிலக் கட்சியின் மாநிலச் செயலாளர் பினராய் விஜயன்மீது சாற்றப்பட்ட குற்றமென்ன?
1981இல் ஈ.கே.நாயனார் அமைச்சரவையில் மின்துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது கனடா நாட்டின் லாவ்லின் நிறுவனத்தோடு ஒப்பந்தம் ஒன்று போட்டார். அந்த ஒப்பந்தத்தின் காரணமாக மாநில அரசுக்கு ஏற்பட்ட நட்டம் கொஞ்சம்தான்- ஆமாம் ரூ.376 கோடி.
இதனை வெளிப்படுத்தியதும் கண்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல்தான்.
அப்பொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி நடந்து கொண்டது? சி.பி.அய் விசாரிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதே (16.1.2007) சி.பி.அய்யும் விசாரணை செய்து ஊழலை உறுதி செய்ததே (21.1.2009)
அப்பொழுது சி.பி.எம். என்ன சொன்னது? அரசியல் தூண்டுதல் காரணமாக உள்நோக்கத்துடன் சி.பி.அய் இப்படிக் குற்றம் சாற்றியுள்ளது என்று கூறவில்லையா?
ம.தி.மு.க.வும் சேர்ந்துகொண்டு அமைச்சர் இராசா பதவி விலக வேண்டும் என்று கூறுகிறதே.
அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர் கள்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் சாதாரணமான வையா? ஊழலைவிடக் கொடுமையானதாயிற்றே- மதச்சார்பற்ற தன்மைக்கே மரண குழி வெட்டியவர்கள் ஆயிற்றே.
இத்தகைய குற்றச்சாற்றுக்கு ஆளானவர்கள் அமைச்சர் பதவியில் நீடிக்கலாமா என்று நாடாளுமன் றத்தில் கடும் எதிர்ப்புப் புயல் வெடித்தது. அப்பொழுது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எப்படி நடந்துகொண்டார்?
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் பதவி விலகவேண்டும் என்று புரட்சிப்புயலாக வெடித் தெழுந்தாரா?
அவர் எப்படி நடந்துகொண்டார் என்பதை அவர் வாயாலேயே கேட்போம். திருப்பூரில் நடைபெற்ற ம.தி.மு.க நிதியளிப்பு விழாப் பொதுக்கூட்டத்தில் (20.2.2001) இதோ வைகோ பேசுகிறார்: பாபர் மசூதி வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட-அத்வானி பதவி விலக வேண்டும் என்று நாடாளு மன்றத்தில் ஒன்பது நாள் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது நான் டில்லியில் வீட்டி லிருந்தேன். காலை 9 மணிக்கு வாஜ்பேயிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 10 மணிக்கு வீட்டுக்கு வாருங்கள் என்று பிரதமர் அழைத்தார். எதிர்க்கட்சிகள் பேசிய பிறகு அரசின் சார்பில் அருண் ஜேட்லி பதிலளிப்பார். அதற்கடுத்து நீங்கள் பதிலளித்துப் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எதிராளிகளின் வியூகத்தை எளிதில் உடைக்கக் கூடியவன் இந்த வைகோ என்ற நம்பிக்கையில் என்னிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது என்று பேசினாரே!
அமைச்சர் இராசா ஊழல் செய்தார் என்று குறிப் பிடப்படவில்லை - அவர் செயலால் அரசுக்கு நட்டம் ஏற்படும் என்று தான் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்ளவர் பதவி விலக வேண்டும். அதே நேரத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் மட்டும் பதவி விலகக் கூடாது-இதுதான் வைகோ அவர்களின் புதிய மனுதர்மம்!
அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று வந்துவிட்டால் ஆதிக்கவாதிகளுடன் கைகோத்துக் கொள்வது சரியானதுதானா? சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்துப் பார்க்கட்டும்!

- http://www.viduthalai.periyar.org.in/20101116/news03.html