செவ்வாய், 27 ஜூலை, 2010

பெரியார்

நான் செய்து வந்த தொண்டும் செய்து வருகின்ற தொண்டும் நீங்கள் அறிந்ததேயாகும்.அத்தொண்டு யாருக்காக என்பதும், அதனால் நான் ஏதாவது நன்மை, சுயநலம் அடைந்தேனா என்பதும் உங்களுக்குத் தெரியும். எனது நலத்தை, செல்வத்தை, செல்வாக்கை பொதுநலத்தொண்டுக்குக் கொடுத்தேனா அல்லது எனது பொதுத் தொண்டால் எனது நலத்தை, செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டேனா என்பது உங்களுக்குத் தெரியும்!

இராஜாஜி அவர்களும், இரு கவர்னர்களும், இரு கவர்னர் ஜெனரல்களும் வேண்டியும், கேட்டுக் கொண்டும் மந்திரிப் பதவியை வெறுத்தவன் நான். தவிர, எந்தப்பதவியையும் நான் விரும்பியவன் அல்லன்.இன்னும் இனியும் நண்பர்களால், பெரியோர்களால் புகழுரை பெற்றதைத் தவிர யாராலும் ஒரு நலனும் பெற்றதில்லை; விரும்பியதில்லை.

எனக்குப் பொதுத் தொண்டு வரும்படி என்பது என் சொந்தக் காசில் பிரயாணம் செய்து 1930 இல் கூட்டமொன்றுக்கு 50 ரூபாய் வாங்கி, 1950 இல் 100 ரூபாய் வாங்கி 1960 இல் 150 ரூபாய் வாங்கி, 1970 இல் 200 ரூபாய் வாங்கினதுதான். மற்றும், மாநாடுகள் நடத்தியதில் சுமார் 1,00,000 ரூபாய் மீதமிருக்கும். மற்றபடி, எனக்கு இன்றுள்ள அவ்வளவும், மற்றும் இயக்கத்தின் பேரில் உள்ள சொத்துக்கள், செல்வங்கள் அவ்வளவும் என்னால் என் தகப்பனாரைக் கொண்டு செய்யப்பட்ட டிரஸ்ட் தர்ம சாசனம் ஆக்கப்பட்ட எங்கள் குடும்பச் சொத்தே அல்லாமல் பிறர் சொத்து, ஒரு காசளவும் இல்லை.அப்படி இருந்தாலும் நான் அவைகளில் இருந்து பொதுநலத்திற்கு என்று திருச்சியில் காலேஜுக்கு 5 இலட்சமும், திருச்சி குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு ஒரு இலட்சமும், ஈரோடு பொது ஆஸ்பத்திரிக்கு - குழந்தைகள் வார்டுக்கு ஒரு இலட்சமும், மற்றும் இந்த 50, 60 வருடகாலமாக 1000 ரூபாய், 2000 ரூபாய், 3000 ரூபாய், 10,000 ரூபாய் என்கிற கணக்கில் பொதுநலத்திற்கு (தர்மத்துக்கு) என்று கொடுத்துவந்தது 2,3 இலட்ச ரூபாய்க்கும் குறையாது.இயக்கத்திற்கு நான் வாங்கி இருக்கின்ற சொத்துக்கள் இன்று, 30,00,000 (முப்பது இலட்சம்) ரூபாய்க்கும் குறையாமல் பெறும். எங்கள் டிரஸ்ட் சொத்துக்கள் சுமார் 20,00,000 ரூபாய் 30,00,000 ரூபாய் பெறும்.
இவ்வளவும் இயக்கத்தின் பெயராலேயே இருக்கின்றன. இருந்தாலும், தலைவன் என்கிற முறையில் என் ஆதிக்கத்தில் தான் இருக்கின்றன. இதனால் இயக்கத்திற்கு இலாபம் என்னவென்றால் வருமானம் பெருகுகின்றது; சொத்து வளருகின்றது; அவ்வளவு தான். எனக்கென்ன பயன் என்றால் கவலை, தொல்லை அதிகமாக இருப்பதுதான். ரொக்கமும் பல இலட்சம் இருக்கின்றது.சர்க்கார் சட்டத்தால், இன்கம்டாக்ஸ் கொடுமையால் இவற்றில் எவ்வளவு குறைந்தாலும் குறையலாம்.

