வெள்ளி, 5 ஜூன், 2009

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!!

யாதும் ஊரே!
யாவரும் கேளிர்!!
என்றோம்,
லெமுரியாவிலிருந்து,
சிந்துவெளி நாகரிகத்திலிருந்து,
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்தக்குடி
தமிழ்க்குடி என்றெல்லாம்
பழம்பெருமை பேசுகிறோம்.
மறு கன்னத்தை
காட்ட சொன்னவர்கள்தான்
சிலுவைப்போரை நடத்தினார்கள்.

உலகப்போருக்கான ஒத்திகையா?
என்று எண்ணும் வகையில்
நவீன தொழில்நுட்ப
ஆயுதங்களுடன்
சொந்த மண்ணில்
பீரங்கி தாக்குதல்,
செல் வீச்சு,
கொத்து குண்டுகள்,
வான்வெளி தாக்குதல்,
பாஸ்பரஸ் குண்டு வீச்சுக்கள்
என்றெல்லாம் தமிழ் இனத்தை
பூண்டோடு அழித்தொழிக்க
சிங்கள இன வெறிக்கூட்டம்
ஆட்டம் போட்டாலும்,
புவி சார்ந்த சர்வாதிக்க போட்டி என்று
உளுத்துப்போனவற்றை பிதற்றி
மனித நேயத்தை தொலைத்து விட்டது.
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்பது பொய்யானதா?

புத்தம் போதித்ததுதான் என்னவென்று
வரும் தலைமுறை கேட்டால்
செம்மணியை சொல்வதா,
செஞ்சோலையை சொல்வதா,
தமிழ் ஈழத்தின்
ஒவ்வொரு பகுதியும்
தாக்கப் படும்போதுதான்
உலகத் தமிழர்களுக்கு
தமிழ் ஈழத்தின் வரை படம்
மனக்கண்ணில் பதிந்தது.
தாக்கப்பட்டப் பகுதிகள்
அத்துணையும்
தமிழனுக்கு சொந்தமானது
என்று சிங்களவனே
உலகோருக்கு
சொல்லி விட்டான்.

போர் இன்னும் ஓயவில்லை.
ஆயுதம் தாங்கிய போராட்டத்தை
ஒடுக்கிவிட்டதாக எக்காளம் இடுகிறதா சிங்களம்?
அச்சத்தின் உச்சியில் நின்று
உண்மைகளை மறைக்க முயன்று தோற்கிறதா?
தமிழர் நாம் ஒன்றுபட்ட உணர்வுடன்
உரிமையை மீட்டிட
ஒன்றுபட்டு தொடர்ந்து போராடும் தருணம் இது.
எல்லா வகையிலும் உலகின் கவனத்தை ஈர்க்கும்
போராட்டம் தொடரவேண்டும்.

இழப்புகள் ஈடு செய்ய இயலாதவை.
இமைப்பொழுதும் மறக்க இயலாதவை.
விதைக்கப்பட்டவை வீர விதைகள்.
தமிழர் நம் நெஞ்சில் உரமானவை.