செவ்வாய், 25 ஜனவரி, 2011

ஞானசூரியன் -30

மீன், மான், ஆடு, குருவி, வெள்ளாடு, ப்ருஷத் (ஒருவகை மான்), கிருஷ்ண மிருகத்தி, வெள்ளை யாட்டின் கன்று, குரு (ஒரு வகை மான்), பன்றி, முயல் இவைகளின் மாமிசத்தினால் மேற்குறித்த ஒரு வருடத்தோடு முறையே ஒவ்வொரு மாத காலம் அதிகமாகப் பிதிர்கள் திருப்தியடைகின்றனர்.

பிதிர்களின் அதிக மகிழ்ச்சிக்கு ஏதுவான சில உணவுப் பொருட்கள் வருமாறு:
கட்காமிஷம் மஹாசல்கம்

மது முன்யன்னமேவச:
லோஹாமிஷம் காலசாகம்
மாம்ஸம் வார்த்ராணஸஸ்யச
பொருள்: காண்டாமிருகம், மகாசல்கம் என்றும் மீன் மாமிசங்களும், தேன், செந்நெல் இவையும், செம்மறியாடு, முதிர்ந்த வெள்ளாடு இவைகளின் இறைச்சியும் பிதிர்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக்கூடியவை.
காலசாகம் மஹாசல்கா:
கட்கலோக மிஷன்மது;
ஆனந்த்யாயைவ கல்பந்தே
முன்யன்னானிச ஸர்வச

பொருள்: வாளை முதலிய மீன்களும், காண்டாமிருகம், சிவந்த நிறமுடைய ஆடு இவைகளின் இறைச்சியும், செந்நெல் முதலிய ரிஷிகளின் ஆகாரமும் பிதிர்களுக்குக் திருப்தியை உண்டு பண்ணத்தக்கன. வேதத்திலும்,
ஏதத்வை பரமமன்னாத்யம் யன்மாம்ஸம்

இவை முதலிய வாக்கியங்கள் காணப்படுகின்றன.

மாம்ஸாத மாம்ஸம் மாம்ஸேன ஸம்ப்ருதத்வாத் விசேஷத

பொருள்: மாமிசம் தின்கிற பிராணிகளின் மாமிசம் மாமிசத்தினாலேயே வளர்க்கப்படுவதால், அவசியம் தின்னத்தக்கது என்பது ஆயுர்வேத வைத்தியர்களின் கூற்று. இதை ஸ்மிருதிகளும் அங்கீகரிக்கின்றன போலும்.

இவ்விதமாக இவர்களின் தேவதைகளும் தங்கள் உணவுக்காகவே நாள்தோறும் எண்ணிறந்த பலவகைப்பட்ட உயிர்களைக் கொன்று கொண்டிருக்கிற காலத்தில், அஹிம்சை, கொல்லாமை விரதத்தின்கருத்து எங்ஙனம் இவர்களின் மனதிற்பதியும்? இதனால் அஹிம்ஸா பரமோ தர்ம என்னும் வாக்கியமென்றும் இந்து சமயத்தைக் கொலைச் சமயமென்றம் நன்றாய் அறிந்து, அதனின்றும் விலகியவர்களே இவ்விரதத்தை அனுஷ்டிக்க அதிகாரிகள் என்பதும்தான் இத்திருமந்திரத்தை உபதேசித்த புத்தபகவானின் கருத்தென்பதை நன்றாக அறியவேண்டும்.1

ஆபிசார கருமத்தை (சூனியம் வைத்துப் பகைவனைக் கொல்லுதல்) கூடத் தருமமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

ச்யேனேனாபிசான் யஜேத
பகைவனைக் கொல்ல விரும்பு வோன் சியேன யாகத்தால் ஆபி சாரம் செய்யக் கடவன்.
இப்பெயர் வந்த தன் காரணமும், இதன் பயனும்
யதாவை ச்யேனோ
நிபத்யாதத்தே ததாயம்
த்விஷந்தம் ப்ராத்ருவ்யம்
நிபத்யாதத்தே ததாயம்
த்விஷந்தம் ப்ராத்ருவ்யம்
நிபத்யாதத்தே

பொருள்: பருந்தானது கோழி முதலிய ஏழைப் பிராணிகளைத் தூக்கிச் செல்வது போல் இந்த யாகமும் பகைவனை ஒழித்துவிடும் (மரணத்திற்குத் தூக்கிக் கொண்டு போகும்)

1.இக்காலத்தில் பவுத்தர்கள் மாமிசம் சாப்பிடுவதேன் என்ற கேள்விக்கு இடமுண்டு. புத்தர்களை இந்திய நாட்டினின்று துரத்தியடித்த காலத்தில் முறையாகப் புத்த மதத்தைப் பரப்ப முடியாமல் வந்ததுடன், நல்லபழக்கம் சற்றேனும் அக்காலத்துச் சைனா, பார்மா, சிலோன் முதலிய நாட்டில் கிடையாது.

அவர்கள் கடைசியாகப் புத்தரை ஒத்துக்கொண்டு தங்களது முன் பழக்கங்களை நடத்தி வந்தார்கள். இனி இந்திய நாட்டார் முன்போலவே சென்று சாம்மியவாதம் உபதேசிக்கும்போது அத்தகைய தீய ஒழுக்கங்களை அவர்களிடத்திலிருந்து போக்கமுடியும்.

இதற்கு எதிர்மறையாகப் புத்த பகவான் திருவாய் மலர்ந்தருளிய தருமபதம் என்னும் நூலின்கண் ஒரு வாக்கியம் இருப்பது வருமாறு:-

நஹிவேரேன வேரானி
சம்மந்தீஹ குதாசன!
அவேரேனஹி ஸம்மந்தி
ஏஸதம்மோ ஸனந்தனோ (தருமபதம்)

பொருள்: பகையைப் பகையினால் வெல்ல முடியாது; 1நட்பினாலேயே வெல்ல முடியும். இதுதான் என்றும் நிலைத்திருக்கிற தருமம்.

இவை முதலிய வாக்கியங்களால் புத்த பகவானது தருமோபதேசங் களுக்கும், பார்ப்பனரின் தரும நூலிற்கும், இரவிற்கும், பகலுக்கும் இருப்பதைப் போன்ற வேற்றுமை இருப்பதாகப் பெறப்பட்டது. இந்தச் சியேன யாகம் தருமமா? அதருமமா? என்று சந்தேகித்த நவீன மீமாம்ஸகனாகிய கண்டதேவன் வேத வாக்கியமானதால், தருமந்தான் என்று முடிவில் உறுதிப்படுத்துகிறார்.

- http://viduthalai.in/new/page-3/2022.html