இனி எனது தொண்டினால் ஏற்பட்ட பலன் என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் ! மற்றும் எனது தொண்டில் எனக்கு உதவியாய் இருந்தவர்கள் பலர் - அவர்களால் கனவில் கூட நினைத்திருக்க முடியாத பதவியையும், அந்தஸ்தையும் செல்வாக்கையும் அடைந்தார்கள்; அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் கூட நான் யாரையும் ஒரு காசு அளவுகூடக் கேட்காமலும், எவரிடத்திலும் நானாகக் கைநீட்டாமலும் இயக்கத்துக்காக வருவாய் சம்பாதித்துக் கொண்டு தான் வருகிறேன்.

எந்த நிலையிலும் எனது நிலை ஒரு சிறிது கூடத் தாழாமல் ஏதோ சிறிதாவது வளர்ந்து கொண்டே தான் வருகிறது.நண்பர்களே! இவற்றையயல்லாம் ஏன் சொல்லுகின்றேன்? யாரிடத்திலும் எவ்வித உதவியையும் கேட்பதற்கல்ல. மற்ற எதற்கு? மன்னிப்பு கேட்பதற்கு என்ன மன்னிப்பு என்றால், நான் இனிச் சுற்றுப்பிரயாணப் பிரச்சாரத்திலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

சென்னையிலோ, திருச்சியிலோ வேறு தொல்லையற்ற இடத்திலோ இருந்து கொண்டு துண்டுப் பிரசுரம், வால் போஸ்டர், சிறு சித்திரப் புத்தகம் முதலியவை பிரசுரித்துக் கொண்டு இருக்கலாம்; அலையவேண்டாம் என்று கருதுகிறேன்.ஆகஸ்ட் முடிந்தால் 93 வயது முடிந்துவிட்டது; செப்டம்பர் பிறந்தால் 94 வயது ஆண்டு பிறக்கின்றது.

யார் தயவையும் விரும்பாமல், யார் விசயத்திலும் தயவு தாட்சண்யம் காட்டாமல் சுதந்திரமாய் இருந்து பார்க்கலாம் என்று கருதுகின்றேன்.நான் சென்னைக்கு வந்தால் “உண்மை” மாத இதழையும் சென்னைக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று கருதுகின்றேன். சென்னைக்கு வருவதில் வேறு பல சங்கடங்களும் இருக்கின்றன. திருச்சியில் பயிற்சிப் பள்ளிகள் இரண்டு இருக்கின்றன; பிரைமரிப் பள்ளி ஒன்று இருக்கின்றது; அநாதைப் பிள்ளைகள் விடுதி ஒன்று இருக்கின்றது; வரும் ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளி ஒன்று ஏற்படுத்த அனுமதி பெற்று நடத்தப்படப்போகின்றது. ஈரோட்டில் ஒன்று ஏற்படுத்த உத்தேசம். இவையயல்லாம் திருமதி. மணியம்மையார் முயற்சியில் தான் நடை பெறுகின்றன. 10, 12 ஏக்கர் தோட்டப்பண்ணை ஒன்றும் நடை பெறுகின்றது. பல ஆயிரக்கணக்கில் வாடகை வரும் பல கட்டிடங்களும் திருச்சியில் இருக்கின்றன. ஆகவே, மணியம்மை அவர்கள் திருச்சியில் இருக்க வேண்டி இருக்கிறது. நான் சென்னைக்கு வந்தால் மணியம்மையார் என்னைத் தனியாய் இருக்கச் சம்மதிக்கமாட்டார்கள்; அவர்கள் சென்னைக்கு வந்து விட்டால், திருச்சி நடப்புக்கள் பாதிக்கப்பட்டு விடும்.இது ஒரு சங்கடமான நிலைமை என்றாலும் ஏதாவது செய்தாக வேண்டியிருக்கிறது.எனது உடல்நிலை, மனநிலையைப் பொறுத்துத்தான் இந்தச் சிந்தனைகள் ஏற்பட்டன.

தமிழ்ப் படிப்புள்ள புலவர் ஒருவர் எனக்கு உதவிக்கு வேண்டியிருக்கிறது. பேச்சில் இருக்கின்றவைகளை எழுத்தில் புத்தகத்தில் ஏற்படுத்திவிட்டுப் போக வேண்டும் என்று கருதுகின்றேன். ஆகவே, தோழர்களே ! என்னைக் கூப்பிடாதீர்கள் ! கூப்பிட்டால் அது மாநாடாக இருக்க வேண்டும், பணம் ரூ.500 கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கின்றேன். மன்னியுங்கள்!

