ஞாயிறு, 28 நவம்பர், 2010

ஞானசூரியன்- தொடர்-9

ஞானசூரியன் - தொடர்-9

ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி, வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு: 1928 20 ஆம் பதிப்பு : 2010

விப்ரத்வேனது சூத்ரஸ்ய
ஜீவவதோஷ்- சதோதம
பொருள்: விப்பிரன் (பார்ப்பனன்) என்று சொல்லிக் கொண்டு உயிர் வாழுகின்ற சூத்திரன் எண்ணூறு (800) நிஷ்கங்களை (ஒருவகைப் பொன் நாணயம்) அபராதமாகக் செலுத்தக் கடவன் (யாக்ஞவல்கிய ஸ்மிருதியில்).
இவ்விதமாக வேலை செய்து கூலியைக்கூட அடையமுடியாதபடி கஷ்டப்பட்டுக் கொண்டு வநத சூத்திரர்கள் எங்ஙனம் உயர்ந்து வாழமுடியும்? இவர்கள் செய்கிற வேலையினால் பார்ப்பனர்கள் ஜீவனம் செய்து வந்ததாக மேற்கண்ட பிரமாண வாக்கியங்களாலும் விளங்குவதால், இவர்களின் முன்னேற்றத்தைப் பார்ப்பனர்கள் விரும்புவார்களா? மற்றும்,
ந சூத்ராய மதிம் தத்யாத்
நொச்சிரஷ்டம் நஹவிஷ்க்ருதம்
ந சாஸ்யோபதிசேத் தர்மம்
ந சாஸ்ய வ்ரதமாதிசேத்
பொருள்: சூத்திரனுக்குக் கல்வியைக் கற்பிக்கவும் யாக சேஷமாகிய அவிசை (எஞ்சிய உணவுப் பொருளை)க் கொடுக்கவும் கூடாது. தருமோபதேசத்தையும் பண்ணலாகாது; நோன்பு நோற்கும் முறையையும் சொல்லலாகாது.
இதைமீறிச் சூத்திரனுக்குப் பவுரோஹித்யம் (சிரார்த்தம் முதலியன நடத்துவது) செய்துவந்த பார்ப்பனர்களை மலையாளத்திலும், தமிழ் நாட்டிலுங் கூடச் சிலவிடத்துப் பந்தியில், போசனத்தில் சேர்த்துக் கொள்ளுவதில்லை. இத்தகைய பார்ப்பனர்களுக்கு மலையாளத்தில இளையது எனப்பெயர். இதைப்போன்ற உதாரணங்கள் பலவுள. அவற்றுள் சிலவற்றைச் ஜாதி தருமத்தைக் கூறுமிடத்து விரிவாகக் கூறுவோம்.
இக்காரணத்தால், கருமத்தினால் பிராமணனாவதற்கு இந்து மதம் இடந்தரமாட்டாது. இக்காலத்துப் பிரிட்டிஷ் அரசாட்சியின் கருணையால் கல்விக்கு இடம் ஏற்பட்ட போதிலும், சங்கரலிங்கம் பிள்ளை, கிருஷ்ணசாமி முதலியார், கோவிந்தராஜுலு நாயுடு, சுப்பையா நாடார் முதலிய பட்டப் பெயர்கள் அணிந்துகொண்டிருக்கிற வகுப்பினர் எவ்வளவு வேதாந்தம் படித்த போதிலும் இந்தச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிற வரையில் இவர்கள் இந்துக்களேயாகையால், சமஸ்காரத்திற்கு அதிகாரம் இல்லை.சமஸ்காரு மில்லாததால், பிராமணத்தன்மையை அடையவும் மாட்டார்கள். யாவரும் சூத்திரர்களே (பிராமணனுக்கு அடிமையே). இதற்கும் மேற்கோள் காட்டுவோம்.
அனார்யமார்ய கர்மாணம்
ஆர்யம் சானார்யகர்மிணம்;
ஸம்ப்ரதார்யாப்ரவீத் தாதா,
நஸமௌ நாஸமாவிதி (மனுஸ்மிருதி)
பொருள்: 1ஆரியன் (பார்ப்பனன்) தொழிலைச் செய்கிற அனாரியன் (தமிழன்) ஆரியனும் ஆகப்பேவதில்லை. அனாரியன் தொழிலைச் செய்கிற ஆரியன் அனாரியனு மாகமாட்டான். தொழிலினால் இவ்விருவர்களுக்கும் சமத்துவம் தோன்றினும், ஒரு ஜாதியான் மற்றொரு ஜாதியானாக முடியாதென்பது கருத்து.
