புதன், 29 செப்டம்பர், 2010

ஆசிரியர் பதில்கள்

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : மாநிலக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்தும்போதே, தான்தோன்றித்தனமாக மாநில உரிமைகளில் அடிக்கடி கை வைக்கும் காங்கிரஸ்கட்சி - மீண்டும் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட்டால்...?

- கு.நா. இராமண்ணா, சீர்காழி

பதில் : இனி, ஒற்றை ஆட்சி மத்தியில் நடைபெற மாநில அரசுகளும் மக்களும் மவுனம் காக்க மாட்டார்கள். கூட்டாட்சித் தத்துவம் மூலம் வலுப்பெறவே விரும்புவர் மாநிலத்தவர்கள்.


கேள்வி : ஆங்கிலேய அடக்குமுறைக் கலெக்டர் ஆஷ்துரையைச் சுட்ட துப்பாக்கிகூட பாரதிதாசன் அனுப்பிவைத்ததுதான் என்று தினமலர் செய்தி வெளியிட்டிருப்பது உண்மையா?

- தெ. மதியழகன், கணியூர்

பதில் : துப்பாக்கி யார் அனுப்பி வைத்தார் என்பது ஆதாரப்பூர்வமான தகவலா என்பது ஒருபுறமிருந்தாலும், அவர் ஏன் சுட்டார்? சனாதன தர்மத்தை வெள்ளைக்கார ஆட்சி கெடுத்தது என்பதற்குத்தானே! (பெ. சு. மணி தகவல் இது!)


கேள்வி : கடவுள் மறுப்பாளரான எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளில் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், மொட்டை அடித்தும் பிறந்த நாளைக் கொண்டாடி உள்ளதைப்பற்றி?

- வெங்கட. இராசா , ம.பொடையூர்

பதில் : அப்படி ஒரு நிர்ப்பந்தம் எதற்கோ புரியவில்லை. அவர் ஒரு நல்ல பகுத்தறிவாளர்தான்.


கேள்வி : விலைவாசி உயர்வுக்குத் தீர்வுதான் என்ன? மத்திய அரசும் மவுனம் சாதிப்பது ஏன்?

- கோவை குணாளன், மருதமலை

பதில் : தீர்வு அவ்வளவு எளிதல்ல; வாங்கும் சக்தி வளர்வதுதான் உண்மையான தீர்வாகும்.


கேள்வி : நாடாளுமன்ற உறுப்பினர்கள், 5 பங்கு சம்பளம் உயர்த்தித் தர வேண்டும் என்கிறார்களே, இது எந்த விதத்தில் நியாயம்! இவர்கள் அங்கு சென்றிருப்பது நாட்டுக்கு உழைக்கவா?

- தி.பொ.சண்முகம், திட்டக்குடி

பதில் : அண்மையில் நடந்த மிகவும் வேதனை தரத்தக்க செயல் இது!


கேள்வி : கிறிஸ்தவ மதம் மாறிய தலித்துகள், கிறிஸ்தவ மதத்தில் சமத்துவம் தமக்குக் கிடைக்கவில்லை என்பதால்தான், தம்மைத் தலித்துக் கிறிஸ்தவர் என்று கூறிக்கொண்டு, தமக்கும் தலித்துக்கான சலுகைகள் வேண்டும் என்று கேட்பது சரியா? மேற்கண்ட கோரிக்கையை, சில அரசியல் கட்சிகள் ஆதரிப்பது என்ன நியாயம்?

- அரவரசன், பல்லாவரம்

பதில் : மதம் மாறினாலும் அவர்கள் நிலை மாறவில்லையே! எனவே, கேட்பதில் தவறில்லை.


கேள்வி : மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும் என்று கம்யூனிஸ்டுகளும், பா.ம.க.வினரும் ஒருபக்கம் கூறிக் கொண்டு, மறுபுறம் டாஸ்மாக் ஊழியர்களுக்குச் சம்பளம் உயர்த்தி, வேலை நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் கூறுவது எப்படிச் சரியாகும்?

- கு.பழநி, புதுவண்ணை

பதில் : அதற்குப் பெயர்தான் அரசியல்-புரிகிறதா?


கேள்வி : நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்குநாள் பெருகிவரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 லிருந்து 62 ஆக உயர்த்தப்பட இருப்பதாகக் கூறும் பிராணப் முகர்ஜியின் எண்ணம் எதைக் காட்டுகிறது?

- கி.கோவிந்தன், தருமபுரி

பதில் : அவர் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை; புரிந்துகொள்ளவும் இல்லை என்பதைக் காட்டுகிறது.


கேள்வி : மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது என்ற பிரதமரின் கருத்தினை ஏற்க முடியுமா?

- கே. பிரியா, திருவள்ளூர்

பதில் : கொள்கை முடிவுகளில் உச்சநீதிமன்றம் தலையிடக்கூடாது என்பது சரியானதே! நிருவாகத்துறை, நீதித்துறை, சட்டத்துறை மூன்றும் ஒருங்கிணைந்து நலம் பயக்க வேண்டும்.


கேள்வி : உற்பத்திப் பற்றாக்குறை, தன்னிறைவற்ற தன்மை உள்ள இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளில் எதற்கெடுத்தாலும் வேலைநிறுத்தம் செய்வது சரியா? தொழிற்சங்கங்களின் போராட்டம் வேறு எந்த வகையில் அமையலாம்?

-கீ. திவ்யா, விருதுநகர்

பதில் : வேலை நிறுத்தங்களுக்குப் பதில் முத்தரப்பு விவாதம் தேவை. தீர்வு அதன் பிறகு வரவேண்டும்

- http://www.unmaionline.com/2010/september/16-31/page05.php