நாடு பூராவும் நல்ல பேச்சாளர்கள் இருக்கின்றார்கள். நான் எதையும் குறைவில் விட்டு விட்டுப் போகவில்லை. மக்கள் நல்ல உணர்ச்சி பெற்று இருக்கிறார்கள். ஆனால் காரியத்தில் இறங்க வில்லை. அதற்குத் துண்டுப் பிரசுரம் செய்யலாம் என்று இருக்கின்றேன். மற்றொரு முக்கிய விசயம்; நமக்கு இப்போது சினிமா ஒரு தொல்லையாக ஆகிவிட்டது. அதற்காக ஒரு சினிமா பகிஷ்கார மாநாடு போட்டு சினிமா பார்க்காதே என்று வேண்டுகோள் பிரச்சாரம் ஆரம்பிக்க வேண்டும்.

கோவில் பகிஸ்காரம் சாதித்து விட்டாயா என்ற கேட்பார்கள். அது எனக்கு அவமானம்தான். ஆனாலும், நான் கலைஞர் அவர்களுக்கு ஆட்பட்டதால் ஏற்பட்ட நிலை என்றாலும், கலைஞர் தடையை நீக்கும் போது ஆரம்பிப்பேன். ஆனால், சினிமா பகிஷ்காரத்திற்கு யாருக்கும் ஆட்பட மாட்டேன். அது அண்மையில் துவக்கப்படும். இவை பற்றிய திட்டங்களை அடுத்து வெளியிட இருக்கிறேன்.


---------------- தந்தை பெரியார் - “விடுதலை” - 19-07-1972

நன்றி:தமிழ் ஓவியா.(http://thamizhoviya.blogspot.com/2010/07/3_25.html)
பெரியார் சொத்து யாருக்கு

நான் பணம் சம்பாதிக்கின்றேன் தகாத வழிகளில் என்கின்றார்கள். நான் என்ன, இவர்கள் பணம் சம்பாதிப்பது போலவா பிள்ளைகுட்டிகளுக்கு என்று சம்பாதிக்கின்றேன்? இப்படிப்பட்ட விஷமப் பிரச்சாரங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 
  
பணம் எல்லாம் கழகத்துக்குத்தானே? 
 
நான் சம்பாதித்த பணத்தை எல்லாம் நானா எடுத்துக் கொள்ளுகிறேன்? எல்லாம் கழகத்துக்குத் தானே ஒப்படைத்துப் போட்டு எளிய வாழ்வு வாழ்கின்றேன்? கலியாணம் என்று கூப்பிட்டால் 150 கொடு என்று வாங்குகின்றேன். பொதுக்கூட்டம் என்று கூப்பிட்டால் 100; விருந்துக்குப் பணம் கொடு; கையெழுத்து, போட்டோ இதுகளுக்கும் பணம் கொடு என்று வாங்குகின்றேன். மாநாடு கூட்டினால் 1000, 2000 மிச்சம் வருகின்றாற்போல் செய்கின்றேன். இதுகள் எல்லாம் சேர்ந்தால் எங்கே போய் விடப்போகின்றது? இன்று கழகத்துக்கு உள்ள பணத்தில் பகுதிக்கு மேல் என்னுடைய சொந்தப்பணத்தைத்தான் சேர்த்து இருப்பேன்.  
 
சொத்துக்கள் வாங்கி சேர்க்கப்படுகிறது 
  
தோழர்களே! இந்த வருஷத்தில் திருச்சியில் கழகத்துக்கு 3 லட்சம் ரூபாய்க்கு சொத்துக்கள், கட்டிடங்கள் வாங்கப்பட்டுள்ளது. கட்டப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 50 ஏக்கரா நஞ்சை தஞ்சை மாவட்டத்தில் வாங்கப்பட்டு உள்ளது. மாதம் 1,200 ரூபாய் வாடகை வருகின்றாற்போல திருச்சியில் பெரிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. பள்ளிக்கூடம் சம்பந்தமாக ஆஸ்டல் கட்டிடங்களும் கட்டப்பட்டு உள்ளது. யார் திருடிக் கொண்டார்கள்? இந்த சுமார் 5, 6 ஆண்டில் மட்டும் கழகத்துக்கு 30, 40 சொத்துக்களுக்கு மேல் சேர்க்கப்பட்டு உள்ளது!
 
விஷமத்தனமான புகார்கள்!
  
