சனி, 24 ஜூலை, 2010

இந்து வாரிசு உரிமை சட்டப்படி வாரிசு வருவார்கள் என்றா அய்யா சொன்னார்கள்?

தந்தை பெரியார் அவர்கள் தம் காலத்திலேயே காங்கிரஸின் ஒத்துழையாமைப் போராட்டத்தின்போது கொள்கைக்காக சொத்தினை இழந்தார் என்பது வரலாறு. இந்து என்னும் இழிவை சுமக்காதே என்று தம் வாழ்நாள்முழுவதும் போராடியவரை இந்து உரிமைச்சட்டம் என்பதின் பெயரால் வாரிசில்லா சொத்துக்களை அரசே எடுத்துக்கொள்ளவேண்டும் என்று நீண்டகாலமாக இயக்கத்தில் வழக்கறிஞராக இருந்ததாக சொல்லிக்கொண்டு இருப்பவர் கூறலாமா? சட்டத்தின் பெயரால் சூத்திரனாக இருக்கிறோமே என்று வெகுண்டு போராடிய தலைவரை சராசரி மனிதனைவிட கேவலப்படுத்தலாமா? கொள்கையை உணர்த்தவே காலம் முழுவதும் போராடியவரின் உடன் இருந்தேன் என்று கூறிக்கொண்டு இப்படி கூற எப்படி துணிவுவந்தது? இந்த நாட்டின் சுதந்திர நாளை துக்க நாள் என்று கூறிய கூற்று மறந்து விட்டதா? அதிகார வர்க்கம் பார்ப்பனர் பிடியிலிருந்து மாறிவிட்டதா? எப்படி வழக்கறிஞரின் கூற்றை எடுத்துக்கொள்வது?
1925- ல்தான் சுயமரியாதை இயக்கம் கண்டார் அய்யா. அதேபோல் RSS-அமைப்பும் 1925- ல்தான் தோற்றுவிக்கப்பட்டது. RSS பல கிளைகளாக விரவி பரவி நாட்டில் மதக்கலவரத்தை இன்றளவும் ஏற்படுத்தி குருதியை குடித்து கொண்டிருக்கிறது. விஸ்வ இந்து பரிஷத், பஜ்ராங்க்தல், இந்து முன்னணி, ராம்சேனா, இன்னும் எந்தெந்த பெயரிலோ பார்ப்பன நச்சு நாட்டில் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. தந்தை பெரியாரின் பெயரில் இயங்கும் எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும், கொள்கையை பரப்புவதில்தான் போட்டி போட்டு முன்னோடியாக இருக்க வேண்டுமே தவிர, எதிரியின் பக்கம் நீட்டவேண்டிய கூர்முனையை நம் பக்கமே திருப்பலாமா? சிந்திக்க வேண்டும். மதங்களின் பெயரால் மனித ரத்தங்களை குடிக்கும் ஆரியக்கூட்டத்திற்கு இடையே உள்ள ஒற்றுமை உணர்வு மனித நேயம் பேணுகிறோம் என்னும் நம்மவரிடையே இல்லையே? ஆன்மிகம், பக்தியின் பெயரால் கோடிகளைகொட்டி குவிக்கும் ஆசிரமங்களை நோக்கி பாயவேண்டிய எறிகணைகள் திசை மாறி திரும்பலாமா? ஹிந்துத்வா பெயரில் எத்தனை அறக்கட்டளைகள், எத்தனை ஹவாலாக்கள்? அறியாதவர்களா? அந்த பக்கம் கவனம் சென்றிருந்தால் பாராட்டலாம். ஆனால்அய்யாவால் அடையாளம் காட்டப்பட்டு, இன்றளவும் அறக்கட்டளையை பாதுகாப்பதுடன், முறையாக நடத்தி வருவதுடன், வளர்த்தும் வரக்கூடிய நிலை அல்லவா உள்ளது? அதையெல்லாம் எண்ணி பார்க்காமல், யார் யாரையோ திருப்தி படுத்திட, நம் கைகளால் நம் கண்களை குத்திக்கொள்வதா? ஏதோ ஒருசில காரணங்களுக்காக தலைமையிடம் மாறுபாடு கொண்டு பிரிந்தால், மீண்டும் சேர மாட்டீர்களா? கொள்கை மாறிவிட்டிருந்தால் சேர முடியாதுதான். அய்யாவுக்கு வாரிசு யார்? என்று அய்யாவைக்கேட்டபோது அய்யாவே சொன்னது மறந்து போனதா? இந்து வாரிசு உரிமை சட்டப்படி வாரிசு வருவார்கள் என்றா அய்யா சொன்னார்கள்? அய்யாவுடன் கடைசி வரை இருந்தேன் என்று கூறினால் போதுமா? அய்யா சொன்னதுபோல் வாரிசு என்பவர் யாராக இருக்க முடியும்? கொள்கைவழி நடப்பவர்தானே? கொள்கையில் மாறுபவர் தானாக விலகிவிடுவார்கள் என்பதை மறுக்கலாமா? துரோகிகள் என்று பெயர் வாங்குவதோடு , பார்ப்பனர்களுக்கும் இடம் கொடுக்கலாமா? எண்ணி பார்க்கவேண்டும் அருமை மானமிகு தோழர்கள். வேகத்துடன் விவேகமும் வேண்டும் அல்லவா?