ஆனால், ஜாதி வேற்றுமைகள், தொழில் வேற்றுமையால் தான் ஏற்பட்டன என்று சொல்லுகிறவர்களும் தாங்கள் பரம்பரையாகவே அடிமைகளாயிருப்பினும் சாணியில் புழுத்த புழுக்களில் சில தங்கள் இனத்தில் பலவற்றைத் தின்று தாங்கள் பலசாலிகள் என்று நடித்துக் கொண்டிருப்பது போல், இவர்களும் தங்களை உயர்ந்த ஜாதியாகச் சொல்லிக்கொண்டு பலரைத் தங்களினின்றும் தாழ்த்தி வந்ததோடு, மனிதப் பிறவியானது எத்தகைய பெருமை வாய்ந்த தென்பதைக் குறித்துக் தாங்களும் ஆராயாமல் பிறரையும் ஆராயவொட்டாமல் தடுத்தும் 1. ஆரியன் என்ற சொல் முற்காலத்தில் ஆரியமொழி பேசுவோரைக் குறித்திருந்தும், பிறகு ஒரு நாட்டாரைக் குறித்தும், பிற்காலத்தில் ஒரு ஜாதியாருக்கே உரியதாகவும் வழங்கி வருகின்றன. ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் எனத் தமிழ்மறை மிழற்றும். வருகிறார்கள். இதனால் இதுகாறும் யாதொரு நற்பயனும் அடையவில்லை. இனிமேலும் அடையவும் முடியாது. அன்றியும் நான்கு வேதங்களையும் படித்தவ னாயும் சிறந்த நல்லொழுக்க முடையவனாகவும் இருப்பினும், சூத்திரனே. எதிர்மறையாகப் பார்ப்பனன் எழுத்துவாசனை தெரியாத வனாயும், கொலை, களவு, கட்குடி, விபச்சாரம், பொய் பேசுதல் என்னும் இவை களையே தொழிலாக உடையவனாயிருப்பினும், அன்னான் பார்ப்பான் என்கிற ஒரே காரணத்தை முன்னிட்டுப் பந்தியில் உண்ணவும், தானம் வாங்கவும் சுவாமி என்று பிறரால் அழைக்கப்படவும் உரிமையுள்ளவனாக இருக்கின்றான். இப்படியே இன்னும் வழக்கத்தில் இருந்து வருகிறதன்றோ? இக்காலத்தில் பிராமணனைப்போல் வேடம் போட்டுக் கொண்டு தவம், சந்நியாசம், பலருக்கு உபதேசம் புரிதல் இவை முதலிய தொழில்களை மேற்கொண்டு நடிப்பவரும் சிலர் உளர். இவர் அடையும் பயன் யாது,? இங்குமங்குமில்லாமல் அந்தரத்தி லிருப்பதேயாம். மனுவின் கொள்கைக்கு விரோதமாக ஆரிய சமாஜத்தினரால் சூத்திரர்கள் அடைந்துவரும் நன்மையைப் புராணங்களில் சொல்லப்படும் திரிசங்குவின் சுவர்க்கத் திற்கு ஒப்பிடலாம்.
தனக்கு ஏற்படுத்திய தொழிலை மீறி நடக்கிற சூத்திரனை அரசனானவன் ஆடு, மாடுகளைப்போல் நினைத்துச் 1சித்திரவதை செய்யவேண்டும். தங்கள் குலத்தொழிலை மீறுகிற வைசிய சூத்திரர்கள் இறந்தபின் மறுமையில் அடையவேண்டிய பயனை மனு கூறுவதையும் கேளுங்கள்.
2மைத்ராக்ஷ ஜ்யோதிக: ப்ரேதோ
வைஸ்யோ பவதிபூய புக்
கைலாச கஸ்ச யவதி சூத்ரோ
தர்மாத்ஸவ காச்யுத 1.
சரீரத்திலுள்ள அவயவங்களைச் சிறிது சிறிதாக அரிந்தெடுத்தும், உறுப்புகளில் ஆங்காங்கு ஆணியடித்தோ, மற்றெவ்விதமாகவோ பல நாள்கள் துன்புறுத்தி, முடிவில் உயிர் போக்குவதைச் சித்திரவதை என்பார்கள். ரோமன் காலத்தில் இக்கொள்கை போல நடந்ததால்தான் இயேசுநாதர் சித்திரவதை செய்யப்பட்டார்.
2. காசி முதலிய வடநாடுகளுக்குச் சென்று அங்குள்ளவர்களிடம் தங்களைப் பிராமண, க்ஷத்திரியன், வைசியன் என்று கூறிக்கொண்டு துறவு பெற்றுக்கொண்டு வரும் பலரையும் இக்காலத்தில் காணலாம். இவர்கள் அறிவிருந்தவாறென்னே! தமிழ் நாட்டிற் பிறந்தும், தமிழ் மக்களால் வளர்க்கப்பட்டும், தமிழன் நாகரிகத்தினை உணராமல் ஆரியர்களுக்கு அடிமையென நினைத்துக் கொண்டு ஏனையோரை வெறுக்கின்றனர். இவர்களுக்கு நல்லறியுண்டாவதாக.
-(தொடரும்)

- http://www.viduthalai.periyar.org.in/20101128/news12.html