பெண்டாட்டிக்குக் கொடுத்து விடுவேன் என்கின்றனர். எதற்காக கொடுக்கப் போகின்றேன். இந்தக் கழக சொத்து தவிர வேறு எனக்கு சொந்தத்தில் சொத்து கிடையாதா? நான் செத்தாலும் மாதம் ரூ.500, ரூ.1000 வருமானம் வரும்படியான சொத்து அந்த அம்மாளுக்கு இருக்குமே!
 
அடுத்து சம்பத்துக்குக் கொடுத்து விடப் போகின்றேன் என்று சொல்லித் திரிகின்றார்கள். அவன் முட்டாள்தனத்தினால் கேட்பார் பேச்சைக் கேட்டதனால் அவனுக்கு என் சொத்து கிடைக்க வழி இல்லாமற் போயிற்று. இல்லையானால் அவனுக்குத் தானே என் சொத்து சேர்ந்து இருக்கும்? நான் சம்பத்தை தத்து எடுத்துக் கொள்ளுவது என்று குடும்பத்தில் முடிவு செய்து அன்று பத்திரம் முதலியன வாங்கியது யாருக்குத் தெரியாது? இன்னும் அந்தப் பத்திரம் என்னிடத்திலேயே இருக்கின்றதே! தத்து செல்லும்படியாக சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று ரிஜிஸ்டிரார் சொன்னதனால் ரிஜிஸ்டர் ஆகவில்லை.
 
 சம்பத் நடவடிக்கையால் டிரஸ்ட் ஏற்படுத்தலானேன்
 
அவனும் சதிகாரர் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டு நமக்கு விரோதமாக நடக்க ஆரம்பித்ததன் காரணமாக நான் அந்த முயற்சியைக் கைவிட்டு டிரஸ்ட் ஏற்படுத்தி கழகத்துக்குச் சேரும்படி செய்துவிட்டேன்.
 
-----------------------தந்தை பெரியார் அவர்கள் திருநெல்வேலியில் 29.01.1963 அன்றும், பண்ருட்டியில் 13.02.1963 அன்றும் திராவிடர் கழகம் பற்றி, கழகத் தோழர்களுக்கும், பொது மக்களுக்கும் ஆற்றிய தெளிவுரையிலிருந்து ஒரு பகுதி
நன்றி: தமிழ் ஓவியா. (http://thamizhoviya.blogspot.com/2010/07/4.html)

சனி, 24 ஜூலை, 2010

இந்து வாரிசு உரிமை சட்டப்படி வாரிசு வருவார்கள் என்றா அய்யா சொன்னார்கள்?

