புதன், 29 செப்டம்பர், 2010

உலகை உருவாக்கியது கடவுள் அல்ல

உலகை உருவாக்கியது கடவுள் அல்ல
அறிவியல் அறிஞரின் அதிரடி

கடவுள் கருத்து உருவாக்கப்பட்ட காலம் தொட்டே,கடவுள் என்ற ஒன்று இருக்க முடியாது என தர்க்க ரீதியாக மறுப்புரைத்தோர் இருந்து வந்துள்ளனர். கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்தியோரைக் கண்டிக்கும் மனிதநேயர்களும் அப்போதே இருந்தனர்.மனிதர்களைப் பிளவுபடுத்தி ஆதாயம் தேடிய சுயநலக்கும்பலை அம்பலப் படுத்தினர்.

அந்த மனிதர்கள் தங்களது பகுத்தறிவைப் பயன்படுத்தி இயற்கைக்கு எதிராக உருவாக்கப்பட்ட கடவுள் கோட்பாட்டை தகர்த்தெரிந்தனர்.இன்றுவரை பகுத்தறிவாளர்களின் தர்க்கத்திற்கு மதவாதிகளால் நேருக்கு நேர் பதில் அளிக்க முடியவில்லை.சப்பைக் கட்டுகளாலும்,அது ஒரு நம்பிக்கை என்று கூறியும் தப்பித்து ஓடுகிறார்கள்.

அறிவு யுகத்தின் கேள்விகள் தொடர,பின் அறிவியல் உலகம் மலர்ந்தபோது சார்லஸ் டார்வின் என்ற விஞ்ஞானி பரிணாமக்கோட்பாட்டைக் கூறினார்.

உலகின் தோற்றம், வானவியல், இயற்பியல், உயிரினங்களின் வளர்ச்சி என பல்வேறு பொருள் குறித்த அறிவியல் கருத்துகளும் வெளிவரத்
துவங்கின. இப்படி ஒவ்வொன்றாய் வரவர அதுவரை கட்டமைக்கப்பட்ட கடவுள் கருத்து தகரத் தொடங்கியது. கணினிக் காலமான இந்தக்காலத்தில் இன்னும் அதிகமான ஆராய்ச்சி வசதிகள் வந்துவிட, விஞ்ஞானி கள் பலரும் கடவுள் என்ற கருத்தியல் மீதான அறிவியல் ஆய்வு முடிவுகளை அவ்வப்போது வெளியிட்டுவருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக இப்போது ஒரு அறிவியல் ஆய்வுக்கருத்தை முன்வைத்திருக்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.

புகழ்பெற்ற பிரிட்டிஷ் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங், சர் அய்சக் நியூட்டன் இருந்த ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர்.

காலத்தைப்பற்றிய ஒரு சுருக்கமான வரலாறு எனும் இவருடைய நூல் 1988 இல் எழுதப் பெற்றது. அந்நூல் இவருடைய புகழை உயர்த்தியது. பன்னாட்டு அளவில் மிக அதிகம் விற்ற நூல்களில் அதுவும் ஒன்று. தமிழ் உள்படப் பல மொழிகளில் அந்நூல் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. கடவுள் கருத்து அல்லது தெய்வீகம் என்பது பிரபஞ்சத்தைப்பற்றிய அறிவியல் புரிதலுக்கு முரண்பட்டது அல்ல என அப்போது அவர் அந்நூலில் ஸ்டீபன் ஹாக்கிங் எழுதியிருந்தார்.

ஆனால், 2010 செப்டம்பர் 2 இல் சில பகுதிகள் வெளியிடப்பட்ட இவரது நூலான தி கிராண்ட் டிசைன் (The Grand Design) எனும் நூலில், இயல்பியலில் ஏற் பட்டுள்ள தொடர்ந்த வளர்ச்சிகளின் காரண மாக, பிரபஞ்சப் படைப்புப்பற்றிய கோட்பாடு களில் இனி மேல் கடவுளுக்கு எந்த இடமும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பிரபஞ்ச உருவாக்கத்தின் தொடக்கமாகக் கொள்ளப் படும் பெருவெடிப்பு, ஈர்ப்பு விசை விதியின் விளைவுதான், என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.

ஈர்ப்பு விசை என்பதாக ஒன்று இருப்பதால், எதுவுமற்றதிலிருந்து பிரபஞ்சம் தன்னைப் படைத்துக் கொள்ள முடியும், படைத்துக் கொள்ளும். தானாக நிகழும் படைப்பின் காரணமாக, எதுவுமற்றது என்பதைவிட ஏதோ ஒன்று இருக்கிறது என்பதும், பிரபஞ்சம் ஏன் இருக்கிறது என்பது, நாம் ஏன் இருக்கிறோம் என்பதும் புலனாகிறது என ஹாக்கிங் எழுதியுள்ளார்.

வான்வெளியில் உலவும் பிரபஞ்சப் படைப் பிற்குக் கடவுளைத் துணைக்கு அழைக்கவேண்டிய தேவை யில்லை என்கிறார், ஹாக்கிங்.

அறிவியல் வளர்ச்சியைத் தடுத்தால் ஒழிய கடவுள் ஒழிவதைத் தடுக்க முடியாது என்றார் சமூக விஞ்ஞானி பெரியார்.

அறிவியல் வளர்ச்சி கடவுளை ஒழிக்கத்தொடங்கி விட்டது. மனித மூளைக்குள் அச்சம்,அறியாமை என்ற கவசத்தால் பாதுகாப்பாகப் பதுங்கிக்கொண்டிருக்கும் கடவுளை, அறிவியல் சம்மட்டியால் தாக்கி அழிக்கும் காலம் அருகில் வந்துவிட்டதைத்தான் ஹாக்கிங்கின் கருத்து உணர்த்துகிறது.

-http://www.unmaionline.com/2010/september/16-31/page03.php