செவ்வாய், 27 ஜூலை, 2010

பெரியார் சொத்து யாருக்கு

நான் பணம் சம்பாதிக்கின்றேன் தகாத வழிகளில் என்கின்றார்கள். நான் என்ன, இவர்கள் பணம் சம்பாதிப்பது போலவா பிள்ளைகுட்டிகளுக்கு என்று சம்பாதிக்கின்றேன்? இப்படிப்பட்ட விஷமப் பிரச்சாரங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 
  
பணம் எல்லாம் கழகத்துக்குத்தானே? 
 
நான் சம்பாதித்த பணத்தை எல்லாம் நானா எடுத்துக் கொள்ளுகிறேன்? எல்லாம் கழகத்துக்குத் தானே ஒப்படைத்துப் போட்டு எளிய வாழ்வு வாழ்கின்றேன்? கலியாணம் என்று கூப்பிட்டால் 150 கொடு என்று வாங்குகின்றேன். பொதுக்கூட்டம் என்று கூப்பிட்டால் 100; விருந்துக்குப் பணம் கொடு; கையெழுத்து, போட்டோ இதுகளுக்கும் பணம் கொடு என்று வாங்குகின்றேன். மாநாடு கூட்டினால் 1000, 2000 மிச்சம் வருகின்றாற்போல் செய்கின்றேன். இதுகள் எல்லாம் சேர்ந்தால் எங்கே போய் விடப்போகின்றது? இன்று கழகத்துக்கு உள்ள பணத்தில் பகுதிக்கு மேல் என்னுடைய சொந்தப்பணத்தைத்தான் சேர்த்து இருப்பேன்.  
 
சொத்துக்கள் வாங்கி சேர்க்கப்படுகிறது 
  
தோழர்களே! இந்த வருஷத்தில் திருச்சியில் கழகத்துக்கு 3 லட்சம் ரூபாய்க்கு சொத்துக்கள், கட்டிடங்கள் வாங்கப்பட்டுள்ளது. கட்டப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 50 ஏக்கரா நஞ்சை தஞ்சை மாவட்டத்தில் வாங்கப்பட்டு உள்ளது. மாதம் 1,200 ரூபாய் வாடகை வருகின்றாற்போல திருச்சியில் பெரிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. பள்ளிக்கூடம் சம்பந்தமாக ஆஸ்டல் கட்டிடங்களும் கட்டப்பட்டு உள்ளது. யார் திருடிக் கொண்டார்கள்? இந்த சுமார் 5, 6 ஆண்டில் மட்டும் கழகத்துக்கு 30, 40 சொத்துக்களுக்கு மேல் சேர்க்கப்பட்டு உள்ளது!
 
விஷமத்தனமான புகார்கள்!
  
பெண்டாட்டிக்குக் கொடுத்து விடுவேன் என்கின்றனர். எதற்காக கொடுக்கப் போகின்றேன். இந்தக் கழக சொத்து தவிர வேறு எனக்கு சொந்தத்தில் சொத்து கிடையாதா? நான் செத்தாலும் மாதம் ரூ.500, ரூ.1000 வருமானம் வரும்படியான சொத்து அந்த அம்மாளுக்கு இருக்குமே!
 
அடுத்து சம்பத்துக்குக் கொடுத்து விடப் போகின்றேன் என்று சொல்லித் திரிகின்றார்கள். அவன் முட்டாள்தனத்தினால் கேட்பார் பேச்சைக் கேட்டதனால் அவனுக்கு என் சொத்து கிடைக்க வழி இல்லாமற் போயிற்று. இல்லையானால் அவனுக்குத் தானே என் சொத்து சேர்ந்து இருக்கும்? நான் சம்பத்தை தத்து எடுத்துக் கொள்ளுவது என்று குடும்பத்தில் முடிவு செய்து அன்று பத்திரம் முதலியன வாங்கியது யாருக்குத் தெரியாது? இன்னும் அந்தப் பத்திரம் என்னிடத்திலேயே இருக்கின்றதே! தத்து செல்லும்படியாக சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று ரிஜிஸ்டிரார் சொன்னதனால் ரிஜிஸ்டர் ஆகவில்லை.
 
 சம்பத் நடவடிக்கையால் டிரஸ்ட் ஏற்படுத்தலானேன்
 
அவனும் சதிகாரர் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டு நமக்கு விரோதமாக நடக்க ஆரம்பித்ததன் காரணமாக நான் அந்த முயற்சியைக் கைவிட்டு டிரஸ்ட் ஏற்படுத்தி கழகத்துக்குச் சேரும்படி செய்துவிட்டேன்.
 
-----------------------தந்தை பெரியார் அவர்கள் திருநெல்வேலியில் 29.01.1963 அன்றும், பண்ருட்டியில் 13.02.1963 அன்றும் திராவிடர் கழகம் பற்றி, கழகத் தோழர்களுக்கும், பொது மக்களுக்கும் ஆற்றிய தெளிவுரையிலிருந்து ஒரு பகுதி
நன்றி: தமிழ் ஓவியா. (http://thamizhoviya.blogspot.com/2010/07/4.html)