தந்தை பெரியார் அவர்கள் தம் காலத்திலேயே காங்கிரஸின் ஒத்துழையாமைப் போராட்டத்தின்போது கொள்கைக்காக சொத்தினை இழந்தார் என்பது வரலாறு. இந்து என்னும் இழிவை சுமக்காதே என்று தம் வாழ்நாள்முழுவதும் போராடியவரை இந்து உரிமைச்சட்டம் என்பதின் பெயரால் வாரிசில்லா சொத்துக்களை அரசே எடுத்துக்கொள்ளவேண்டும் என்று நீண்டகாலமாக இயக்கத்தில் வழக்கறிஞராக இருந்ததாக சொல்லிக்கொண்டு இருப்பவர் கூறலாமா? சட்டத்தின் பெயரால் சூத்திரனாக இருக்கிறோமே என்று வெகுண்டு போராடிய தலைவரை சராசரி மனிதனைவிட கேவலப்படுத்தலாமா? கொள்கையை உணர்த்தவே காலம் முழுவதும் போராடியவரின் உடன் இருந்தேன் என்று கூறிக்கொண்டு இப்படி கூற எப்படி துணிவுவந்தது? இந்த நாட்டின் சுதந்திர நாளை துக்க நாள் என்று கூறிய கூற்று மறந்து விட்டதா? அதிகார வர்க்கம் பார்ப்பனர் பிடியிலிருந்து மாறிவிட்டதா? எப்படி வழக்கறிஞரின் கூற்றை எடுத்துக்கொள்வது?
1925- ல்தான் சுயமரியாதை இயக்கம் கண்டார் அய்யா. அதேபோல் RSS-அமைப்பும் 1925- ல்தான் தோற்றுவிக்கப்பட்டது. RSS பல கிளைகளாக விரவி பரவி நாட்டில் மதக்கலவரத்தை இன்றளவும் ஏற்படுத்தி குருதியை குடித்து கொண்டிருக்கிறது. விஸ்வ இந்து பரிஷத், பஜ்ராங்க்தல், இந்து முன்னணி, ராம்சேனா, இன்னும் எந்தெந்த பெயரிலோ பார்ப்பன நச்சு நாட்டில் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. தந்தை பெரியாரின் பெயரில் இயங்கும் எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும், கொள்கையை பரப்புவதில்தான் போட்டி போட்டு முன்னோடியாக இருக்க வேண்டுமே தவிர, எதிரியின் பக்கம் நீட்டவேண்டிய கூர்முனையை நம் பக்கமே திருப்பலாமா? சிந்திக்க வேண்டும். மதங்களின் பெயரால் மனித ரத்தங்களை குடிக்கும் ஆரியக்கூட்டத்திற்கு இடையே உள்ள ஒற்றுமை உணர்வு மனித நேயம் பேணுகிறோம் என்னும் நம்மவரிடையே இல்லையே? ஆன்மிகம், பக்தியின் பெயரால் கோடிகளைகொட்டி குவிக்கும் ஆசிரமங்களை நோக்கி பாயவேண்டிய எறிகணைகள் திசை மாறி திரும்பலாமா? ஹிந்துத்வா பெயரில் எத்தனை அறக்கட்டளைகள், எத்தனை ஹவாலாக்கள்? அறியாதவர்களா? அந்த பக்கம் கவனம் சென்றிருந்தால் பாராட்டலாம். ஆனால்அய்யாவால் அடையாளம் காட்டப்பட்டு, இன்றளவும் அறக்கட்டளையை பாதுகாப்பதுடன், முறையாக நடத்தி வருவதுடன், வளர்த்தும் வரக்கூடிய நிலை அல்லவா உள்ளது? அதையெல்லாம் எண்ணி பார்க்காமல், யார் யாரையோ திருப்தி படுத்திட, நம் கைகளால் நம் கண்களை குத்திக்கொள்வதா? ஏதோ ஒருசில காரணங்களுக்காக தலைமையிடம் மாறுபாடு கொண்டு பிரிந்தால், மீண்டும் சேர மாட்டீர்களா? கொள்கை மாறிவிட்டிருந்தால் சேர முடியாதுதான். அய்யாவுக்கு வாரிசு யார்? என்று அய்யாவைக்கேட்டபோது அய்யாவே சொன்னது மறந்து போனதா? இந்து வாரிசு உரிமை சட்டப்படி வாரிசு வருவார்கள் என்றா அய்யா சொன்னார்கள்? அய்யாவுடன் கடைசி வரை இருந்தேன் என்று கூறினால் போதுமா? அய்யா சொன்னதுபோல் வாரிசு என்பவர் யாராக இருக்க முடியும்? கொள்கைவழி நடப்பவர்தானே? கொள்கையில் மாறுபவர் தானாக விலகிவிடுவார்கள் என்பதை மறுக்கலாமா? துரோகிகள் என்று பெயர் வாங்குவதோடு , பார்ப்பனர்களுக்கும் இடம் கொடுக்கலாமா? எண்ணி பார்க்கவேண்டும் அருமை மானமிகு தோழர்கள். வேகத்துடன் விவேகமும் வேண்டும் அல்லவா?

செவ்வாய், 20 ஜூலை, 2010

விடுதலை

விடுதலை

வியாழன், 20 மே, 2010

தினமலரின் நிர்வாணக் குதியாட்டம்!

(இந்த இடுகையை முழுதாகப் படிக்கவும், இணைக்கப்பட்டுள்ள காணொளியைக் காணவும் மேலே உள்ள தலைப்பை ஒரு முறை சொடுக்கவும்.)

"மூடநம்பிக்கைகளை நாங்கள் எதிர்க்கிறோம்."
"மத நம்பிக்கைகள் என்பது வேறு; மூட நம்பிக்கைகள் என்பது வேறு"
கடவுள், மத மறுப்பை, மூடநம்பிக்கைகளை தோலுரிக்கும் போது இப்படியெல்லாம் பலர் உதார் விடுவதைப் பார்த்திருப்பீர்கள்.

ஆனால், மூடநம்பிக்கைகளும் மத நம்பிக்கைகளும் வேறுவேறானவை அல்ல.. மூடநம்பிக்கைகள் தான் மதத்திற்கான வருவாய், கூட்டம் சேர்க்கும் காரணிகள் என்பது நாம் அறிந்ததே!

அதற்கான இன்னொரு சாட்சி - தினமலரின் இந்த வீடியோ செய்திக் காட்சி!

சென்னை கோட்டுர்புரத்தில் உள்ள அரசு நிறுவனமான "பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம்" * குழந்தைகளுக்கான மூன்று நாள் அறிவியல் முகாம் ஒன்றை நடத்தியிருகிறது. இதில் பல்வேறு வகுப்புகளின் ஊடாக 'இந்திய பகுத்தறிவாளர் இயக்கங்களின் கூட்டமைப்பான FIRA' -வின் செயலாளரும், நாடறிந்த மூடநம்பிக்கை எதிர்ப்பாளரும், 'மந்திரமா? தந்திரமா?' செயல் விளக்க வித்தகரும், பெங்களூருவைச் சேர்ந்த பேராசிரியருமான நரேந்திர நாயக் அவர்களின் அறிவியல் விளக்க நிகழ்ச்சியும், பயிற்சியும் நடைபெற்றுள்ளது.

ஒரு நாள் அவர் எடுத்த வகுப்பிலேயே, பகுத்தறிவை - கேள்வி கேட்கும் ஆர்வத்தை குழந்தைகள் மத்தியில் அறிமுகப்படுத்தியதுமே அவர்களின் சிந்தனைப் போக்கில் மாற்றம் தென்படுகிறது. தான் கொண்ட மூடக் கருத்துகளைப் பிடித்துக் கொண்டு தொங்கும் வயதானவர்களை விட, புதிதாக எதையும் கற்கும் குழந்தைகளிடம் பகுத்தறியும் அறிவியல் சிந்தனையை அறிமுகப்படுத்தினாலே போதும் எது சரியென்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். இதற்கு சரியான உதாரணமாகத் தான் இந்நிகழ்வை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், இப்படியெல்ல்லாம் அறிவு வந்துவிட்டால் ஆகுமோ பார்ப்பனக் கூட்டத்துக்கு... ? பாருங்கள்.. சிண்டைப் பிடித்துக் கொண்டு தினமலர் நிர்வாணக் குதியாட்டம் போடுவதை!
'பிஞ்சு மனத்தில் நஞ்சை விதைக்கிறார்களாம்',
'பிஞ்சுகள் பேசிய விதம் சர்ச்சையைக் கிளப்பிய'தாம்,
'இந்து மதத்தையே விமர்சிக்கும் அளவிற்கு' பிஞ்சுகள் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம்..
பொறுக்க முடியவில்லை பூணூல் கூட்டத்துக்கு!

அந்தக் குழந்தைகள் பேசுவதைக் கேட்கும்போது நமக்கு எல்லையில்லா மகிழ்ச்சி! தினமலர்க் கூட்டத்துக்கோ அது அதிர்ச்சி! அடிப்பீடத்துக்கே ஆப்பு என்றால் அலறித்தானே துடிக்கும் ஆரியக் கூட்டம். பெற்றோர்கள் எதிர்ப்பென்று பசப்புகிறது. பாவம் ஒரு குழந்தையின் பெற்றோரிடம் கூட எதிர்ப்பைப் பதிவு செய்ய முடியவில்லை போலும்! தினமலரின் குரல் மட்டுமே அவலமாய் ஒலிக்கிறது! நமக்கு சிரிப்புத் தான் வருகிறது.

நீங்களும் கேளுங்கள் அந்தப் புலம்பலை! இனியாவது தினமலருக்கு சப்பைக்கட்டு கட்டும் கூட்டத்தார் புரிந்துகொள்வார்களா? இந்தக் கூட்டம் தான் குழந்தைகளுக்கென "சிறுவர் மலர்" போடுகிறதாம். இவர்கள் வளர்க்கும் சிந்தனை எப்படி இருக்கும் என்பதற்கு இதுவொன்றே எடுத்துக்காட்டு அல்லவா? தினமலரின் வயிற்றெரிச்சல் காட்சியைப் பார்த்துச் சிரியுங்கள்!

*குறிப்பு: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் கீழ் சென்னை கோட்டுர்புரத்தில் இயங்கும் நிறுவனத்தின் பெயர் "பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம்" என்பதாகும். (திருச்சியில் அண்ணா பெயரில் இதே போன்ற மையம் உள்ளது.) அதில் உள்ள ஒரு பகுதியே பிர்லா கோளரங்கம் எனப்படும் வான்காட்சியகம். தினமலர் காட்டும் காணொளியில் கூட "பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம்" என்ற பெயர்ப்பலகைதான் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் பெரியார் பெயரைச் சொல்லத்தான் ஆரிய நாக்குக் கூசுமே! ஈ.வெ.ரா என்றுதான் அந்து போன மணிக் கூட்டம் எழுதும். அதனால் தான் இந்த இருட்டடிப்பு! பிர்லா கோளரங்கத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமாம்!
இது தினமலர் தான் என்றில்லை தோழர்களே! சன் டிவி கும்பலும் இப்படித் தான் சொல்லி வந்தது. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் பெயரை போடும் போதும் பிர்லா கோளரங்கம் என்றுதான் போட்டு வந்தது; திரு. அய்யம் பெருமாள்- பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநரே அன்றி பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் அல்ல. நமது எதிர்ப்பைப் பதிவு செய்ததும் இப்போது அந்நிலை மாறியிருக்கிறது. ஆனால் தினமலர் திருந்துமோ?
நன்றி: தினமலரில் வந்த இச்செய்தியை எமக்கு அறியத்தந்த தம்பி சிறீதருக்கு! அதன் பின்னர் தான் இதுபற்றி பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் அவர்களுக்கும், பின்னர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கும் தகவல் அளித்தோம்.
ஆனால் அதன் முன்னரே தகவல் அறிந்திருந்த ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேராசிரியர் நரேந்திர நாயக் அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக் கோரி அதற்கான பணிகளை முடுக்கியிருந்தார். இது தொடர்பான தமிழர் தலைவரின் அறிக்கை இன்றைய விடுதலையில்!


nandri:
http://princenrsama.blogspot.com/2010/05/blog-post_2863.html

வியாழன், 18 பிப்ரவரி, 2010

பெரியாரை மறப்போமா?

னிதராகப் பிறந்தோம்! ஆம் உண்மை!
ஆறறிவு உண்டென்று சொன்னார்கள்
ஆனால் பகுத்தறிவை இழந்தது தான் கொடுமை
ஜாதியென்றான் மதமென்றான் நம்பி
சாத்திரத்தில் அறிவிழந்தோம் உண்மை!
மூத்திரத்தைப் பசு மூத்திரத்தைப்
புனிதமென்றான் பார்ப்பான்!

TPO1224.jpg

தந்தை பெரியார் (செப் 17, 1879-டிசம்பர் 24, 1973)

ஆத்திரந்தான் கொள்ளாமல்
அறிவிழந்தோம் பகுத்தறிவிழந்தோம் கொடுமை!
படித்தவரும் பண்டிதரும் அறிவிழந்தார்
படிக்காத மேதையவர் வந்தார்
சுயமரியாதை வேண்டுமென்றார்
கல்லைத் தான் காட்டுகின்றார்
கடவுளெங்கே? கற்பனைதான்!
மனிதனாக வாழ்ந்துவிடு
சிந்தித்து செயல் படுவாய்
நரகமில்லை மோட்சமில்லை
நம்பாதே ஏமாற்று வேலைகளை
புரியாத வார்த்தையிலே
தெரியாத கடவுளுக்கு
பூசை என்ன காசெதற்கு?
புரிந்து கொண்டோம் தெளிவு பெற்றோம்
தன்மானச் சிங்கத்தின் கர்ச்சனையில்
நம் மானம் மீட்டெடுத்தோம்
மனிதராக வாழ்வு பெற்றோம்
மறப்போமா பெரியாரை?

DRIO1224.jpg

- சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன்

ஞாயிறு, 15 நவம்பர், 2009

periyar-Unesco


புதன், 24 ஜூன், 2009

Thanthai Periyar

Periyar the Prophet of the new Age

The socrates of South East Asia
Father of the social reform movement
and arch enemy of ignorance;
Superstitons; meaningless customs and base manners.

- Unesco

Thanthai Periyar E.V.Ramasamy
(17.9.1879-24.12.1973)

வியாழன், 18 ஜூன், 2009

அவர் சொன்னார், இவர் சொன்னார்...

அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று ஏற்காதே என்று பகுத்தறிவு சுடரை ஏற்றியவர். எவரையும் தன்னுடைய அறிவுக்கு வேலை கொடுத்து சுயமாக சிந்திக்க சொன்னவர். தந்தை பெரியாரை ஆராய்வது என்பது கூட அவர் பணிக்கு கிடைத்த வெற்றி என்றாலும், தந்தை பெரியார் கூறியது போல் நன்றி என்பது செய்பவர் எதிர்பார்ப்பது இல்லை. பெறுபவர் செலுத்த வேண்டியது ஆகும். இன்றும் தந்தை பெரியாரின் தாக்கங்கள் என்பது பார்ப்பனர்களையும்,  பார்ப்பன அடிவருடிகளையும் தாக்குகிறது. எனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்பவருக்கு அய்யாவே சொல்கிறார், வேறு எவரும் இப்பணியை செய்ய முன்வராததால் என் மேல் நானே போட்டுக்கொண்டு செய்கிறேன் என்கிறார். பகுத்தறிவு என்பது இனம், மொழி என எல்லாவற்றையும் தாண்டியதே. மனிதநேயம் என்பதுதான் அடிப்படை என்பதால், மதம், ஜாதி, இதற்கெல்லாம் காரணம் கடவுள் என்பதால் அதையும் அழித்து ஒழிப்பேன் என்று வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றியவரைப்பற்றி அவதூறு பரப்புவது என்பது பிற்போக்குதனங்களை கட்டி காப்பவர்கள் என்று அடையாளம் காண்போம்.

வெள்ளி, 5 ஜூன், 2009

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!!

யாதும் ஊரே!
யாவரும் கேளிர்!!
என்றோம்,
லெமுரியாவிலிருந்து,
சிந்துவெளி நாகரிகத்திலிருந்து,
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்தக்குடி
தமிழ்க்குடி என்றெல்லாம்
பழம்பெருமை பேசுகிறோம்.
மறு கன்னத்தை
காட்ட சொன்னவர்கள்தான்
சிலுவைப்போரை நடத்தினார்கள்.

உலகப்போருக்கான ஒத்திகையா?
என்று எண்ணும் வகையில்
நவீன தொழில்நுட்ப
ஆயுதங்களுடன்
சொந்த மண்ணில்
பீரங்கி தாக்குதல்,
செல் வீச்சு,
கொத்து குண்டுகள்,
வான்வெளி தாக்குதல்,
பாஸ்பரஸ் குண்டு வீச்சுக்கள்
என்றெல்லாம் தமிழ் இனத்தை
பூண்டோடு அழித்தொழிக்க
சிங்கள இன வெறிக்கூட்டம்
ஆட்டம் போட்டாலும்,
புவி சார்ந்த சர்வாதிக்க போட்டி என்று
உளுத்துப்போனவற்றை பிதற்றி
மனித நேயத்தை தொலைத்து விட்டது.
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்பது பொய்யானதா?

புத்தம் போதித்ததுதான் என்னவென்று
வரும் தலைமுறை கேட்டால்
செம்மணியை சொல்வதா,
செஞ்சோலையை சொல்வதா,
தமிழ் ஈழத்தின்
ஒவ்வொரு பகுதியும்
தாக்கப் படும்போதுதான்
உலகத் தமிழர்களுக்கு
தமிழ் ஈழத்தின் வரை படம்
மனக்கண்ணில் பதிந்தது.
தாக்கப்பட்டப் பகுதிகள்
அத்துணையும்
தமிழனுக்கு சொந்தமானது
என்று சிங்களவனே
உலகோருக்கு
சொல்லி விட்டான்.

போர் இன்னும் ஓயவில்லை.
ஆயுதம் தாங்கிய போராட்டத்தை
ஒடுக்கிவிட்டதாக எக்காளம் இடுகிறதா சிங்களம்?
அச்சத்தின் உச்சியில் நின்று
உண்மைகளை மறைக்க முயன்று தோற்கிறதா?
தமிழர் நாம் ஒன்றுபட்ட உணர்வுடன்
உரிமையை மீட்டிட
ஒன்றுபட்டு தொடர்ந்து போராடும் தருணம் இது.
எல்லா வகையிலும் உலகின் கவனத்தை ஈர்க்கும்
போராட்டம் தொடரவேண்டும்.

இழப்புகள் ஈடு செய்ய இயலாதவை.
இமைப்பொழுதும் மறக்க இயலாதவை.
விதைக்கப்பட்டவை வீர விதைகள்.
தமிழர் நம் நெஞ்சில் உரமானவை.